வாழ்வையே மாற்றிய இறைவாக்கு:
இங்கிலாந்தில் வைர வியாபாரி ஒருவர் இருந்தார். இவர் இந்தியாவிலுள்ள ஒருவருக்கு வைரங்களை அனுப்புவதற்காக மெல்லிய காகிதத்தைத் தேடி அலைந்தார். இறுதியில் திருவிவிலியத்தில் உள்ள காகிதங்கள் மிகவும் மெல்லியதாக இருப்பது தெரிந்ததும், அதில் இவர் வைரங்களை வைத்துச் சுரட்டி அனுப்பிவைத்தார். வைரங்களைப் பெற்றுக்கொண்டவரோ இந்து சமயத்தைச் சார்ந்தவர். அவர் வைரங்களைச் சுற்றியிருந்த காகிதம் வித்தியாசமாக இருப்பதைப் பார்த்துவிட்டு, அதில் இடம்பெற்றிருந்த வார்த்தைகளைப் பொறுமையாக வாசிக்கத் தொடங்கினார். அவர் வாசித்த பகுதி யோவான் நற்செய்தி மூன்றாம் அதிகாரம். ஒவ்வோர் இறைவார்த்தையாக அவர் வாசித்துக்கொண்டு வருகையில் 3: 16 இல் இடம்பெற்றிருந்த வார்த்தைகள் அவரை மிகவும்தொட்டன. அப்பொழுதுதான் அவருக்கு, தான் வாசித்தது சாதாரண காகிதமல்ல; திருவிவிலியத்திலுள்ள ஒரு பகுதி என்பது தெரியவந்தது. ‘இத்தனை நாள்களும் இந்தப் புனிதநூலைக் குறித்து அறியாமலேயே இருந்துவிட்டேனே’ என்று வேதனைப் பட்டார் அவர்.
இதற்குப் பிறகு அவர் கடவுளின் பேரன்பை மக்களுக்கு எடுத்துக்சொல்லி, பலரையும் ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கைகொள்ளச் செய்தார். சிறிது காலத்திற்குப் பிறகு அவர் இருந்த பகுதிக்கு அயல்நாட்டிலிருந்து ஒரு மறைப்போதகர் வந்தபொழுது, பலரும் ஆண்டவர் இயேசுவைக் குறித்து அறிந்திருந்ததைக் குறித்து அவர் மிகவும் வியந்துபோனார்.
ஆம், கடவுளின் வார்த்தைக்கு வாழ்வையே மாற்றும் ஆற்றல் உள்ளது. அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டுதான் இந்த நிகழ்வு. இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகம், இறைவார்த்தையின் வல்லமையை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
எசாயா 55, 56 ஆகிய இரண்டு அதிகாரங்களும் ஆண்டவர் விடுக்கும் அழைப்பினை ஏற்று, பிற இனத்தார் அவரிடம் வருவது பற்றிக் கூறுகின்றது. இதற்கு இஸ்ரயேல் மக்கள் பிற இனத்தாருக்கு ஒளியாக இருக்கவேண்டும். ஒருவேளை அவர்கள் பிற இனத்தாருக்கு ஒளியாக இல்லாதபட்சத்தில் தன் ஆற்றல்மிக்க வார்த்தைகளைக்கொண்டே பிற இனத்தாரைத் தன்னிடம் கொண்டுவருவேன் என்கின்றார் ஆண்டவர். அதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் மழையைப் போன்று, பனியைப் போன்று எந்த நோக்கத்திற்காக என் வார்த்தை அனுப்பப்பட்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றாமல் அது போகாது என்கின்றார் ஆண்டவர்.
ஆம். கடவுளின் வார்த்தை விதை போன்றது (லூக் 8: 11). அது என்றென்றைக்கும் நிலைத்திருக்கக்கூடியது (எசா 40: 8). அப்படிப்பட்ட இறைவார்த்தை இறைவனுடைய விரும்பத்தை நிறைவேற்றாமல் ஒருநாளும் போகாது.
சிந்தனைக்கு:
ஆற்றல்மிக்க இறைவார்த்தையைக் கேட்டும், அதற்கு நாம் பலன்தராமல் இருக்கின்றோம் எனில், நமது வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப்படுத்து நல்லது.
இறைவார்த்தையைக் கேட்கின்ற ஒவ்வொருவரும் உலகிற்கு ஒளியாக இருந்து, மக்களை இயேசுவிடம் அழைத்து வருவது இன்றியமையாதது.
இறைவார்த்தைக்கு நமது வாழ்வில் எத்தகைய முக்கியத்துவம் தருகின்றோம்? சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவாக்கு:
‘என் கட்டளைகளை நீ மறவாதே, நீ வாழ்வடைவாய்’ (நீமொ 4: 4) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அதன்படி வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.