29 நவம்பர் 2020, ஞாயிறு

“கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள்”

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு


I எசாயா 63: 16b-17, 19b, 64: 2-7
II 1 கொரிந்தியர் 1: 3-9
III மாற்கு 13: 33-37

“கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள்”


நிகழ்வு

எப்பொழுதும் துறுதுறுவென்று இருக்கும் மகள் ஷாலினை அழைத்த அவளுடைய அம்மா, “பாப்பா! கடைக்குச் சென்று முட்டை வாங்கிக்கொண்டு வருகிறாயா? அம்மா சமையற்கட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றேன்” என்றார். ஷாலின் “சரி” என்று சொன்னதும், அவளிடம் முட்டைக்குரிய பணத்தைக் கொடுத்து, கடைக்கு அனுப்பி வைத்தாள் அவளது அம்மா.

ஷாலின் முட்டை வாங்கச் சென்ற கடை, அவளது வீடு இருந்த தெருவின் முனையில்தான் இருந்தது. அதனால் அவள் மெதுவாக நடந்து சென்று கடையை அடைந்ததும், தன் அம்மா தன்னிடத்தில் கொடுத்த பணத்தைக் கடைக்காரரிடம் கொடுத்து, “இந்தப் பணத்திற்கு முட்டை தாருங்கள்” என்று கேட்டு, கடைக்காரர் கொடுத்த முட்டைகளைத் தன் இரு கைகளிலும் பிடித்துக்கொண்டு வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.

வரும் வழியில் சேவல்கள் இரண்டு மிகவும் உக்கிரமாகச் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டாள் ஷாலின். அதுவரைக்கும் சேவல்கள் சண்டையிட்டுக் கொண்டதைப் பார்த்திராத அவள், அவற்றை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். பின்னர் அவள், ‘நேரமாகிவிட்டால் அம்மா திட்டுவாள்’ என நினைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். ஆனாலும் அவளால் சேவல்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால் அவள் சேவல்கள் சண்டையிடுவதைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே வீட்டை நோக்கி நடந்து சென்றாள்.

அப்பொழுது எங்கோ பார்த்துக்கொண்டு எதிரே வந்த ஒருவர்மீது ஷாலின் மீதோ, அவளுடைய கையிலிருந்த முட்டைகள் கீழே விழுந்து உடைந்துபோயின. இதனால் அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்ற ஷாலினிடம் அவளுடைய அம்மா, “என்ன ஆயிற்று?” என்று கேட்டாள். அவள் நடந்த அனைத்தையும் எடுத்துச் சொன்னாள். உடனே அவளுடைய தாய், “இனிமேலாது கவனமாய் இரு” என்றார்.

ஆம், நாம் எப்பொழுதும் கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால், நம்முடைய வாழ்க்கை மிகப்பெரிய ஆபத்தில் போய் முடிந்துவிடும். திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு, “கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள்” என்ற அழைப்பினைத் தருகின்றது. நாம் நமது அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது, ஆன்மிக வாழ்க்கையிலும் எப்படிக் கவனமாகவும் விழிப்பாகவும் இருப்பது என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

அவர் வரும் நேரம் எப்பொழுது என்று தெரியாது

இன்று நாம் திருவருகைக் காலத்தில் அடியெடுத்து வைக்கின்றோம். ஆதலால், இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, மானிட மகனின் வருகைக்காக எப்படி நம்மை அணியமாக்குவது என்பதைப் பற்றி எடுத்துக்கூறுகின்றது.

ஆண்டவர் இயேசு, மானிட மகனுடைய வருகை எப்படி இருக்கும் என்பதை விளக்குவதற்காக வாயிற்காவலர் அல்லது வீட்டுப் பொறுப்பாளர் உவமையைப் பயன்படுத்துகின்றார். அக்காலத்தில், இன்றைக்கு இருப்பது போன்று போக்குவரத்து வசதியோ அல்லது தொடர்பு வசதியோ கிடையாது, ஆதலால் பணிநிமித்தமாக நெடும்பயணமோ அல்லது வெளியூரோ செல்லும் வீட்டுத் தலைவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம். அவர் வீட்டிற்கு வருகின்ற நேரத்தில் வாயிற்காவலரோ அல்லது வீட்டுப் பொறுப்பாளரோ தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பினைச் செய்துகொண்டிருப்பவராக இருக்கவேண்டும். இல்லையென்றால், வீட்டுத் தலைவரிடமிருந்து அவர் தண்டனை பெறுவார். இந்த அடிப்படை உண்மையை உவமையாகச் சொல்லும் இயேசு, மானிட மகனும் எந்த நேரத்தில் வருவார் என்று யாருக்கும் தெரியாது. அதனால் கவனமாகவும் விழிப்பாகவும் இருங்கள் என்கின்றார். அப்படியென்றால், எப்பொழுது வேண்டுமானாலும் வரக்கூடிய மானிடமகனை எதிர்கொள்ள நாம் நமது கடமைகளைச் செய்துகொடிருப்பவர்களாக இருக்கவேண்டும்.

தம் வழியைக் நினைவில் கொள்வோர்க்குத் துணை வருகின்றார் ஆண்டவர்

மானிடமகன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம், அதனால் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்கவேண்டும் என்று இன்றைய நற்செய்தியின் வழியாக இயேசு கூறுகின்ற அதே நேரத்தில், இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும், ஆண்டவரின் வழிகளை நினைவில் கொள்வோர்க்கும் அவர் துணை செய்ய விரைகின்றார் என்கின்றார். அவ்வாறெனில், யாரெல்லாம் நேர்மையைக் கடைப்பிடித்து, ஆண்டவருடைய வழிகளில் நடந்து, கவனமாகவும் விழிப்பாகவும் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு ஆண்டவர் உதவி செய்ய விரைகின்றார் என்று பொருள் கொள்ளலாம்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசக இறைவார்த்தைப் பகுதியானது, கிமு. ஆறாம் நூற்றாண்டில் பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்ட யூதா நாட்டவர், அறுபது கால அடிமைத்தன வாழ்விற்குப் பின்பு, பெர்சிய மன்னன் சைரசால் அவர்களுடைய சொந்த நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டபொழுது, என்ன நடந்தது என்பதை எடுத்துக் கூறுவதாக இருக்கின்றது. இந்த இறைவார்த்தைப் பகுதி பல்வேறு உணர்வுகளை எடுத்துக்கூறுவதாக இருந்தாலும், ஆண்டவரின் வழிகளை நினைவில் கொள்வோருக்கு ஆண்டவர் துணை செய்ய வருகின்றார் என்ற முக்கியமான செய்தியை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. இதன்மூலம் ஆண்டவரின் வழிகளை நினைவில் கொண்டு, கவனமாகவும் விழிப்போடும் செயல்படுவோருக்கு ஆண்டவர் துணை செய்ய விரைகின்றார் என்பது உண்மையாகின்றது.

குறைச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்

மானிட மகன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம் என்றாலும், ஆண்டவரின் வழிகளை நினைவில் கொள்வோருக்கு, கவனமாகவும் விழிப்பாகவும் இருப்போருக்கு ஆண்டவர் துணை செய்வார் என்று இதுவரை சிந்தித்துப் பார்த்தோம். ஒருவேளை ஆண்டவரின் வழிகளை நினைவில் கொள்ளாமல், எப்படியும் வாழும் ஒருவர் திடீரென்று மானிடமகன் வருகின்றபொழுது, அவர் குறைசொல்லுக்கு ஆளாகவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகின்றார்.

கொரிந்து நகரில் இருந்தவர்கள் கடவுள் கொடுத்த கொடைகளைத் தவறாகவும், தங்களுடைய நலனுக்காகவும் பயன்படுத்தி, முறைகேடாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு அறிவுரை கூறும் பொருட்டே புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில், “நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார்” என்கின்றார். அப்படியெனில், மானிட மகன் - ஆண்டவர் இயேசு – வருகின்றபொழுது நாம் குறைச் சொல்லுக்கு ஒருபோதும் ஆளாகாமல் இருக்கவேண்டும். அதற்கு நாம் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், தம் வழிகளை நினைவில் கொள்வோருக்குத் துணை செய்யும் ஆண்டவர் நமக்கும் துணை செய்வார்.

ஆகையால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரக்கூடிய மானிட மகனை எதிர்கொள்வதற்கு நாம் எப்படியும் வாழாமல், கவனமாகவும் விழிப்பாகவும், ஆண்டவரின் வழிகளைக் நினைவில் கொண்டும் வாழ்வோம்.

சிந்தனை

‘நீங்கள் எதைச் செய்தாலும், கிறிஸ்துவின் அன்புக்காகச் செய்யுங்கள்’ என்பார் புனித அல்போன்சா. எனவே, நாம் எப்பொழுது வேண்டுமானாலும் வரக்கூடிய மானிடமகனை நல்லமுறையில் எதிர்கொள்ளும் வகையில், எதைச் செய்தாலும் கிறிஸ்துவின் அன்புக்காகச் செய்வோம். நாம் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்கின்றோம் என்பதை, நாம் கிறிஸ்துவின் அன்புக்காகச் செய்யும் செயல்களால் நிரூபிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்