29 நவம்பர் 2020, ஞாயிறு

திருப்பலி முன்னுரை

திருவருகைக்காலம் முதல் வாரம் – ஞாயிறு

திருப்பலி முன்னுரை


புதிய வழிபாட்டு ஆண்டைத் தொடங்கி, கிறிஸ்து பாலகனை வரவேற்க நம்மையே ஆயத்தப்படுத்த இன்றைய திருவருகைக்காலம் முதல் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு அன்புடனே அழைக்கப்பட்டிருக்கிறோம்.

நான்கு வண்ணத்தில் ஏற்றப்படும் மெழுகுதிரிகள் ஒளியாம் இறைவனையும் மெழுகுதிரிபோல் மனிதராய்ப் பிறந்து, மனித குலத்திற்காக தன்னையே கரைத்துக் கொள்வதையும் வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. இன்று ஏற்றப்படும் மெழுகுதிரி எதிர்நோக்கு என்பதை அறிவுறுத்துகிறது. உறுதியான நம்பிக்கையே எதிர்நோக்கு என்பது. நம்மை மீட்க மானிட மைந்தர் பிறப்பார் என்பதே நமது எதிர்நோக்காக அமையட்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் இரக்கம் மிகுந்த தந்தையை நோக்கி, “எம் மீட்பர் நீரே!” என்றும் “நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உமது கைவேலைப்பாடுகளே” என்று இறைத் தந்தையை மாட்சிப்படுத்துவதை எசாயா இறைவாக்கினர் எடுத்துரைக்கிறார். இறைவனால் உருவாக்கப்பட்ட மட்கலம் நாம். வெறுமையாய் இராமல், பெருமையாய் வாழ்வோம். இறை மாண்புகளை நம்முள் கொண்டு இனியவராய் இறைமகனை எதிர்நோக்குடன் எதிர்பார்த்திருப்போம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், “ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருட்கொடை எதிலும் குறையே இல்லை” என்று புனித பவுல் கொரிந்திய மக்களுக்கு உரைக்கிறார். அவரின் வருகை ஒளியையும், வாழ்வையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரும். இதுவே நமது விசுவாசமாகும்.

இன்றைய நற்செய்தியில், “தலைவனின் வருகையைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்று நம்மை விழிப்படையச் செய்கிறார் இயேசு கிறிஸ்து. இறைவனை அடைவதே நமது இலக்கு. இலக்கை அடைய உகந்த பாதையைத் தேர்ந்தெடுத்து, நேரிய பாதையில் நம் கால்களை நடக்கச் செய்வோம்.

மனதிற்கினிய அன்பைப் பகிர்ந்து மனித மாண்பை நிலைக்கச் செய்வோம். இச்சிந்தனைகளைத் தாங்கி பலியில் பங்கேற்போம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

1. ஆண்டவரின் ஒளியில் நடக்க அழைப்பவரே இறைவா!
எம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, திருஅவைப் பணியாளர்கள் இறை ஒளியில் நடக்கவும், மக்களை இறையாட்சிப் பாதையில் நடத்திச் செல்லவும், பாவ இருளை மனதில் அகற்றி, ஆண்டவரின் ஒளியில் நடைபோடவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. ஆயத்தமாய் இருங்கள் என்றவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள், பணிபுரியும் அரசு அதிகாரிகள், தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு மக்களுக்கு சேவை செய்யவே என்பதை மனதில் கொண்டு, நாடும் மக்களும் வளர்ச்சி அடைய தேவையான திட்டங்களை செயல்படுத்தவும், மக்களை பிரித்தாளும் போக்கினை விட்டொழித்து, நலம் தரும் ஆட்சி செய்ய நல்லறிவு தரவேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. எதிர்நோக்கோடு வாழ கற்று தருபவரே எம் இறைவா!
எம் நாட்டில், எம் பகுதியில் தனிமை, நோய், வன்முறை போன்ற காரணங்களால் வாழ்வில் நம்பிக்கை இழந்து வாடும் சகோதர சகோதரிகள் உம் மீது நம்பிக்கையில் உறுதிப்படவும், பசியற்ற, கல்வி பெற்ற உலகை எம் எதிர்நோக்காக கொண்டு, ஒருவர் மற்றவருக்கு உதவும் மனப்பான்மை தரவேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. இயற்கையை நேசிக்கச் செய்பவரே எம் இறைவா!
எம் பகுதியில் வேளாண்மை சிறப்படையவும், விளைச்சலுக்கு ஏற்ற காலச் சூழ்நிலையை தந்து ஆசீர்வதிக்கவும், குடும்ப அமைதி, சந்தோஷம் பெருகவும், கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் உமது அருளால் பெற்று மகிழவும் வரம் அருள வேண்டுமென்று உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.

வாசகங்கள்



பிற நாட்கள்