18 அக்டோபர் 2020, ஞாயிறு

திருப்பலி முன்னுரை

பொதுக்காலம் 29ஆம் வாரம் – ஞாயிறு

திருப்பலி முன்னுரை


கடவுளுக்கு உரியதை கடவுளுக்கு கொடுங்கள் என்று நம்மிடமிருந்து தூய உள்ளத்தை எதிர்பார்க்கும் இறைவனால் அன்பாக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை விசுவசிக்க பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு திருப்பலி நம்மை அழைக்கிறது.

கடவுளுக்கு உரியது எது? சக மனிதரை நேசிக்கவும், மன்னிக்கவும் கற்றுக் கொண்ட இதயமே கடவுளுக்கு உரியது. இறைவன் படைப்பிலே சிறந்தது மனிதப் பிறவிதான். ஏனெனில் தனது சாயலாகவே படைத்தார். பிறக்கையிலே நம்மில் இருக்கும் உன்னத குணங்கள் நாளடைவில் உறங்கித்தான் போகிறது. நற்குணங்களை இதயத்தில் விழிப்படையச் செய்து இறைவனுக்கு உகந்ததாய் மாற்றுவோம்.

இன்றைய முதல் வாசகத்தில், “நானே ஆண்டவர்! வேறு எவரும் இல்லை” என்று இறைவன் சைரசுக்கு தம்மை வெளிப்படுத்துவதை எசாயா இறைவாக்கினர் எடுத்துரைக்கிறார். ‘உன்னைப் பெயர் சொல்லி அழைத்தேன்” என்று அன்பு மேலிடக் கூறுகிறார். இறைவன் நம்மீது கொண்டுள்ள அன்பு, தாகம் இவற்றை நாம் உணர்ந்து கொள்கிறோமா? ‘நானே ஆண்டவர்’ என்று அறிவித்தும் பலவீனத்தால் மதியிழந்து தவறான பாதைக்குள் பிரவேசிக்கிறோம். அவரே நம்மை கரம் பிடித்து நடத்த நம்மை அவரிடம் ஒப்படைப்போம். வழி நடத்துபவர் அவரே.

இன்றைய நற்செய்தியில், “சீசருக்குரியதை சீசருக்கும் கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்” என்று இவ்வுலகில் வாழ்வோரின் கடமையையும் விண்ணக வாழ்வுக்குச் செய்ய வேண்டியவற்றையும் எடுத்துரைக்கிறார் இயேசு. சீசர் என்பவர் ஆட்சியாளர். நாட்டை நடத்த வேண்டிய பொறுப்பில் இருப்பவனுக்கு வேண்டிய பணத்தை, வரியைக் கொடுக்கச் சொல்கிறார். இன்றைய சூழலில் உழைப்பவனின் பணம் வீதியிலிருந்து வீட்டுக்குள் வருவதற்குள் வரிசையாய் வரியென்று வாரிக் கொண்டு போய் விடுகிறது. இந்நிலை இவ்வாறிருக்க மானத்தை விற்று பணத்தை சம்பாதிக்கும் போக்கு ஒருபுறம். இவற்றை நம்மிலிருந்தும் சூழலிருந்தும் அகற்றி, தூய வாழ்வை மேற்கொள்ளவும், சுத்த இதயத்தை இறைவனுக்கு கொடுக்கவும் இப்பலியிலே வேண்டுவோம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

1. ‘நானே ஆண்டவர்’ என்றவரே எம் இறைவா!
எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், உமது வழியைப் பின்பற்றி இறைவனுக்கும் இறைமக்களுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தவும், அழைப்புற்கேற்ற எளிய வாழ்வை மேற்கொண்டு, நற்செய்திப் பணியை முதன்மையாகக் கொண்டு வாழும் கிறிஸ்துவாக நடந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. ‘சீசருக்குரியதை சீசருக்கும் கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்” என்றவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள், இறைபயத்தோடு ஆட்சி புரியவும், முறையான, தேவையான வரிகளை விதிக்கவும், மக்கள்மீது அதீத வரிகளை சுமத்தி, வாட்டி வதைக்காமல், நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்யவும், சமூக சீர்கேடுகள் களையப்படவும், அமைதியான வாழ்க்கை ஏற்படவும் வழிசெய்ய நல்லறிவு தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. “ஆற்றலையும் மாட்சியையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்” என்றவரே எம் இறைவா!
ஆற்றலைத் தந்தவர் நீர் என்பதை மறைந்து இயந்திரமாய் ஓடிக் கொண்டிருக்கும் நாங்கள் பணம், பொருள், இன்பம் இவற்றிற்கு மேலான அமைதி, மகிழ்ச்சி உம்மிடமே உண்டு என்பதை அறியவும், இறைவனுக்கேற்ற பாதையில் பயணித்து வாழ்வின் பொருளை அறிந்து, இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. ஒளித்து வைத்த புதையல்களைத் தருவேன் என்றவரே எம் இறைவா!
எம் பகுதியில் பருவ மழை பொழிந்து, போதிய காலச் சூழல் நிலவவும், வேளாண்மை சிறக்கவும், குடும்ப அமைதி, மகிழ்ச்சி பெருகவும், படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையவும், வேலைக்காக காத்திருப்போர் வேலைவாய்ப்பைப் பெறவும், திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் உமதருளால் மகிழ்வைக் கண்டடையவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.

வாசகங்கள்



பிற நாட்கள்