18 அக்டோபர் 2020, ஞாயிறு

முன்மதியோடு செயல்பட்ட இயேசு

பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் ஞாயிறு

I எசாயா 45: 1, 4-6
II 1 தெசலோனிக்கர் 1: 1-5a
III மத்தேயு 22: 15-21

முன்மதியோடு செயல்பட்ட இயேசு


நிகழ்வு

மாமன்னர் அக்பரிடம் முதன்மை அமைச்சராகப் பணிபுரிந்து வந்தவர் பீர்பால். இவர் எப்பொழுதும் முன்மதியோடும் புத்திக்கூர்மையோடும் செயல்பட்டதால், இவரை மன்னருக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒருநாள் இரவில் பீர்பாலின் நெருங்கிய உறவினர் ஒருவர் அரண்மனைத் தோட்டத்திற்குள் புகுந்து, அங்கிருந்த காய்கறிகளைப் பறிக்க முற்பட்டபொழுது, காவல்காத்துக் கொண்டிருந்த படைவீரர்கள் அவரைப் பார்த்துவிட, அவர்கள் அவரை மாமன்னருக்கு முன்பாக இழுத்துச் சென்றார்கள். பிடிபட்டவர் பீர்பாலின் நெருங்கிய உறவினர் என்று மாமன்னருக்கு நன்றாக தெரிந்திருந்தது. இருந்தாலும், அரண்மனைத் தோட்டத்திற்குள்ளே புகுந்து, திருடியதால், மாமன்னர் அவரை மறுநாள் தூக்கிலிடுமாறு தன் படைவீரர்களுக்கு ஆணையிட்டுவிட்டுத் தூங்கச் சென்றுவிட்டுவிட்டார்.

இச்செய்தி சிறிதுநேரத்தில் பீர்பாலுக்குத் தெரிய வந்தது. ‘ஒரு சாதாரண குற்றத்திற்கு தூக்குத் தண்டனையாக...? ஒருவேளை நம் நெருங்கிய உறவினருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டால், அவருடைய குடும்பம் என்னாவது...?’ என்று யோசித்த பீர்பால், மாமன்னரிடம் எப்படியாவது பேசி, தூக்குத் தண்டனையை நிறுத்தவேண்டும் என்று முடிவுசெய்துகொண்டு அதிகாலையிலேயே எழுந்து மாமன்னரிடம் சென்றார். அன்று காலையில் மாமன்னர் தன்னுடைய அறைக் கதவைத் திறந்து வெளியேபொழுது அவருக்கு முன்பாக பீர்பால் நின்றுகொண்டிருந்தைப் பார்த்தார்.

‘இந்தப் பீர்பால், திருட்டுக் குற்றத்தில் மாட்டிக்கொண்ட தன்னுடைய நெருங்கிய உறவினருக்காகத்தான் பரிந்து பேச வந்திருக்கின்றார்’ என்று நினைத்துக்கொண்டு, மாமன்னர் அவரிடம், “இப்பொழுது நீ எதற்காக வந்திருக்கின்றாய் என்று எனக்கு நன்றாகவே தெரியும். நீ என்னிடத்தில் என்ன கேட்டாலும் நடக்காது” என்றார். மாமன்னர் இப்படிச் சொன்னதும் ஒருவினாடி யோசித்த பீர்பால், “மாமன்னரே! என்னுடைய நெருங்கிய உறவினரை உடனே தூக்கிலிடுங்கள். அதைச் சொல்வதற்குத்தான் இப்பொழுது நான் உங்களிடம் வந்தேன். ஆனால், நீங்கள் சிறிது நேரத்திற்கு முன்பாகக் கொடுத்த வாக்கை நினைவுபடுத்திக்கொண்டு தண்டனையை நிறைவேற்றுங்கள்” என்றார்.

சிறிது நேரத்திற்கு முன்பாக மாமன்னர் பீர்பாலிடம், ‘நீ என்னிடத்தில் என்ன கேட்டாலும் நடக்காது’ என்று சொல்லியிருந்ததால், வாக்கை மீறமுடியாமல், அவர் பீர்பாலின் நெருங்கிய உறவினரை விடுதலை செய்து அனுப்பினார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற பீர்பாலின் முன்மதியான பேச்சு, அவருடைய நெருங்கிய உறவினரைத் தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றியது போல், இன்றைய நற்செய்தியில் இயேசு பரிசேயர்களும் ஏரோதியர்களுக்கும் அளித்த முன் மதியான பதில், அவர்கள் இயேசுவுக்கு எதிராகச் செய்த சூழ்ச்சியை ஒன்றுமில்லாமல் செய்கின்றது. பொதுக்காலத்தின் இருபத்து ஒன்பதாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், நாம் முன்மதியோடு செயல்பட்டு, கடவுளுக்குரியவர்களாய் வாழ அழைப்புத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவை தந்திரமாக வீழ்த்த நினைத்த பரிசேயர்களும் ஏரோதியர்களும்

நற்செய்தியில் இயேசுவிடம், ‘சீசருக்கு வரிசெலுத்துவது முறையா? இல்லையா?’ என்ற கேள்வியோடு வருகின்ற பரிசேயரும் ஏரோதியரும் அடிப்படையில் எதிரும் புதிருமானவர்கள். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால், பரிசேயர்கள் உரோமையர்களின் ஆட்சியையும், அவர்களுக்கு வரிசெலுத்துவதையும் அறவே வெறுத்தார்கள்; ஆனால், ஏரோதியர்களோ உரோமரியர்களுக்குக் கட்டாயம் வரிசெலுத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு வரிசெலுத்தாமல் இருப்பது மிகப்பெரிய குற்றம் என்றும் சொல்லிவந்தார்கள். இப்படி இருவேறு கருத்துகளைக் கொண்ட பரிசேயர்களும் ஏரோதியர்களும் ஒரு புள்ளியில் இணைந்து, இயேசுவிடம் வந்தார்கள் எனில், அவர்களின் ஒரே நோக்கம் இயேசுவை எப்படியாவது சூழ்ச்சி செய்து வீழ்த்தவேண்டும் என்பதுதான்.

இயேசுவை வீழ்த்துவதற்கு அவர்கள் கேட்ட கேள்வி மிகவும் சூழ்ச்சியானது. அவர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு சீசருக்கு வரிசெலுத்துவது முறைதான் என்றால், யூதர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டி வரும். ‘சீசருக்கு வரிசெலுத்துவது முறையில்லை’ என்றால், ஏரோதியர்களின், உரோமை அரசாங்கத்தின் எதிர்ப்பை எதிர்கொள்ள வரும். இப்படி இரண்டு பக்கும் ஆபத்து நிறைந்த கேள்விக்கு இயேசு எப்படிப் பதிலளித்தார் என்பதைக் குறித்துத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சீசருக்கு உரியவற்றைச் சீசருக்குக் கொடுங்கள்

பரிசேயர்களும் ஏரோதியர்களும் தன்னிடம் கேட்ட கேள்வி மிகவும் சூழ்ச்சியானது என்பதை நன்றாக அறிந்த இயேசு அவர்களிடம், “ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்” என்கின்றார். இயேசு அவர்களிடம் இவ்வாறு கூறுவது அவர் சாத்தானிடம் கூறுகின்ற, “உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்” என்ற வார்த்தைகளை ஒத்திருக்கின்றது (மத் 4: 7). பரிசேயர்கள் மற்றும் ஏரோதியர்களிடம், “ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்” என்று சொல்லும் இயேசு தொடர்ந்து அவர்களிடம், “..வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்” என்று சொல்ல, அவர்களும் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொடுத்த, இயேசு அவர்களிடம், “சீசருக்கு உரியவற்றை சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்கின்றார்.

‘சீசருக்கு உரியவற்றை சீசருக்கு கொடுக்கவேண்டும்’ என்று இயேசு சொல்வதன்மூலம், புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் குறிப்பிடுவது போல், ‘கடவுள் ஏற்படுத்திய ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்குப் பணிந்திருங்கள்’ என்கின்றார் (உரோ 13: 1-7. மேலும் 1திமொ 2: 1-6; 1 பேது 2: 13-17) . யூதர்கள் உரோமையர்களுக்குக் கீழ் இருந்தார்கள். அதனால் அவர்கள் உரோமையர்களுக்குப் பணிந்திருக்குமாறு மறைமுகமாகச் சொல்கின்றார் இயேசு. இன்றைய முதல் வாசகத்தில் பிறஇனத்தாராகிய சைரசை ஆண்டவர் திருமுழுக்கு செய்வதைக் குறித்து வாசிக்கின்றோம். அவர் பிறஇனத்தவராக இருந்தாலும், இஸ்ரயேல் மக்களை நெறிப்படுத்தி, வழிநடத்த ஆண்டவர் அவரை அருள்பொழிவு செய்கின்றார். அதுபோன்றுதான் உரோமையர்களையும் இஸ்ரயேல் மக்களை ஒரு வழிக்குக் கொண்டுவர, அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுக்கின்றார் ஆண்டவர். ஆதலால், ஆண்டவர் ஏற்படுத்திய பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஒவ்வொருவரும் பணிந்து நடந்தவேண்டும் என்பதை இயேசு சொல்லாமல் சொல்கின்றார் என்பதை இயேசு கூறும் வார்த்தைகளின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்குக் கொடுங்கள்

‘சீசருக்கு உரியவற்றைச் சீசருக்குக் கொடுங்கள்’ என்று சொன்ன இயேசு, “கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்குக் கொடுங்கள்” என்கின்றார். சீசருக்கு ஒரு நாடு மட்டுமே உரியதாக இருக்கும்; ஞ்சிப் மிஞ்சிப் போனால், அவன் கைப்பற்றிய நாடுங்கள் அவனுக்கு உரியதாக இருக்கும்; ஆனால், கடவுளுக்கு நம்முடைய ஆன்மா உட்பட எல்லாமும் உரியது. அதனால் அதை கடவுளுக்கு கொடுங்கள் என்கின்றார் இயேசு. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள், சைரசிடம், “நானே ஆண்டவர்; என்னையன்றி வேறு கடவுள் இல்லை” என்பார். அப்படியானல், உண்மைக் கடவுளுக்கு உரியவர்களாகிய நாம், அவரிடம் நம்மை முழுவதும் ஒப்படைத்து, புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் குறிப்பிடுவது போல, நம்பிக்கை செயலில் வெளிப்படக்கூடிய, உழைப்பு அன்பினால் உந்தப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும். அதுவே நாம் கடவுளுக்கு உகந்தவர்கள் என்பதற்குச் சான்றாகும்.

இன்றைக்குப் பலர் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழாமல், தங்களுடைய விருப்பத்தின்படி வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். நாம் கடவுளுக்கு உரியவர்கள் என்றால், அவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்வதுதானே முறை! இந்த உண்மையை நாம் உணர்ந்தவர்களாய், இயேசுவைப் போன்று முன்மதியோடு செயல்பட்டு, கடவுள் ஏற்படுத்தியுள்ள பொறுப்புகளில் உள்ளவர்களுக்குப் பணிந்து நடந்து, ஆண்டவருக்கு உகந்த வாழ்க்கை வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

“...எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப் போன்று கபடு அற்றவர்களாகவும் இருங்கள்’ (மத் 10: 16) என்பார் இயேசு. எனவே, நாம் முன்மதியுடையவர்களாய் வாழ்ந்து, கடவுளுக்குரியவர்கள் என்ற உணர்வோடு அவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்