22 அக்டோபர் 2020, வியாழன்

லூக்கா 12: 49-53

பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம் வியாழக்கிழமை

லூக்கா 12: 49-53

“மண்ணுலகில் தீமூட்ட வந்தேன்”


நிகழ்வு

ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, பெருநகரில் இருந்த ஒரு கல்லூரில், விடுதியில் தங்கியவாறு படித்துக்கொண்டிருந்த தன் மகனைப் பார்க்கச் சென்றார் அவனுடைய அம்மா.

அம்மாவைக் கண்டதும், மட்டில்லா மகிழ்ச்சியடைந்த மகன், தான் தங்கியிருந்த அறைக்கு அழைத்துக்கொண்டு வந்து அவர்களோடு நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தான். இதற்கு நடுவில் தன் மகன் இருந்த அறையின் சுவரில் திரைப்பட நடிகர், நடிகைகளின் படங்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டு, மிகவும் வேதனையடைந்தார் தாய். இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், அவனோடு பேசிவிட்டு வீட்டுத் திரும்பி வந்துவிட்டார் தாய்.

இது நடந்து ஓரிரு வாரங்கள் அந்தத் தாய், விலையுயர்ந்த, தூய்மைமிகு இதய ஆண்டவரின் படத்தை அஞ்சல் வழியாகத் தன் மகனுக்கு அனுப்பி வைத்தார். அந்தப் படத்தைப் பார்த்த மகன் பெரிதும் மகிழ்ந்தான். ‘இப்படத்தை எப்பொழுதும் பார்க்கின்ற மாதிரி வைத்தால் நன்றாக இருக்கும்’ என்று தன்னுடைய ‘படிப்பு மேசைக்கு’ மேலே பொருத்தி வைத்தான் அவன். அது பார்ப்பதற்கு மிகவும் அழகாய் இருந்தது.

அன்றிரவு அவன் தூங்கச் செல்வதற்கு முன்பாக அறையில் இருந்த விளக்கை அணைத்தான். அப்பொழுது தூய்மைமிகு இதய ஆண்டவரின் படம் இருளில் மின்னியது. காரணம் அது ரேடியத்தால் செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது அவனுக்குள் ஒரு யோசனை வந்தது. ‘இவ்வளவு ஒளிமயமான தூய்மைமிகு இதய ஆண்டவரின் படத்திற்குப் பக்கத்தில் சாதாரண நடிகர், நடிகைளின் படங்கள் இருப்பது அவ்வளவு நல்லது கிடையாது’ என்று அந்தப் படங்களைக் கிழித்து எறிந்தான். அடுத்த நாள் தூங்கச் செல்வதற்கு முன்பாக, முந்தைய நாளில் கிழிப்படாமல் இருந்த வேறு சில நடிகர், நடிகைகளின் படங்களையும் கிழித்தெறிந்தான். இவ்வாறு அவனுடைய அறையில் தூய்மை மிகு ஆண்டவரின் படம் மட்டுமே ஒளிமயமாய் மின்னிக் கொண்டிருந்தது.

ஒருசில மாதங்கள் கழித்து, தன்னுடைய மகனைப் பார்க்கச் சென்ற தாய், அவனுடைய அறையில் திரைப்பட நடிகர் நடிகைகளின் படங்களெல்லாம் நீக்கப்பட்டு, தான் அனுப்பி வைத்திருந்த இதய ஆண்டவரின் படம் மட்டும் இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

ஆம், திரைப்பட நடிகர், நடிகைகளின் படங்களால் அறையை நிரப்பி வைத்திருந்த தன் தன்னுடைய மகனின் அறையில், தூய்மைமிகு இதய ஆண்டவர் படம் என்ற தீயை மூட்டி, அவனுடைய அறையே இறைவனின் உடனிருப்பு இருக்கும்படி செய்தார் அந்தத் தாய். இன்றைய நற்செய்தியில் இயேசு மண்ணுலகில் தீமூட்ட வந்தேன் என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுளின் உடனிருப்பை உணர்த்தும் ‘தீ’

திருவிவிலியத்தில் ‘தீ’ என்பது கடவுளின் உடனிருப்பை உணர்த்தக்கூடிய ஒன்று, ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் மோசேக்குத் தோன்றினார் என்று வாசிக்கின்றோம் (விப 3: 2). அதுபோன்று “..... இரவில் நெருப்புத்தூணும் மக்களை விட்டு அகலவில்லை” (விப 13: 22) என்றும் வாசிக்கின்றோம். புதிய ஏற்பாட்டில், நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் சீடர்கள் மேல் வந்து அமர்ந்ததைக் குறித்து வாசிக்கின்றோம் (திப 2:3). இவையெல்லாம் தீ அல்லது நெருப்பு கடவுளின் உடனிருப்பை உணர்த்துவதாய் இருக்கின்றன. இத்தகைய பின்னணியில் இயேசு, “மண்ணுலகில் தீமூட்ட வந்தேன்” என்று சொல்வதை, அவர் இந்த மண்ணுலகை இறைவனின் உடனிருப்பால் நிரப்ப வந்தார் என்ற விதத்தில் பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

நாம் ஒவ்வொருவரும் இயேசுவைப் போன்று தீயை மூட்ட வேண்டும்

இயேசு இந்த மண்ணுலகை இறைவனின் உடனிருப்பால் நிரப்ப, அல்லது இந்த மண்ணுலகில் தீயை மூட்ட வந்தார் எனில், நாமும் இறைவனின் உடனிருப்பால் இந்த மண்ணுலகில் தீயை மூட்ட வேண்டும். அதற்கு நாம் இயேசு நமக்குப் போதித்த அன்பு, இரக்கம், பரிவு, மன்னிப்பு போன்றவற்றின் படி வாழவேண்டும். இது நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய தலையாயக் கடமை.

ஆகையால், நாம் இயேசுவின் விழுமியங்களின்படி நடந்து, இந்த மண்ணுலகை இறைவனின் உடனிருப்பால் நிரம்பி, இயேசுவைப் போன்று மண்ணுலகில் தீமூட்டுபவர்கள் ஆவோம்.

சிந்தனை

‘உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்’ (மத் 5: 44) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவின் இந்த உயரிய கட்டளைகளைக் கடைப்பிடித்து, இயேசு மூட்டிய தீயை நாமும் மூட்டி, இந்த வையகத்தை இறைவனின் ஆசியால் நிரப்புவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்