22 அக்டோபர் 2020, வியாழன்

எபேசியர் 3: 14-21

பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம் வியாழக்கிழமை

எபேசியர் 3: 14-21

“அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!”


நிகழ்வு

ஓர் ஊரில் விவசாயி ஒருவர் இருந்தார். இவரிடத்தில் வலிமையான ஒரு குதிரை இருந்தது. ஒருநாள் இவர் தன்னுடைய குதிரையைக் ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் சென்றார். சந்தையில் மக்கள்கூட்டம் மிகுதியாக இருந்ததால், இவர் தன்னிடம் இருந்த குதிரையை வைத்துப் பந்தயம் கட்டினார். “என்னுடைய குதிரை மிகவும் வலிமை வாய்ந்தது. இந்தக் குதிரை ஒரே நேரத்தில் பத்து வண்டிகளை இழுக்கும். ‘அப்படியெல்லாம் இந்தக் குதிரையால், ஒரே நேரத்தில் பத்து வண்டிகளை இழுக்க முடியாது’ என்று நினைப்பவர்கள் பந்தயம் கட்டலாம். போட்டியில் நான் வென்றுவிட்டால், பந்தயப் பணம் முழுவதும் எனக்கு; ஒருவேளை நான் போட்டியில் தோற்றுவிட்டால், இரண்டு மடங்கு பணத்தை உங்களுக்குத் தருகின்றேன்” என்றார்.

விவசாயி இப்படிச் சொன்னதும் பலரும் பணத்தைக் கட்டிப் போட்டிக்குத் தயாரானார்கள். இதற்குப் பிறகு விவசாயினுடைய குதிரையின் பின்னால் பத்து வண்டிகள் கட்டப்பட்டன. அப்பொழுது விவசாயி தன்னுடைய குதிரையிடம், “குதிரையே! இந்தப் பத்து வண்டிகளையும் வேகமாக இழு” என்று சொல்லித் தன்னிடமிருந்த சாட்டையால், குதிரையின் முதுகில் ஓங்கி ஓர் அறைவிட்டார். விவசாயி சாட்டையால் குதிரையின் முதுகில் ஓங்கி அடித்ததால், அது ஓர் அடிகூட முன்னே நகராமல் அப்படியே இருந்தது. விவசாயி மீண்டும் மீண்டுமாகச் சாட்டையைச் சுழற்றியபொழுதும் குதிரை ஓர் அடிகூட நகரவில்லை. இதனால் விவசாயி தோல்வியை ஒத்துக்கொண்டு, போட்டியில் பணம் கட்டியவர்களுக்கு இரண்டு மடங்காகப் பணத்தைத் திருப்பித் தந்தார்

அன்றைய நாளில் விவசாயி மிகவும் வருத்தத்தோடு தன் வீட்டிற்குத் திரும்பி வந்து, நடந்ததை எல்லாம் தன் மனைவியிடம் எடுத்துச் சொன்னார். அதற்கு அவருடைய மனைவி, “குதிரையை அடித்துக்கொண்டிருந்தால் அது எப்படி முன்னால் நகரும்; முரண்டு பிடிக்கத் தானே செய்யும்! நீங்கள் குதிரையை மறுபடியும் மறுபடியும் அடித்திருக்கின்றீர்கள். அதனால்தான் அது ஓர் அடிகூட நகராமல் அப்படியே இருந்திருக்கின்றது. நாளைக்கு நாளில் நீங்கள் பந்தயம் வைக்கும்பொழுது, குதிரையிடம் அன்பாய்ப் பேசிப் பாருங்கள். நிச்சயம் மாற்றத்தை உணர்வீர்கள்” என்றார்.

மறுநாள் வந்தது. அன்றைய நாளில் விவசாயி தன்னுடைய குதிரையைக் கூட்டிக்கொண்டு, சந்தைக்குச் சென்று, போட்டியை அறிவித்தார்; ஆனால் இந்த முறை “என்னுடைய குதிரை இருபது வண்டிகளை ஒரே நேரத்தில் இழுக்கும். பந்தயத்தில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் உரிய தொகையைச் செலுத்திப் பந்தயத்தில் கலந்துகொள்ளலாம்” என்றார் விவசாயி. விவசாயினுடைய இந்த அறிவிப்பைக் கேட்டு, முந்தை நாளில் பந்தயத்தில் வென்றவர்கள், ‘இந்தக் குதிரையால் பத்து வண்டிகளையே இழுக்க முடியவில்லை. இதனால் எப்படி இருபது வண்டிகளை இழுக்க முடியும்? நிச்சயமாக இது முடியாத செயல்’ என்று நினைத்து, நம்பிப் பந்தயத் தொகையைக் கட்டினார்கள். அன்றைய நாளில் புதியவர்கள் ஒருசிலரும் பணத்தைக் கட்டிப் பந்தயத்தில் இறங்கினார்கள்.

பின்னர் விவசாயியினுடைய குதிரையின் பின்னால் இருபது வண்டிகள் கட்டப்பட்டன. வண்டிகள் கட்டப்பட்டதும், விவசாயி தன்னுடைய குதிரையின் அருகே சென்ற செல்லமாகத் தடவிக்கொடுத்து, அதன் நெற்றியில் வாஞ்சையோடு முத்தமிட்டு, “குதிரையே! உன்னால் இந்த இருபது வண்டிகளையும் மிக எளிதாய் இழுக்க முடியும்” என்று சொல்லிவிட்டுக் குதிரை ஓட்டினார். மறுவினாடி குதிரை இருபது வண்டிகளையும் ஒரே இழுவையில் இழுத்து, விவசாயிக்குப் பந்தயத்தில் வெற்றியைத் தேடித் தந்தது.

ஆம், நாம் அதிகாரத்தால் அல்ல, அன்பினாலேயே எதையும் சாதிக்க முடியும். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுதான் இந்த நிகழ்வு. இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், “அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக” என்கின்றார். இது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறையன்பை உணர்ந்து, பிரரன்போடு வாழ்வோம்

புனித பவுல் இறையன்பைப் பற்றிப் பேசுகின்றபொழுது, அது நமக்கு அறிவுக்கு எட்டாதது என்றும், அத்தகைய அறிவுக்கு எட்டாத அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக என்றும் கூறுகின்றார். ஆம், இறையன்பின் ஆழத்தை, அகலத்தை, நீளத்தை உயரத்தை நம்மால் அறிந்துகொள்ள முடியாது; ஆனால், நாம் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு, அவரை நம்முடைய உள்ளத்தில் குடிகொள்ளச் செய்தால், அந்த அன்பை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையால், இறையன்பை அறிந்துகொள்ளும் நாம் அந்த அன்பை நம்முடைய வாழ்வின் ஆணிவேராகவும் அடித்தளமாகவும் கொண்டு பிறரை அன்பு செய்து வாழவேண்டும். ஏனெனில், அன்பு இல்லையென்றால், நாம் ஒன்றுமில்லை (1 கொரி 13: 2), எனவே, நம்முடைய வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும் அன்பை நம்முடைய வாழ்வின் ஆணிவேராகவும் அடித்தளமாகவும் கொண்டு வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘அன்பே தலைசிறந்தது’ (1 கொரி 13: 13) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் எல்லாவற்றிலும் மேலான, தலைசிறந்த அன்பை நம்முடைய வாழ்வில் அடிப்படையாகக் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்