07 ஏப்ரல் 2020, செவ்வாய்

யோவான் 13: 21-33, 36-38

புனித வாரம் செவ்வாய்க்கிழமை

யோவான் 13: 21-33, 36-38

“நீ மும்முறை என்னை மறுதலிப்பாய்”

நிகழ்வு


‘இயேசுவின் பின்னால் நானும் செல்வேன். திரும்பிப் பார்க்க மாட்டேன்’ என்ற கிறிஸ்தவப் பக்திப் பாடலுக்குப் பின்னால் இருக்கக்கூடிய உண்மை நிகழ்வு.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதில் தென்னிந்தியாவில் ஒரு கிறிஸ்தவக் குடும்பம் இருந்தது. இக்குடும்பத்தில் இருந்த எல்லாரும் கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இது அவ்வூரில் இருந்த யாருக்கும் பிடிக்கவே இல்லை. இதனால் அவ்வூர்த் தலைவர் கிறிஸ்தவக் குடும்பத் தலைவரிடம் சென்று, “உங்கள் குடும்பத்தில் இருக்கின்ற எல்லாரும் கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, நாங்கள் வழிபடுகின்ற கடவுளை வழிபடவேண்டும்; இல்லையென்றால் கொல்லப்ப்படுவீர்கள்” என்று மிரட்டினார். அதற்கு அந்தக் கிறிஸ்தவர், “எங்களுடைய உயிரே போனாலும் பரவாயில்லை; நாங்கள் ஒருபோதும் கிறிஸ்துவை மறுதலிக்கமாட்டோம்” என்றார்.

இதைக்கேட்டு சீற்றம்கொண்ட ஊர்த்தலைவர் தன்னிடம் இருந்த வாளை எடுத்து, அந்தக் கிறிஸ்தவரின் பிள்ளைகள் இருவரைக் கொன்றுபோட்டார். கிறிஸ்தவர் இதைக் கண்டு அஞ்சாமல், ‘இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்; திரும்பிப் பார்க்கமாட்டேன்” என்ற வரிகளைப் பாடலாகப் பாடத் தொடங்கினார். இதைக் கண்டு இன்னும் சீற்றம் கொண்ட ஊர்த்தலைவர், “உனக்கு இன்னொரு வாய்ப்புத் தருகின்றேன். இயேசுவை மறுதலித்துவிட்டு, நாங்கள் வழிபடக்கூடிய கடவுளை வழிபடு. அப்படிச் செய்தால் உன் மனைவியையும் உன்னையும் உயிரோடு விட்டுவிடுக்றேன்” என்றார். கிறிஸ்துவரோ அதற்கெல்லாம் அஞ்சாது, தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். இதனால் ஊர்த்தலைவரோ தன்னிடம் இருந்த வாளை எடுத்து, அந்தக் கிறிஸ்தவரின் மனைவியை வெட்டிக்கொன்றார்.

அப்பொழுதும்கூட கிறிஸ்தவர் சிறிதும் கலக்கமுறாமல், ‘இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்...’ என்ற வரிகளை பாடிக்கொண்டே இருந்தார். இதைப் பார்த்த ஊர்த்தலைவர், “கடைசியாக உனக்கொரு வாய்ப்புத் தருகிறேன். நீ கிறிஸ்தவை மறுதலித்துவிட்டால், உன்னை உயிரோடு விட்டுவிடுகிறேன்” என்றார். அந்நேரத்திலும்கூட, கிறிஸ்தவர் தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். இதனால் ஊர்த்தலைவர் தன்னிடம் இருந்த வாளை எடுத்து அவரை வெட்டிக்கொன்றார்.

இதற்குப் பின்பு கிறிஸ்தவர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த காட்சியைக் கண்டபொழுது, ஊர்த்தலைவரின் மனசாட்சி உலுக்கப்பட்டது. அவர் சிந்திக்கத் தொடங்கினார்: “இந்த மனிதர் தன்னுடைய பிள்ளைகள், மனைவி தன் கண்முன்னால் கொல்லப்பட்டபோதும், கடைசியில் இவருடைய உயிர்போனதும்கூட கிறிஸ்துவை மறுதலிக்கவில்லையே! அப்படியானால் இவர் நம்புகின்ற கிறிஸ்து உண்மையான கடவுளாகத்தான் இருக்கமுடியும்!” இதற்குப் பின்பு ஊர்த்தலைவர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார். அவரோடு சேர்ந்து, அவ்வூரில் இருந்த எல்லாரும் கிறிஸ்துவ மதத்திற்குத் திரும்பினார்கள்.

இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வூருக்கு வந்த ஒரு மறைப்பணியாளர் ஊர் முழுவதும் கிறிஸ்தவர்களாக இருப்பதை கண்டு மிகவும் வியந்துபோய், ஊரில் இருந்த ஒருவரிடம் காரணத்தைக் கேட்க, அவர் நடந்த அனைத்தையும் சொல்ல, மறைப்பணியாளர், ‘இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்...’ என்ற பாடலைப் பதிவுசெய்துகொண்டு, 1959 ஆண்டு, ‘Assembly Songbook’ என்பதில் இணைத்தார். அப்பாடல் பின்னாளில் மிகவும் பலமானது. (ஆதாரம் Christian family in India killed while singing ‘I have decided to follow Jesus – Libby Giesbrecht, 2019)

கிறிஸ்துவை மறுதலிக்கவில்லை என்றால், குடும்பத்தில் இருக்கின்ற எல்லாரோடும் சேர்த்து, தானும் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும்கூட, கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கைக் கொண்டிருந்த அந்தக் கிறிஸ்தவரின் செயல் உண்மையில் பாராட்டுக்குரியது. நற்செய்தியில் பேதுரு தன்னை மும்முறை மறுதலிக்கப் போவதாக இயேசு முன்னறிவிக்கின்றார். அது குறித்து நாம் சிந்தித்து, நம்முடைய நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் எனபதையும் சிந்திப்போம்.

பேதுரு மும்முறை மறுதலிக்கப் போவதாக அறிவித்த இயேசு

இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில், “நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் முடியாது” என்று இயேசு பேதுருவிடம் சொல்கின்றபொழுது, அவர், “உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்பார். அப்பொழுது இயேசு அவரிடம், “எனக்காக உயிரையும் கொடுப்பாயா? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது” என்பார்.

இயேசு சொன்னதுபோன்று, பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்தார் (மத் 26: 69-75; மாற் 14: 66-72; லூக் 22: 54-62). பேதுரு இயேசுவை மறுதலிக்க முக்கியமான காரணம், உயிர் பயம். ‘இயேசுவைத் தனக்குத் தெரியும் என்று தன்னிடம் கேள்வி கேட்டவர்களிடம் சொன்னால், எங்கே தன்னுடைய உயிர் போய்விடுவோ’ என்று பேதுரு அஞ்சினார். அதனால்தான் அவர் இயேசுவை மறுதலித்தார். பின்னாளில் அவர் தன் பாவங்களுக்காக மனம்வருந்தி, கண்ணீர் சிந்தி, இயேசுவுக்காக உயிரையும் தந்தது, அது ஒருபுறம் இருந்தாலும், உயிருக்கு அஞ்சி இயேசுவை மறுதலித்தது, நம்முடைய வாழ்வை தன்னாய்வுக்கு உட்படுத்திப் பார்க்க அழைக்கின்றது. இன்றைக்குப் பலர் உயிருக்குப் பயந்து இயேசுவை மறுதலிப்பதைக் காண முடிகின்றது. இப்படிப்பட்ட சூழலில் நாம் உயிருக்குப் பயந்து இயேசுவை மறுதலிக்கின்றோமா? அல்லது இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கைக்காக, அவருக்காக உயிரையும் தர முன்வருகின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

‘இறுதிவரை மனஉறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்’ (மத் 24: 13) என்பார் இயேசு. ஆகையால், நாம் எத்தகைய சவால் வரினும், இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையிலிருந்து பிறழாமல், அவர்மீது உறுதியான நம்பிக்கையோடு இருப்ப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்