07 ஏப்ரல் 2020, செவ்வாய்

எசாயா 49: 1-6

புனித வாரம் செவ்வாய்க்கிழமை

எசாயா 49: 1-6

உலகம் முழுவதும் மீட்பு

நிகழ்வு


ஒருமுறை மிகப்பெரிய மறைப்போதகரான டி.எல்.மூடி தனக்கு முன்பாகத் திரண்டிருந்த மக்களைப் பார்த்து, “ஓர் ஊரில் இளம்பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு நல்ல ஆடைகளை உடுத்துவதற்குக்கூட போதுமான வசதி கிடையாது. அப்படிப்பட்டவள் திடீரென்று ஆடம்பரமான ஆடை ஆபரணங்களையும் விலையுயர்ந்த நகைகளையும் அணியத் தொடங்கினாள். இந்த இளம்பெண்ணின் வாழ்வில் ஏற்பட்ட இப்படிப்பட்ட திடீர் மாற்றத்திற்குக் காரணமென்ன?” என்று கேட்டார்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள். சிலர், ‘அந்தப் பெண் திருடியிருக்கவேண்டும்’ என்றார்கள். வேறு சிலர், ‘அவளுக்கு லாட்டரியின் மூலம் பணம் கிடைத்திருக்கும்’ என்றார்கள். மற்றும் சிலர், ‘குறுக்கு வழியில் அவள் பணம் சம்பாதித்திருப்பார்கள்’ என்றார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்லி முடித்தபின்பு, டி.எல்.மூடி இவ்வாறு சொன்னார்:

“அந்த இளம்பெண்ணை அந்நாட்டு அரசர் உயிருக்குயிராய்க் காதலித்தார். அவர் அந்த இளம்பெண்ணிடம் தன்னுடைய காதலைச் சொல்ல, இவர் ஏற்றுக்கொண்டார். இதனால் அந்த இளம்பெண் அந்நாட்டு அரசரின் உடைமைக்கெல்லாம் அதிபதி ஆனாள். அதனால்தான் அவளால் விலையுயர்ந்த ஆடைகளையும் நகைகளையும் அணிய முடித்தது. கடவுளும்கூட நம்மீது பேரன்பு கொண்டு நம்மைத் தேடி வருகின்றார். நாம் அவரை, அவருடைய அன்பை ஏற்றுக்கொண்டோமெனில், அவரிடமிருந்து மீட்பையும் எல்லாவிதமான ஆசிகளைப் பெற்றுக்கொள்வோம்.”

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், ஆண்டவராகிய கடவுள், உலகம் முழுவதும் மீட்பை அடைய, தன் ஊழியரைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்தியதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. கடவுள் தருகின்ற மீட்பை எப்படி அடைவது என்பதைக் குறித்தும் இறைஊழியரைக் குறித்தும் இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் இறைஊழியரை அழைத்தல்

இன்றைய முதல் வாசகமானது இறைஊழியரைப் பற்றி அல்லது துன்புறும் ஊழியரைப் பற்றிய, இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறுகின்ற நான்கு பாடல்களுள் ஒன்றாக இருக்கின்றது. இந்த ஊழியர் இறைவாக்கினர் எசாயாவாகவும் இருக்கலாம், மெசியாவாம் இயேசுவுவாகவும் இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. இது ஒருபக்கம் இருக்க, இந்த இறை ஊழியரைப் பற்றிச் சொல்லப்படுகின்ற முதன்மையான செய்தி, கருப்பையில் இருக்கும்போதே, அல்லது தாயின் வயிற்றில் உருவாக்கும்போதே கடவுளை அவரை அழைத்தார் என்பதாகும். கடவுள் இறைஊழியரைக் கருப்பையில் இருக்கும்போதே அழைத்தார் எனில், அவர் இறைஊழியராக இருந்தாலும், மனிதராகப் பிறந்தார் என்று மறைமுகமாகச் சொல்லப்படுகின்றது. இயேசு இறைமகனாக இருந்தாலும், ஒரு பெண்ணின் வழியாகப் பிறந்தார் என்பதை இங்கு நாம் இணைத்துப் பார்த்துக்கொள்ளலாம்.

சிதறுண்ட மக்களை ஒன்று திரட்ட இறைஊழியர் அழைக்கப்படல்

தாயின் கருப்பையில் இருக்கும்போதே, இறைவன் இறைஊழியரை அழைத்தார் எனில், அவரை ஒரு சிறப்பான பணிக்காக அழைத்தார் என்றுதான் சொல்லவேண்டும். அதுதான் யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும் சிதறுண்ட மக்களை ஒன்றுதிரட்டுவதுமாகும். இவ்வார்த்தைகளை இயேசுவோடு அப்படியே பொருத்திப் பார்த்தால் பொருள் விளங்கும். இயேசு தன்னுடைய பணிவாழ்வின் மூலம், தன்னுடைய பாடுகளின்மூலம் இரு இனத்தவரையும் ஓருடலாக்கி கடவுளோடு ஒப்புரவாக்கினார் (எபே 2: 16). இவ்வாறு இயேசு பல்வேறு காரணங்களால் சிதறுண்ட மக்களை ஒன்றுதிரட்டி அவர்களை ஓருடலாக்கினார்.

உலகம் முழுவதும் இறைவன் தரும் மீட்பினைக் காண இறைஊழியர் அழைக்கப்படல்

இறைஊழியர் இன்னொரு காரணத்திற்காகவும் இறைவனால் அழைக்கப்பட்டார் என்று முதல் வாசகம் எடுத்துச் சொல்கிறது. அதுதான் உலகம் முழுவதும் மீட்பினைக் காணவேண்டும் என்பதாகும்.

யூதர்கள் தாங்கள்தான் மீட்புப் பெறத் தகுதியுடையவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள் (லூக் 13: 23). உண்மையில், யூதர்கள் மட்டுமல்ல, எல்லாரும் மீட்புப் பெறவேண்டும் என்பதுதான் இறைவனுடைய திருவுளம். இதற்காக அவர் தன்னுடைய ஊழியரை பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்தி, யூதர்கள் மட்டுமல்லாது, எல்லா மக்களும் தான் வழங்கும் மீட்பினை அடைவதற்கு வழிவகுக்கின்றார். இறை ஊழியரும் – இயேசுவும் எல்லா மக்களும் மீட்பு அடைவதற்கு வழிவகை செய்கின்றார்.

கடவுள் எல்லா மக்களுக்கும் மீட்பினை வழங்கத் தயாராக இருக்கின்றார் என்றால், நாம் அதைப் பெற்றுக்கொள்வதற்கு அவருடைய வழியில் நடப்பதே சாலச் சிறந்த ஒன்று. எனவே, நாம் அவர் தருகின்ற மீட்பினைப் பெற அவருக்கு ஏற்ற வழியில் நடக்க முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘எல்லார் மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்’ (1 திமொ 2: 4) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் அனைவரும் மீட்புப் பெற விரும்பும் இறைவனிடம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, திரும்பி வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்