26 மார்ச் 2020, வியாழன்

விடுதலைப் பயணம் 32: 7-14

தவக்காலம் நான்காம் வாரம் வியாழக்கிழமை

விடுதலைப் பயணம் 32: 7-14

மன்னிக்கும் இறைவன்

நிகழ்வு


அது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் வயதான குருவானவர் ஒருவர் பங்குத்தந்தையாக இருந்தார். ஒருநாள் அவரைப் பார்ப்பதற்காக பெண்ணொருவர் வந்தார். அவர் ஒருகாலத்தில் மிகவும் பாவியாக வாழ்ந்துவந்தவர். அப்படிப்பட்டவர் பங்குத்தந்தையின் அறிவுரையால் தொடப்பட்டு, திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்தார்.

அவர் பங்குத்தந்தையிடம், “சுவாமி! கடந்த காலத்தில் நான் செய்த பாவத்தையெல்லாம் இறைவன் மன்னித்திருப்பாரா? இல்லை அதனை நினைவில் வைத்திருப்பாரா...? தயவுசெய்து சொல்லுங்கள்... இல்லையென்றால் என் மண்டையே வெடித்திருக்கும் போலிருக்கின்றது” என்றார். உடனே அந்த வயதான பங்குத்தந்தை, “ஒருவேளை இப்பொழுது இயேசு உன்னிடத்தில் பேசுகின்றார் என்றால், அவர் உன்னிடம் ‘உன்னுடைய வேலையைப் பார்த்துக்கொண்டு போ’ என்றுதான் சொல்வார்” என்றார்.

வந்திருந்த பெண்மணி ஒன்றும் புரியாமல் பங்குத்தந்தையை மேலும் கீழும் பார்த்தார். அப்பொழுது பங்குத்தந்தை அவரிடம், “ஆண்டவராகிய கடவுள் உன்னுடைய பாவங்களை எல்லாம் மன்னித்து, அவற்றையெல்லாம் ஆழ்கடலில் அமிழ்த்திவிட்டார். மட்டுமல்லாது, ‘இங்கு மீன்பிடிக்கக்கூடாது’ என்றொரு பலகையையும் அந்தக் கடலுக்கு முன்பு வைத்துவிட்டார். அப்படியிருக்கும்பொழுது நீ உன்னுடைய பழைய பாவத்தையே நினைத்துக்கொண்டிருந்தால் அல்லது மீன்பிடிக்கக்கூடாது என்று பலகை வைக்கப்பட்ட பிறகும் அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தால், ‘போய் உன் வேலையைப் பார்’ என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வார்?” என்றார்.

இதைக் கேட்ட அந்தப் பெண்மணி, ‘இறைவன் உண்மையிலேயே தன்னுடைய பாவத்தை மன்னித்துவிட்டார்’ என்ற மகிழ்ச்சியில் மனநிம்மதியோடு தன்னுடைய வீட்டிற்குச் சென்றார்.

ஆம், இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிக்கின்றார்; மன்னிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை மறக்கவும் செய்கின்றார். இன்றைய முதல் வாசகம் இறைவனின் மன்னிக்கின்ற குணத்தை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இஸ்ரயேல் மக்களின் நன்றிகெட்டதனம்

விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், மோசே இறைவனோடு சீனாய் மலையில் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, மலைக்குக் கீழிலிருந்த இஸ்ரயேல் மக்களோ, மோசேக்கு என்னவாயிற்றோ என்று பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து, அதை வழிபடத் தொடங்குகின்றார்கள். மட்டுமல்லாமல், அந்தக் கன்றுக்குட்டியே தங்களை எகிப்திலிருந்து மீட்டுவந்ததாகச் சொல்லிக்கொள்கின்றார்கள்.

ஆண்டவராகிய கடவுள் தன் ஊழியன் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களிடம், “நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்; என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது” (விப 20: 1-3) என்று சொல்லியிருந்தார். இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உண்மையாக இருந்திருந்தால் அல்லது அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருந்திருந்தால், பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து வழிபட்டிருக்கக்கூடாது; ஆனால், அவர்களோ பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து வழிபடத் தொடங்கினார்கள். இதன்மூலம் அவர்கள் ஆண்டவருக்கு உண்மையில்லாதவர்களாகவும் நன்றிமறந்தவர்களாகவும் ஆனார்கள். இதனால் கடவுளின் சினம் அவர்கள்மேல் பொங்கி எழுகின்றது; அவர் இஸ்ரயேல் மக்களை அழித்தொழிக்கப்போவதாகச் சொல்கின்றார்.

ஆண்டவரின் மன்னிக்கும் குணம்

தனக்கு உண்மையில்லாமலும் நன்றியுணர்வு இல்லாதவர்களாகவும் மாறிப்போன இஸ்ரயேல் மக்கள்மீது, ஆண்டவரின் சினம் பொங்கி எழுந்தபொழுது, மோசே இஸ்ரயேல் மக்களுக்காக அவரிடம் பரிந்துபேசுகின்றார். ஆம், சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த இயேசு தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களைக் குறிப்பிட்டு, தந்தைக் கடவுளிடம், ‘தந்தையே இவர்களை மன்னியும்’ என்று சொன்னதுபோல, இஸ்ரயேல் மக்கள் செய்த குற்றங்களை மன்னிக்குமாறு மோசே ஆண்டவரிடம் கெஞ்சிக் மன்றாடுகின்றார்.

மோசே இறைவனிடம் இவ்வாறு மன்றாடுகின்றபொழுது, இரண்டு கருத்துகளைச் சொல்லி மன்றாடுகின்றார். ஒன்று, கடவுள் இஸ்ரயேல் மக்களை பாலைநிலத்தில் கொன்றுபோட்டுவிட்டால், பிற இனத்தவர் அவரைப் பற்றி தவறாகப் பேசுவர் என்பதையும், இரண்டு, கடவுள் ஆபிரகாமிற்கும் ஈசாக்கிற்கும் கொடுத்த வாக்குறுதியையும் சொல்லி மன்றாடுகின்றார். இந்த இரண்டு கருத்துகளையும் முன்வைத்து, மோசே இறைவனிடம் மன்றாடியதும், இறைவன் இஸ்ரயேல் குற்றங்களை மன்னித்து, அவர்களை ஒன்றும் செய்யாமல் விடுகின்றார்.

இங்கு நாம் நம்முடைய கொள்ளவேண்டிய செய்திகள் இரண்டு. ஒன்று, இறைவனுக்கு எப்பொழுதும் நாம் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கவேண்டும். இரண்டு, இறைவன் நமக்குச் செய்த நன்மைகளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும். இந்த இரண்டையும் நாம் நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்த்து, ஒருவேளை நாம் அப்படியில்லாமல் என்றால், நம்முடைய வழியிலிருந்து திருந்தி இறைவனுக்கு நம்பிக்கைக்குரியவர்களாகவும் நன்றியுள்ளவர்களாகவும் இருப்போம்.

சிந்தனை

‘அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப்போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார்’ (மீக் 7: 19) என்பார் மீக்கா இறைவாக்கினர். ஆகையால், நம்மீது இரக்கம் கொள்கின்ற, நம்முடைய குற்றங்களை மன்னிக்கின்ற ஆண்டவருக்கு நன்றியுள்ளவர்களாக, அவருடைய வழியில் நடக்கின்றவர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.