திங்கள்கிழமை
பொதுக்காலம் மூன்றாம் வாரம்
திங்கள்கிழமை
மாற்கு 3: 22-30
“
இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது”
நிகழ்வு
நகர்புறத்தில் தன்னுடைய தாத்தா பாட்டியோடு வளர்ந்துவந்த பேரன், ஒருநாள் தன் தாத்தாவிடம், “தாத்தா! மற்றவர்கள் என்னை அவமானப்படுத்தினால், அதை நான் எப்படி எதிர்கொள்வது?” என்று கேட்டான்.
உடனே தாத்தா தனது அறிவுக் களஞ்சியத்திலிருந்து அவனுக்கு அற்புதமான ஒரு பதிலைத் தந்தார், “யாராவது உன்னை அவமானப்படுத்தினால், முதலில் அதை நிராகரித்துவிடு. முடியாவிட்டால் சிரித்துக்கொண்டே கடந்துவிடு. ஆனால், அந்த அவமானம் ஒருவகையில் அவசியம் என்று தோன்றினால், அதுதரும் வலிகளையும் வேதனைகளையும் விட்டுவிட்டு, பாடத்தை மட்டும் எடுத்துக்கொள்”.
நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கின்ற அவமானங்கள், விமர்சனங்கள் போன்றவற்றை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது குறித்தான தெளிவைத் தரும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
மக்களோ மலைத்துபோய் நிற்க, மறைநூல் அறிஞர்கள் இயேசுவிடம் குற்றம் கண்டுபிடித்தார்கள்
நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு பார்வையற்றவரும் பேச்சற்றவருமான ஒருவரிடமிருந்து பேயை ஓட்டுகின்றார். இயேசு செய்த இந்த அருமடையாளம் மக்கள் மத்தியில் இருவேறு விதமான எதிர்வினைகளைப் புரியச் செய்கின்றது. இயேசு செய்த இந்த அருமடையாளத்தைப் பார்த்து மக்கள் மலைத்துப்போய், “தாவீதின் மகன் இவரோ” என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞரோ, “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும் “பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சுற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.
இயேசு பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஒட்டுவதாக மறைநூல் அறிஞர்கள் சொல்கிறார்களே, உண்மையில் ‘யார் இந்த பெயல்செபூல்?’ இயேசு பெயல்செபூலைக் கொண்டுதான் பேய்களை ஓட்டுகிறாரா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.
பெயல்செபூல் என்றால் வீட்டுத்தலைவன் (master of the house) என்பது பொருள். இந்த பெயல்செபூலைக் குறித்து அரசர்கள் 2 ஆம் புத்தகம், முதல் அதிகாரத்தில் நாம் வாசிக்கின்றோம். இந்த பெயல்செபூல், எக்ரோனின் தெய்வம். யூதர்களுக்குத்தான் புறவினத்தாரைக் கண்டால் ஆகாதே, இதில் அவர்கள் வணங்கக்கூடிய தெய்வத்தை மட்டும் அவர்களுக்குப் பிடித்துவிடுமா என்ன! இயேசுவை இந்த பெயல்செபூலைக் கொண்டுதான் பேய்களை ஒட்டுவதாக மறைநூல் அறிஞர்கள் இயேசுவின்மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
மறைநூல் அறிஞர்கள் முன் வைத்த வாதத்தில் இருந்த அடிப்படைப் பிழை
தான் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டுதான் பேய்களை ஓட்டுவதாகச் சொன்ன மறைநூல் அறிஞர்களிடம், இயேசு “தனக்கு எதிராகத் தானே பிளவுபவும் எந்த வீடும் நிலைத்து நிற்கமுடியாது” என்ற அடிப்படை உண்மையைச் சொல்லி, சாத்தான் ஒருபோதும் தனக்கெதிரான தந்திர வேலையில் ஈடுபடாது, மேலும் தன்னுடைய வீழ்ச்சியிலும் அது மகிழ்வுறாது. அப்படியிக்க, மறைநூல் அறிஞர்கள் சொல்வதுபோன்று தான் எப்படி பேய்களின் தலைவனான பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்ட முடியும்?. என்பதுதான் இயேசு முன்வைக்கின்ற ஆணித்தரமான பதிலாக இருக்கின்றது.
அடுத்தாக, ஒருவரை அல்லது அவருடைய செயல்பாடுகளை விமர்சிக்கின்றபோது, விமர்சிப்பதற்கான அப்படித் தர்மமாவது கடைபிடிக்கவேண்டும். மறைநூல் அறிஞர்களைப் பொறுத்தளவில் அவர்கள் எந்தவிதவிதத்திலும் அடிப்படை தர்மத்தைக்கூட கடைபிடிக்காமல், கண்மூடித்தனமாக இயேசுவை விமர்சித்தார்கள் என்பதுதான் அப்பட்டமான உண்மை. இன்றுகூட பலர், இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த மறைநூல் அறிஞர்களைப் போன்று பலரையும் விமர்சிப்பது மிகவும் வேதனையாகவும் அதே நேரத்தில் வேடிக்கையாகவும் இருக்கின்றது. இப்படிப்பட்டவர்கள் திருந்தி நடப்பது நல்லது
மன்னிக்க முடியாத குற்றம்
மறைநூல் அறிஞர்கள் இயேசுவை நோக்கி வைத்த குற்றச்சாட்டுக்கு சரியான பதிலடி கொடுத்த இயேசு கடைசியில், “தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்” என்கின்றார். இயேசு ஏன் இவ்வாறு சொல்கின்றார் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு திருச்சபையை வழிநடத்திச் செல்லக்கூடியவர் தூய ஆவியார். அவர் சாதாரணமானவர் அல்ல, துணையாளர்; தமதிருத்துவத்தின் மூன்றாம் நாள். அப்படியிருக்கும்போது அவரைப் பழித்துரைப்பவருடைய பாவங்கள் எப்படி மன்னிக்கப்படும்!.
சிந்தனை
கேலிச் சித்திர நிபுணர் ஆண்ட்ரு மேத்யூஸ் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், “காற்று புழுதியை வாறி இறைத்தால், அதைப் பழிவாங்குவீர்களா? அல்லது பறவை தலையில் எச்சமிட்டால் அதை துரத்திப்பிடிப்பீர்களா?... இல்லைதானே. உங்களைத்தான் நீங்கள் தூய்மை செய்துகொள்வீர்கள். அப்படியிருக்கும்பொது மனிதர்கள் அறியாமையாலோ, அகங்காரத்தாலோ தீமை செய்தால் ஏன் பழி வாங்கத் துடிக்கிறீர்கள்? உங்களைச் சரிசெய்துகொண்டு போய்க்கொண்டே இருங்கள்” இது நாம் அனைவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும் ஒரு சேதி.
ஆகவே, நம்மீது சுமத்தப்படும் அர்த்தமற்ற விமர்சனங்களை இயேசுவைப் போன்று புறந்தள்ளுவோம்; இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.