28 சனவரி 2019, திங்கள்

ஜனவரி 28

ஜனவரி 28

 

எபிரேயர் 9:15, 24-28

 

தம்மையே பலியாகக் கொடுத்து நம் பாவங்களைப் போக்கிய இயேசு

 

நிகழ்வு

 

         புதிதாகத் திருமணம் முடிந்திருந்த ஒரு தம்பதியர் ‘விருந்துச் சாப்பாடு’ சாப்பிடுவதற்காக நெருங்கிய உறவினர் ஒருவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தனர்.

 

உறவினர் வீட்டில் விருந்து மிகவும் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுமணத் தம்பியரை இன்முகத்தோடு வரவேற்ற உறவினர், அவர்களை மிகவும் அழகுபடுத்தப்பட்ட விருந்து மேசையின் முன்பாக அமரவைத்து உணவு பரிமாறினர். புதுமணத் தம்பதியரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட விருந்தினை மிகவும் அனுபவித்து உண்டு கொண்டிருந்தனர்.

 

அப்போது தனக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த கறிக்குழம்பினை மாப்பிளை தவறுதலாகக் கொட்டிவிட, அது வெள்ளைநிறத்தில் இருந்த மேசை விரிப்பினில் பட்டு மிகவும் அலங்கோலமானது. விருந்துக்கு அழைத்திருந்த உறவினர் வேகமாக வந்து, கறிக்குழம்பு பட்டுக் கறையான அந்த மேசை விரிப்பை ஒரு துணியை வைத்துத் துடைத்தபோதும், அதிலிருந்து கறைமட்டும் போகவே இல்லை. இதனால் மாப்பிளை ஒருவிதமான குற்ற உணர்வோடு விருந்தினை சாப்பிடு முடிந்தார்.

 

இதைக் கவனித்த உறவினர், “தம்பி! மேசை விரிப்பில் கறையாகிவிட்டதே என்று வருத்தப்படவேண்டாம், இதோ! அதை நன்றாகச் சோப்புப் போட்டு அலசிவிட்டால் கறை போய்விடப்போகிறது” என்று சொல்லிவிட்டு, உடனே சென்று சோப்புப் போட்டு அலசிவிட்டு, அதை முன்புபோல் மிகவும் அழகாகக் கொண்டுவந்தார். இப்போது மாப்பிளையின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கிவரத் தொடங்கியது.

 

இந்த நிகழ்வில், மேசையில் சிந்திய கறிக்குழம்பினை உறவினர் ஒரு துணியை வைத்துத் துடைத்தபோது, அது போகவேயில்லை. இதுபோன்றுதான் இஸ்ரயேல் மக்களிடைய இருந்த குருக்கள் மக்கள் செய்த பாவங்களுக்காகப் பலி ஒப்புப்கொடுத்தபோதும் அவர்களுடைய பாவக்கறை போகவில்லை. ஆனால், எப்படி உறவினர் மேசை விரிப்பினில் படிந்திருந்த கறையினை சோப்புப் போட்டுக் கழுவி தூய்மையாக்கினாரோ, அதுபோன்று ஆண்டவர் இயேசு தன்னுடைய இரத்தத்தையே பலிபொருளாகச் சிந்தித்து, நம் பாவங்கள் அனைத்தையும் போக்கி, நமக்கு விடுதலை வாழ்வினை வழங்கினார்.

 

முற்கால பலிகளும் இயேசுவின் பலியும்

 

         எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், இயேசு தன்னையே பலியாகச் செலுத்தி, நம் பாவங்கள் அனைத்தையும் போக்கியத்தையும், அவர் செலுத்திய பலியின் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசுகின்றார். நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

 

பழைய ஏற்பாட்டுக் காலத்தில், தூயகத்திற்குள் பலிசெலுத்தச் செல்லும் தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்தை எடுத்துச் சென்று, அதைக்கொண்டு பலிசெலுத்துவார். இதை அவர் ஒவ்வொரு ஆண்டும் செய்துவந்தார். இப்படிப்பட்ட பலி மக்களுடைய பாவங்களைப் போக்கியது என்று மக்கள் நம்பினார்கள். ஆனால், அது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், ஆண்டவர் இயேசு செலுத்திய பலி அப்படியல்ல, அவர் தன்னுடைய உடலை ஒரே ஒருமுறை தூய பலியாகச் செலுத்தி, நம்முடைய பாவங்களை எல்லாம் போக்கினார். இதனால் நாம் அனைவரும் மீட்கப்பட்டவர்கள் ஆனோம்.

 

மேலும் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தலைமைக்குரு இஸ்ரயேல் மக்களுடைய பாவங்களைப் போக்க பலி ஒப்புக் கொடுத்தார். இயேசுவோ இந்த உலக மக்கள் அனைவருடைய பாவங்களையும் போக்க தன்னுடைய உடலை பலியாக ஒப்புக்கொடுத்தார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பலி ஒப்புக்கொடுத்த தலைமைக்குரு தூயகத்திலிருந்து வெளியே வந்தார். இயேசு கல்வாரி மலையில் தன்னைப் பலியாகத் தந்ததும், விண்ணகத்திற்குச் செல்கின்றார்.

 

இவைதான் பழைய ஏற்பாட்டுக் காலப் பலிகளுக்கும் புதிய ஏற்பாட்டுக் கால அல்லது இயேசுவின் பலிக்கும் உள்ள வித்தியாசமாகும். இயேசுவின் பலியில் நம்மீதுகொண்ட உண்மையான அன்பும் தியாகவும் பரிவும் இருந்தது. பழைய ஏற்பாட்டுக் கால பலியில் அது இருந்ததா? என்பதுதான் சந்தேகம். ஆகையால், இயேசு இந்த மானுட சமூதாயத்தின் மீது கொண்டிருந்த அன்பினால், தன்னையே பலியாகத் தரமுன்வந்தது போன்று, நாம் ஒவ்வொருவரும் நம்மையே தூய, மாசற்ற பலியாகத் தரவேண்டும் என்பதுதான் நம்முன்னே இருக்கின்ற சவாலாக இருகின்றது. அத்தகைய சவாலினை நாம் எதிர்கொண்டு, நம்மையே நாம் இந்த மானிட சமுதாயத்திற்காகத் தருவதுதான் சிறப்பான ஒன்றாக இருக்கும்.

 

சிந்தனை

 

         “தன் நண்பருக்காக உயிரைத் தருவதை விடவும், சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” என்பார் இயேசு (யோவா 15:13). ஆகவே, நாமும் இயேசுவைப் போன்று பிறர் வாழ, நம்மையே தூய, மாசற்ற பலியாகத் தருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.