23 சனவரி 2019, புதன்

ஜனவரி 23

ஜனவரி 23

 

எபிரேயர் 7: 1-3; 15-17

 

அமைதியின் அரசரான மெல்கிசதேக்கு என்னும் இயேசு

 

நிகழ்வு

                 

சிலிக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையில் உள்ளது ஆண்டஸ் மலை. இம்மலையில் ஓங்கி உயர்ந்த இயேசுவின் சிலை ஒன்று, கையில் சிலுவையை ஏந்திய நிலையில் உள்ளது. இந்த இயேசுவின் சிலை எப்படி இங்கே வந்தது என்று நாம் அறிய முற்படுவோமேயானால் நமக்கு வியப்பாக இருக்கும்.

 

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சிலிக்கும் அர்ஜெண்டினாவிற்கும் இடையே நிலப்பிரச்சனை ஒன்று வந்தது. இரு நாட்டவருமே தனக்குத்தான் அந்த நிலம் சொந்தம் என்று பிரச்சனையில் ஈடுபட்டார்கள். ஒருகட்டத்தில் அவர்களுக்கு இடையே இருந்த பிரச்சனை முற்றி, போர்மூளும் அபாயம் ஏற்பட்டது.

 

இதைக் கவனித்த இருநாட்டு ஆயர் பெருமக்களும் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார்கள். இந்நிலையில்தான் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா வந்தது. எனவே இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவை அர்த்தமுள்ளவிதமாகக் கொண்டாடும் பொருட்டு, இருநாட்டு ஆயர் பெருமக்களும் இருநாட்டுத் தலைவர்களை அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்கள். பேச்சு வார்த்தை நல்லவொரு நிலையை எட்டி, சுமூகமான முடிவு ஏற்பட்டது.

 

இப்படி இருநாட்டவரும் பகைமையை மறந்து நல்லுறவு கொண்டதன் நினைவாக, போருக்காக தயார்செய்து வைக்கப்பட்ட படைக்கருவிகள் அனைத்தும் உருக்கப்பட்டு, கையில் சிலுவையை ஏந்திய நிலையில் இயேசுவின் சிலையானது வடிக்கப்பட்டது. அந்த சிலைதான் சிலிக்கும் அர்ஜென்டினாவின் எல்லைக்கும் இடையில் உள்ள ஆண்டஸ் மலையில் உள்ள இரும்பினாலான இயேசுவின் சிலையாகும்.

 

நம்மிடத்தில் உள்ள பகைமை, வெறுப்பு போன்றவற்றைக் களைந்து, எப்போதும் அமைதியில் திளைத்திட இயேசு அமைதியின் அரசராக இருந்து செயல்படுகின்றார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

 

யார் இந்த மெல்கிசதேக்கு?

 

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், அதன் ஆசிரியர் மெல்கிசதேக்குவைப் பற்றிப் பேசுகின்றார். யார் இந்த மெல்கிசதேக்கு? இவருக்கும் இயேசுவுக்கும் என்ன தொடர்பிருக்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.

 

முன்னதாக மெல்கிசதேக்குவைக் குறித்து தொடக்கநூல் 14:17-20 ல் ஒரு குறிப்பு வருகின்றது. அதில் அவர் சாலேம் நகரின் அரசர் எனவும், உன்னதக் கடவுளின் குரு எனவும் அரசர்களை வெற்றிகொண்டுவிட்டு திரும்பும் ஆபிரகாமை அவர் வாழ்த்துவதாகவும், ஆபிரகாம் அவருக்கு தன்னிடம் உள்ளத்தில் பத்தில் ஒரு பங்கைக் காணிக்கையாகத் தருவதாகவும் வருகின்றது. ஆனால் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியரோ இன்னும் ஒருபடி மேலே சென்று, அவரைக் குறித்து ஒருசில குறிப்புகளைத் தருகின்றார். அவைதான் அவர் நீதியின், அமைதியின் அரசர் என்பதும்,  வாழ்நாளுக்குத் தொடக்கமும் முடிவும் இல்லாதவர் என்பதும், கடவுளின் மகனுக்கு ஒப்பானவர் என்பதும் ஆகும்.

 

எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர், மெல்கிசதேக்குவைக் குறித்துச் சொல்கின்ற வார்த்தைகள் மெல்கிசதேக்கும் இயேசுவும் வேறு வேறு என்பதை நமக்குத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றன. இஸ்ரயேல் வரலாற்றில் யாரும் குருவாகவும் அரசராகவும் இருந்ததில்லை. ஆரோன் குருவாக இருந்தாலும் அவர் அரசராக இருக்கவில்லை. அதே போன்று தாவீது அரசராக இருந்தாலும் குருவாக இருக்கவில்லை. இயேசு ஒருவர் மட்டும்தான் குருவாகவும் அதுவும் ஏனைய குருக்களைப் போன்று அன்றி தன்னையே பலியாக ஒப்புக்கொடுக்கின்ற குருவாகவும், சாதாரண அரசராக இல்லாமல் நீதியின், அமைதியின் அரசராகத் திகழ்கின்றார்.

 

இங்கே மெல்கிசதேக்கு – இயேசு – எப்படி நீதியின், அமைதியின் அரசராகத் திகழ்கின்றார் என்ற ஒரு கேள்வி எழலாம். விவிலியத்தில் நீதியும் அமைதியும் இணைந்தே வருவதற்கான பல குறிப்புகள் இருக்கின்றன (எசா 32:17, திபா 72:7, 85:10). ஒன்றை நம்முடைய கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அமைதியைக் கொடுக்காத எந்தவொரு ஆட்சியும் நீதியான ஆட்சியாக இருக்க முடியாது. அதே நேரத்தில் நீதியில்லாமல் நடக்கும் எந்தவொரு ஆட்சியையும் அமைதியான ஆட்சியாக இருக்காது. இந்த உலகத்தில் நடக்கின்ற ஆட்சிகளைக் கவனித்துப் பார்த்தோமெனில் இங்கே எப்படிப்பட்ட ஆட்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது நமக்கு விளங்கிவிடும். இவற்றைப் போலில்லாமல், இவற்றுக்கு மாற்றாக இருக்கின்றது இயேசுவின் நீதியின் ஆட்சி, அமைதியின் ஆட்சி. அந்த வகையில் இதனை வழங்கக்கூடிய இயேசு நீதியின், அமைதியின் அரசர். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்து கிடையாது.

 

சிந்தனை

 

இயேசு இந்த மண்ணுலகத்தில் வாழ்ந்தபோது, சென்ற இடத்திலெல்லாம் அமைதியை ஏற்படுத்துபவராக இருந்தார். அது மட்டுமல்லாமல், சிலுவையில் யூதர்களுக்கும் புறவினத்தாருக்கும் இடையே இருந்த சுவற்றினை உடைந்து எல்லாரையும் ஒன்றாக்கி, அமைதிக்கு வித்திட்டார். இத்தகைய அரசரின் வழியில் நடக்கின்ற நாமும் அமைதிக்கான வழிகளை மேற்கொள்வதுதான் சாலச் சிறந்தது ஆகும்.

 

ஆகவே, இயேசுவைப் போன்று – மெல்கிசதேக்குவைப் போன்று – நாம் வாழும் இடங்களில் அமைதியை ஏற்படுத்துவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.