23 சனவரி 2019, புதன்

தான தர்மங்கள் செய்த தூய யோவான்

தான தர்மங்கள் செய்த தூய யோவான் (ஜனவரி 23)

நிகழ்வு

தூய யோவான் (John the Almsgiver) தான தர்மங்களில் மிகவும் சிறந்து விளங்கியதற்கு காரணமாக அமைந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வு.

ஒரு சமயம் அவர் ஆலயத்தில் அமர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தபோது பெண் ஒருவர் காட்சி தந்தார். பிற்காலத்தில்தான் தெரிந்தது அந்தப் பெண் வேறுயாருமல்ல அன்னை மரியாள் என்று. அவர் யோவானிடம், “நான்தான் விண்ணகத் தந்தையின் மூத்த மகள். என்மீது நீ பக்திகொண்டு, தான தர்மங்களைச் செய்து வந்தால், நான் உன்னை இயேசு கிறிஸ்துவுக்கு மிக நெருக்கமாக அழைத்துச் செல்வேன்” என்றார். அந்தப் பெண் – அன்னை மரியா - சொன்னதற்கிணங்க யோவான் ஏழை எளிய மக்களுக்கு தான தர்மங்களை வழங்கி வந்தார். அதனால் அவர் பிற்காலத்தில் புனிதராகும் பேறு பெற்றார்.

வாழ்க்கை வரலாறு

யோவான் 550 ஆம் ஆண்டினை ஒட்டி எபிபெனயுஸ் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பிற்காலத்தில் இவர் வளர்ந்து சைப்ரசின் ஆளுநராக உயர்ந்தார். மனைவி மக்கள் என்று இவர் மிகவும் சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருந்தபோது திடிரென்று ஒருநாள் இவருடைய மனைவியும் பிள்ளைகளும் இறந்து போனார்கள். இதனால் வாழ்க்கையை வெறுத்துப் போன யோவான் எல்லாவற்றையும் துறந்து, குருமடத்தில் சேர்ந்து குருவாக மாறினார். ஒருசில ஆண்டுகளில் இவர் அலெக்ஸ்சாந்திரிய நகரின் ஆயராக உயர்ந்தார்.

இவர் அலெக்ஸ்சாந்திரியா நகரின் ஆயராக உயர்ந்த பின்னர் ‘நிபந்தனை இன்றி தான தர்மங்கள் செய்வது’ என்பதை விருதுவாக்காக எடுத்துக்கொண்டு தேவையில் இருக்கின்ற எல்லாருக்கும் உதவி செய்திட திட்டம் தீட்டினார். அதற்காக அவர் நகரில் இருந்த ஏழை எளியவர்களுடைய பட்டியலைத் தயாரித்தார். வாரத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமையை அவர்களுக்காக ஒதுக்கி அவர்களுடைய வாழ்வு ஏற்றம் பெற அவர் கடுமையாக உழைத்தார்.

யோவான் ஏழை எளியவர்மீது மட்டுமல்லாமல் நோயாளிகள்மீதும் அதிக அன்பும் அக்கறையும் காட்டி வந்தார். வீட்டில் இருந்த நோயாளிகளையும் மருத்தவமனையில் இருந்த நோயாளிகளையும் சந்தித்து, அவர்களிடம் ஆறுதலாகப் பேச அவர் தவறியதே இல்லை. யோவானிடம் இருந்த மற்றொரு சிறப்பான குணம் அவர் எல்லாரையும் சமமாகவே பார்ப்பதுதான். இதனால் அவரை யாரும் எந்த நேரத்திலும் எளிதாய் அணுகி வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இவ்வாறு ஏழைக்குப் பங்களானாக வாழ்ந்து வந்த யோவான் பெர்சிய நாட்டுப் படை அலெக்ஸ்சாந்திரியாவின் மீது படையெடுத்து வந்தபோது அதில் அவர் நாடுகடத்தப் பட்டு சைப்ரசிற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவர் 614 ஆம் ஆண்டு நோய் வாய்ப்பட்டு இறந்துபோனார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

யோவானின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஏழைகளுக்கு உதவுதல்

யோவான் தான் வாழ்ந்த காலத்தில் ஏழை எளியவருக்கு இரங்கிடும் நல்ல மனதினைக் கொண்டிருந்தார். அதனாலேயே அவர் John the Almsgiver – தான தர்மங்களை வழங்கும் யோவான் - என்று அன்போடு அழைக்கப்பட்டார். யோவானின் விழாவைக் கொண்டாடும் நாம் நம்மோடு வாழக்கூடிய ஏழை எளியவர்களுக்கு இரங்கிடும் நல்ல மனதினைக் கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கூறுவார், “மிகச் சிறியோராகிய இவர்களுக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்று. (மத் 25:40). அப்படியானால் நாம் நம்மோடு வாழக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்கின்ற போது, தான தர்மங்கள் புரிகின்றபோது இயேசுவுக்கே– இறைவனுக்கே - உதவி செய்கின்றோம் என்பது உறுதியாகின்றது.

இத்தாலியில் பாசிச ஆட்சியைக் கொண்டுவந்த பெனிடோ முசோலினியின் சிறுவயதில் நடந்த நிகழ்வு இது.

முசோலினி சிறுவனாக இருந்தபோது அதிகாலையிலே எழுந்து படிப்பது வழக்கம். ஒருநாள் அவர் மிக மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்ததனால் காலை உணவையே மறந்து படிக்கும்நிலை உண்டானது. இதற்கிடையில் பள்ளிக்கூடத்திற்கு நேரம் வேறு ஆனதால், காலை உணவு சாப்பிடாமல் மதிய உணவை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

அன்றைக்குப் பார்த்து நேரம் மிக மெதுவாக நகர்ந்தது. பசி அவருடைய வயிற்றைக் கிள்ளியது. ஒருவழியாக மதிய உணவுவேளை வந்தபோது, அவர் உணவுப் பொட்டலத்தைப் பிரித்து சாப்பிடத் தொடங்கினார். அப்போது அவருடைய வகுப்புத் தோழன் ஒருவன் அவரையே உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்த முசோலினி அவனிடம், “உணவு வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு அவன், ஆமாம் என்று சொல்ல, தான் வைத்திருந்த மதிய உணவை அவனுக்கு அப்படியே கொடுத்துவிட்டார். அவன் அவரிடம் பதிலுக்கு, “உனக்கு உணவு வேண்டாமா?” என்று கேட்டபோது அவர், “இல்லை எனக்கு இன்றைக்குப் பசிக்கவே இல்லை” என்று சொல்லி சமாளித்தார்.

தான் பசியாய் இருந்தபோதும் தன் வகுப்புத் தோழன் பசியாய் இருப்பதைக் கண்டு உணவு கொடுத்த முசோலியின் இரக்கச் செயல் உண்மையிலே பாராட்டுக்குரியது. (இப்படி இரக்க குணத்தோடு இருந்த முசோலினி பிற்காலத்தில் அரக்க குணம் கொண்டவராக மாறியது யாராலும் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கின்றது)

இரக்ககுணம் நம் ஒவ்வொருவரையும் கடவுளுக்கு மிக நெருக்கமாக மாற்றும் என்பதுதான் உண்மை. ஆகவே தூய யோவானின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவர் எப்படி ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்தாரோ அதுபோன்று நாமும் நம்மோடு வாழ்கின்ற ஏழைகளுக்கு உதவி செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.