18 சனவரி 2019, வெள்ளி

ஜனவரி 18

ஜனவரி 18

 

எபிரேயர் 4: 1-5

 

 

இறைவன் அளிக்கும் ஓய்வு

 

நிகழ்வு

 

         மலையடிவாரக் கிராமமொன்றில் பணிசெய்து வந்த துறவி ஒருவர், ‘இங்கு தனிவொரு ஆளாக இருந்து பணிசெய்வது மிகவும் கடினமாக இருக்கின்றது, தன்னோடு பணிசெய்வதற்கு துணைக்கு ஓர் ஆளை  அனுப்பி வைத்தால் இன்னும் வசதியாக இருக்கும்’ என்று கடிதம் ஒன்றை எழுதி, அதை சபைத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

 

சபைத் தலைவரும் அதைப் படித்துப் பார்த்துவிட்டு, மறுநாள் தன்னுடைய சபையில் இருந்த இளந்துறவிகளை அழைத்து, கடிதத்தை வாசித்துக் காட்டி, “மலையடிவாரத்தில் பணிசெய்து வரும் துறவியோடு பணிசெய்வதற்காக உங்களில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறேன்” என்றார். இதைக் கேட்டுவிட்டு எல்லா இளந்துறவிகளும், “என்ன இவர், அவர் ஒரு துறவியைத்தானே கேட்டிருக்கிறார். இவர் எதற்கு ஐந்து துறவிகளை அனுப்புவதாகச் சொல்கிறார். இவருக்கு ஏதாவது ஆயிற்றா?” என்று முணுமுணுக்கத் தொடங்கினார்கள். அவர்கள் பேசியது சபைத் தலைவருடைய  காதில் விழுந்ததும், “நான் ஏன் ஐந்து துறவிகளை அனுப்பி வைக்கிறேன் என்று இப்போது உங்களுக்குப் புரியாது, பின்னர் புரியும்” என்றார்.

 

மறுநாள் சபைத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து துறவிகளும் மலையடிவாரத்தில் பணிசெய்து வந்த துறவியின் இருப்பிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். அது நீண்டதூரமாக இருந்தது. எனவே அந்த இடத்தை நோக்கி அவர்கள் மெல்ல நடந்து சென்றார்கள். அவர்கள் போகிற வழியில் ஓர் ஊர் வந்தது. அந்த ஊரில் இருந்த பெரியவர் ஒருவர், அந்த துறவிகளிடம் வந்து, “தம்பிகளா! எங்களுடைய ஊரில் இருந்த துறவி இன்று அதிகாலையில் இறந்துவிட்டார், அதனால் உங்களில் ஒருவர் எங்களோடு இருந்து எங்களுக்குப் பணிசெய்தால் நன்றாக இருக்கும். நல்ல சம்பளமும் தருகிறோம்” என்றார். உடனே அந்த ஐந்து இளந்துறவிகளில் ஒரு துறவி, “எதற்கு தூர தேசத்திற்குச் சென்று பணிசெய்யவேண்டும், இங்கேயே இருந்து மிக சவுரியமாகப் பணிசெய்வோம்” என்று அந்த ஊரிலேயே இருந்துவீட்டார்.

 

இப்போது ஐவரில் ஒருவர் போக, நான்கு பேர் ஆனார்கள். அவர்கள் நான்கு பேரும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும்போது, குதிரையில் வந்த அந்நாட்டு அரசர், அவர்களுக்கு முன்பாகக் குதிரையை நிறுத்தி, அந்தத் துறவிகளில் மிகவும் அழகாக இருந்த துறவியிடம், “என்னுடைய மகளுக்கு நல்லதொரு மாப்பிளை அமையவேண்டும் என்று நீண்ட நாட்களாக அலைந்துகொண்டிருக்கிறேன். உன்னிடத்தில் நான் எதிர்பார்க்கின்ற எல்லாப் பொருத்தமும் இருக்கிறது. என் மகளை நீ மணந்துகொள்வாயா?” என்று கேட்டார். அந்தத் துறவியும், “நல்ல வாய்ப்பைத் தவறவிடுவானேன்’ என்று அரசரோடு சென்று இளவரசியை மணந்துகொண்டான்.

 

இப்போது மூன்று பேர் ஆனார்கள். தொடர்ந்து அவர்கள் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது ஒரு தாயும் அவளுடைய இளவயது மகளும் இறந்துபோய் கிடந்த ஒருவருக்கு முன்பாக அழுதுகொண்டிருந்தார்கள். விசாரித்துப் பார்க்கையில் இறந்த அந்த மனிதர் பாம்பு கடித்து இறந்ததாகவும், அவருடைய இறப்புக்குப் பின்னால், அந்தக் குடும்பம் அனாதையாக நிற்பதும் தெரிய வந்தது. உடனே அந்த மூன்று துறவிகளில் ஒருவர் அவர்கள்மீது இரக்கம்கொண்டு, ‘இந்தக் குடும்பத்தை இனிமேல் நான் பார்த்துக்கொள்கிறேன்” அவர்களோடு இருந்துவிட்டார். இப்போது ஐந்து பேராக இருந்த துறவிகள், இரண்டு பேராக ஆனார்கள். சபைத் தலைவர் சொன்னது பலித்துவிடுமோ என்று அவர்கள் கதைத்துக் கொண்டே தொடர்ந்து நடந்து சென்றார்கள்.

 

ஓர் ஊரின் நுழைவாயிலை அவர்கள் அடைந்தார்கள். அங்கே கடவுள் இல்லவே இல்லை என்று அந்த ஊர்க்கார்கள் வாதாடிக்கொண்டிருந்தார்த்கள். அதைப் பார்த்த துறவிகளில் ஒருவர், “இவர்களுக்கு கடவுள் இருக்கிறார் என்று நான் நிரூபிக்கிறேன், அது மட்டுமல்லாமல், கடவுள் நம்பிக்கையாளர்களாக இந்த ஊர்க்காரர்களை நான் மாற்றுக் காட்டுகிறேன். நீ வேண்டுமானால் போ” என்று அவர்களோடு இருந்துவிட்டார். இப்போது ஐந்து துறவிகளில் ஒரே ஒரு துறவி மட்டும்தான் இருந்தார். அவர் தொடர்ந்து நடந்துசென்று, மலையடிவாரத்தை அடைந்து, அங்கிருந்த துறவியோடு தன் வாழ்நாள் முழுக்க பணிசெய்து வந்தார்.

 

வாழ்க்கைப் பயணத்தில், இலக்கை நோக்கி நடந்துபோய்க் கொண்டிருக்கின்ற நாம், ஒருசில காரியங்களில் மயங்கி அதிலே வாழ்வை முடித்துக்கொள்கிறோம். ஆனால், யார் ஒருவர் எத்தகைய சாவல் வந்தாலும், தன்னுடைய இலக்கை நோக்கி நடந்துசெல்கின்றாரோ, அவர் தன்னுடைய வாழ்வில் பெருமகிழ்ச்சியை அடைவார் என்பது உறுதி. அத்தகைய உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

 

இறைவன் தருகின்ற ஓய்வும், அதனைப் பெறுவதற்கான நமது தகுதியும்  

 

         இன்றைய முதல் வாசத்தில், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர், “கடவுள் தருகின்ற ஓய்வினை யாரும் இழந்துவிடக்கூடாது” என்று சொல்கிறார். இங்கே கடவுள் தரும் ஓய்வு என்பதை கானான் தேசத்தோடு ஒப்பிடலாம். இஸ்ரயேல் மக்கள், கடவுளோடு வாக்குவாதம் செய்தும், அவருடைய கட்டளைகளைக் கடைபிடியாமலும், கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இல்லாமல் இருந்து வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்தை பெறாமலே போனார்கள். நாமும் அப்படிப் பெறாமல் போகக்கூடாது என்பதற்காக எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கடவுளின் கட்டளையை கடைப்பிடித்து, அவருக்கு பிரமாணிக்கமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்.

 

சிந்தனை

 

         வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்தை/ ஓய்வை கடவுளின் கட்டளைக் கடைபிடிக்காமல் இஸ்ரயேல் மக்கள் இருந்தது போன்று நாம் இல்லாமல், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக அவர் தருகின்ற ஓய்வை, இளைப்பாற்றியை, அருளை நிறைவாய் பெறுவோம்.

 

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.