18 சனவரி 2019, வெள்ளி

தூய எமிலி

தூய எமிலி (ஜனவரி 18)

“மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கு செய்தீர்கள்” - இயேசு.

வாழ்க்கை வரலாறு

எமிலி, பிரான்ஸ் நாட்டில் உள்ள கையிலாக் என்னும் இடத்தில் 1797 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள், 12 ஆம் நாள் பிறந்தார். எமிலியின் குடும்பம் மிக வசதியான குடும்பம், அதனால் அவர் எந்ததொரு குறையுமில்லாமல் வளர்ந்துவந்தார். எமிலிக்கு 13 வயது நடக்கும்போது அவருடைய தாயார் அவரை பாரிசில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதற்காக கூட்டிச் சென்றார். அவர் எமிலியை பள்ளியில் சேர்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது, வரும் வழியில் துரதிஸ்டவசமாக இறந்துபோய்விட்டார். அப்போது எமிலி அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. தாய் இறந்துபோனதால், தந்தையின் பராமரிப்பிலேயே அவர் வளர்ந்து வந்தார்.

எலிமி தன்னுடைய படிப்பை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியபோது அவருடைய தந்தை அவருக்குத் திருமணம் முடித்து வைக்க திட்டமிட்டார். ஆனால், எமிலியோ தான் ஒருபோதும் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை, மாறாக ஆண்டவருக்காக தன்னை முழுவதுமாய் அர்ப்பணிக்கப் போகின்றேன் என்று சொல்லி தன்னுடைய கொள்கையில் மிக உறுதியாக இருந்தார். இதற்கிடையில் எமிலியின் தாய் வழித் தாத்தாவின் வீடும் சொத்துகளும் அவருக்கு வந்தது. அந்த வீட்டை தன்னுடைய சேவை மையமாக வைத்துகொண்டு எமிலி அங்கு வந்த நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் உதவிகள் செய்துவந்தார். எமிலியின் இத்தகைய போக்கு அவருடைய தந்தைக்கு சுத்தமாகப் பிடிக்கவே இல்லை. அப்படி இருந்தும் எமிலி தான் ஆற்றி வந்த சேவைகளை நிறுத்தாமல் 15 ஆண்டுகளுக்கும் மேல் செய்து வந்தார்.

எமிலி தன்னுடைய ஆன்ம ஆலோசகரான மெர்சியரிடம் அவ்வப்போது ஆலோசனைகள் கேட்டு வந்தார். அவருடைய ஆலோசனையின் பேரில் 1835 ஆம் ஆண்டு வளனாரின் அருட்சகோதரிகள் என்னும் சபையைத் தோற்றுவித்தார். அந்த சபையின் பிரதானப் பணியே நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதும் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வியறிவு புகட்டுவதும்தான். எமிலி தொடங்கிய சபையில் ஏராளமான பேர் சேர்ந்தார்கள். அதன்மூலம் அவர் நோயாளிகளைப் பராமரிக்கின்ற பணியையும் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியறிவு புகட்டுகின்ற பணியையும் மிகச் சிறப்பான முறையில் செய்து வந்தார். அதனால் குறுகிய காலகட்டத்திலே அவருடைய சபை பல்வேறு இடங்களுக்குப் பரவியது. இப்படி ஏழையரின் வாழ்வு ஏற்றம் காண தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்த எமிலி 1856 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1951 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய எமிலியின் நினைவு நாளைக் கொண்டாடும் இன்று, அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. ஏழை எளியவர்மீது அக்கறை

தூய எமிலி ஏழை எளியவர்மீது எந்தளவுக்கு அக்கறைகொண்டு வாழ்ந்துவந்தார் என்பதை அவருடைய வாழ்வை ஆழ்ந்து படிக்கின்றபோது நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது. திருமணம் செய்துகொள்ளாமலே ஏழையரின் வாழ்வு ஏற்றம்பெற அவர் தன்னை முழுதாய் அர்ப்பணித்தது நமக்கெல்லாம் வியப்பாக இருக்கின்றது.. இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், நம்மோடு வாழ்கின்ற ஏழை எளியவரிடத்தில் அக்கறை கொண்டு வாழ்கின்றோமா? அவர்களுக்காக நம்மை முழுதாய் அர்ப்பணிக்கின்றோமா? என்பதை எல்லாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பல நேரங்களில் ஏழை எளியவர் பற்றிய நம்முடைய பார்வையும் அவர்களைக் குறித்த நம்முடைய பேச்சுகளும் வேதனை அளிப்பது போன்று இருக்கின்றன. ‘ஏழைகள் அப்படி இருப்பது அவர்களுடைய தலைவிதி’ என்பது போன்ற பேச்சுகள் நம்மத்தியில் இருப்பது நாம் ஏழைகளைப் பற்றி எந்தளவுக்கு தவறான பார்வையைக் கொண்டிருக்கின்றோம் என்பதைக் குறித்துக் காட்டுவதாக இருக்கின்றது. இத்தகைய பார்வைகள் நம்மிடமிருந்து மறையவேண்டும்.

ஒருமுறை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவன் ஒருவன், திடிரென்று அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இழுத்துச் செல்லப்பட்டான். அவன் உதவி உதவி என்று எவ்வளோ கத்தினான். ஆனால், அவனைக் காப்பாற்றுவதற்கு யாருமே அங்கு இல்லை. அப்போது அந்த வழியாக வந்த அந்த மாணவனுடைய வகுப்பு ஆசிரியர், “ஆழமான இடத்திற்குச் நீச்சலடிக்கக் கூடாது என்று எத்தனை முறை வகுப்பில் சொல்லியிருந்தாலும் புரியவில்லையே உனக்கு, மரமண்டை, மரமண்டை” என்று அவனைத் திட்டத் தொடங்கினார். இதைக் கேட்டு கடுப்பான மாணவன், “உபதேசம் வேண்டாமையா; உதவிதான் வேண்டும்” என்று கூப்பாடு போட்டான். உடனே அந்த ஆசிரியர் ஆற்றில் குதித்து அவனைக் காப்பாற்றினார்.

ஆபத்தில் இருக்கின்ற அல்லது தேவையில் இருக்கின்ற ஒருவருக்கு உதவி வேண்டுமொழிய, நம்முடைய உபதேசம் தேவையில்லை என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம். இன்று நாம் விழாக் கொண்டாடும் தூய எமிலி வறிய நிலையில் இருந்தவர்களுக்கு வெறுமென உபதேசித்துக் கொண்டிருக்கவில்லை, மாறாக அவர்களுக்கு அக்கறையோடு உதவி செய்தார். அவரைப் போன்று தேவையில் இருப்பவர்களுக்கு உதவி செய்வோம், அதன்மூலம் கடவுளின் அன்பை இந்த உலகத்திற்கு எடுத்துச் சொல்வோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.