17 சனவரி 2019, வியாழன்

ஜனவரி 17

ஜனவரி 17

 

எபிரேயர் 3:7-14

 

ஆண்டவருக்கு செவிமடுப்போம், அதனால் வாழ்வடைவோம்

 

நிகழ்வு

 

         கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கடலில் சென்றுகொண்டிருந்த ஒரு பாய்மரக் கப்பல், போதிய காற்று இல்லாமல் தென் அமெரிக்காவிற்கு அருகே அப்படியே நின்றது. இதனால் அந்த கப்பலை ஓட்டிச்சென்ற மாலுமியும் பயணிகளும் செய்வதறியாது திகைத்தார்கள். நீண்ட நாட்கள் கடலில் காற்று வீசாமலே இருந்ததால், பயணிகள் தங்களோடு கொண்டுசென்ற உணவும் தண்ணீரும் தீர்ந்துபோக பசியாலும் தாகத்தாலும் வாடத் தொடங்கினார்கள். பயணிகளில் ஒருசிலர் ‘பசியைக்கூட அடிக்கிக் கொள்ளலாம், தாகத்திற்கு உப்புக் கரிக்கும் இந்த கடல்தண்ணீரையா குடிப்பது?’ என்று முணுமுணுத் தொடங்கினார்கள்.

 

இந்நிலையில் அந்த பாய்மரக் கப்பல் இருந்த பகுதி வழியாக பெரிய கப்பல் ஒன்று வந்தது. அதைப் பார்த்துவிட்டு, பாய்மரக் கப்பலில் இருந்த மாலுமி, பெரிய கப்பலில் இருந்த தளபதியைப் பார்த்து, “குடிக்க நல்ல தண்ணீர் இருக்கின்றதா? இங்கே நல்ல தண்ணீர் இல்லாமல் நாங்கள் செத்துக் கொண்டிருக்கின்றோம்” என்றார். அதற்கு பெரிய கப்பலில் இருந்த தளபதி, “உங்களிடத்தில் ஏதாவது ஒரு வாளி இருந்தால், அப்படியே அதைக் கீழே இறக்கி, நல்ல தண்ணீரைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்றார். பாய்மரக் கப்பலில் இருந்த மாலுமியோ, தான் சொல்வது பெரிய கப்பலில் இருக்கும் தளபதிக்குப் புரியவில்லை போலும் என்று மீண்டுமாக அதையே அவரிடத்தில் திருப்பிக் கேட்டார். அப்போதும் கப்பலில் இருந்த தளபதி அதையேதான் சொன்னார்.

 

இதைக் கேட்டு கடுப்பான பாய்மரக் கப்பலில் இருந்த மாலுமி, “என்ன இவன், நாம் ஒன்று கேட்க இவன் ஒன்று சொல்கிறானே” என்று மாலுமி கப்பலில் இருந்த தளபதியை திட்டத் தொடங்கினான். இதைப் பாய்மரக் கப்பலிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த  ஒரு பயணி அங்கு இருந்த ஒரு வாளியை எடுத்து, அதைக் கீழே கொண்டுசென்று, தண்ணீரை மொண்டு சுவைத்துப்பார்த்தான். அவனுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. ஏனெனில்  கப்பலில் இருந்த தளபதி சொன்னதுபோன்றே தண்ணீர் நல்ல தண்ணீராக இருந்தது.

கடலுக்கு நடுவில் எப்படி நல்ல தண்ணீர் கிடைத்தது என்று நாம் ஆச்சரியப்படலாம். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனெனில் அவர்கள் இருந்த பகுதி, அமேசான் ஆறு கடலில் முந்நூறு கிலோமீட்டருக்கு மேல் கலக்கக்கூடிய பகுதி.

 

நல்ல தண்ணீருக்கு மேலே இருந்துகொண்டு, நல்ல தண்ணீருக்கு அலைந்த அந்த பணிகளைப் போல் இறைவார்த்தை நமக்கு மிக அருகில், வாயில், இதயத்தில் இருந்தபோதும் (இச 30:14) அதன்படி நடக்காமலே இருப்பது மிகவும் வேதனையான ஒரு விஷயம். இத்தகைய சூழ்நிலையில் நாம் இறைவனின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்க இன்றைய முதல் வாசகமானது நமக்கு அழைப்புத் தருகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

 

நம் வாழ்வும் தாழ்வும் நாம் இறைவார்த்தையைக் கடைபிடிப்பதைப் பொறுத்தே!

 

         எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசத்தில் அதன் ஆசிரியர், “இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களானால்” என்று தொடங்குகின்றார். இவ்வார்த்தையை நாம் திருப்பாடல் 95 வது அதிகாரம், 7 லிருந்து 11 வரை உள்ள இறைவார்த்தைப் பகுதியோடு இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் இன்னும் அர்த்தம் விளங்கும். அங்கு  நாம் வாசிக்கின்றோம், “இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்” என்று. இஸ்ரேயல் மக்கள் எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்து, பலவாறு விதமான வேதனையை அனுபவித்து வந்தார்கள். இதைக் கண்டு இரக்கம்கொண்ட ஆண்டவராகிய கடவுள் அவர்கள்மீது இரக்கம்கொண்டு, அவர்களை பாலும் தேனும் பொழியக்கூடிய கானான்தேசத்திற்கு இட்டுச் சென்றார்.

 

ஆனால், இஸ்ரயேல் மக்களோ போகிற வழியிலே மெரிபாவிலும் மாசாவிலும் கடவுளுக்கு எதிராக முணுமுணுக்கத் தொடங்கினார்கள். இதனால் கடவுள் அவர்களிடம், “நான் அளிக்கும் இறைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்” என்கிறார். அதுபோலவே அவர்களுக்கு நடந்தது.

 

‘என்மீது அன்புகொள்பவர் என் கட்டளைகளைக் கடைபிடிப்பர்’ (யோவா 14:15) என்று இயேசு கூறுவதாக யோவான் நற்செய்தியாளர் கூறுவார். இஸ்ரயேல் மக்களுக்கு உண்மையான கடவுள்மீது அன்பு இல்லை, அதனாலேயே அவருடைய கட்டளையைக் கடைபிடிக்கவில்லை. அவர்கள் இறைவனுடைய கட்டளையைக் கடைபிடிக்காததால், இறைவனிடமிருந்து அருள் பெறாமலே போனார்கள்.

 

சிந்தனை

 

என் வார்த்தையைக் கேட்டு, இதன்படி நடக்கிற எவரும் பாறைமீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார் என்பார் இயேசு. நாம் இறைவனின் வார்த்தையைக் கேட்டு நடப்போம். அதன்வழியாக மண்ணகத்தில் வாழ்வாங்கு வாழ்வோம்.

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.