17 சனவரி 2019, வியாழன்

தூய வனத்து அந்தோனியார்

தூய வனத்து அந்தோனியார் (ஜனவரி 17)

நிகழ்வு

தூய வனத்து அந்தோனியார் காட்டிற்குச் சென்று, கடுந்தவம் மேற்கொண்டிருந்தபோது சாத்தான் அவரைக் கடுமையாகச் சோதித்தது. “இவ்வளவு சொத்து சுகங்களை எல்லாம் விட்டுவிட்டு, இந்தக் காட்டுக்குள் வந்து இப்படிக் கஷ்டப்படுவதா?. பேசாமல் இங்கிருந்து போய், சந்தோசமான வாழ்க்கை வாழ்” என்று சொல்லி சாத்தான் அவரை மிகவும் சோதித்தது. அத்தகைய தருணங்களில் வனத்து அந்தோனியார் சாத்தானிடம், “ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவைத் தவிர, வேறு செல்வம் எனக்குத் தேவையில்லை” என்று சொல்லி சாத்தானின் தந்திரங்களை எல்லாம் முறியடித்தார். சாத்தான் அவரை வெற்றிகொள்ள முடியாது என்பதை உணர்ந்து அவரிடமிருந்து விலகிச் சென்றது.

சாத்தான் அவரைவிட்டு விலகிச் சென்றதும், அவர் இறைவனைப் பார்த்து, “இறைவா! என்னுடைய சோதனை வேளைகளில் என்னைவிட்டு நீ எங்கே போனாய்?” என்று கேட்டார். அதற்கு அவர், “நான் உன்னருகில்தான் இருந்தேன், உனக்கு எந்தவொரு துன்பமும் வராமல் காத்திருந்தேன், இனிமேலும் காத்திடுவேன். ஆனால் என்னவனோ நீதான் என்னை அழைக்கவேயில்லை” என்றார்.

வாழ்க்கை வரலாறு

தூய வனத்து அந்தோனியார் கி.பி. 251 ஆம் ஆண்டு எகிப்தில் உள்ள கோமா என்ற இடத்தில் செல்வச் செழிப்பான ஒரு குடும்பத்தில் பிறந்தார். இவருடைய குடும்பத்திற்கு என்று ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலபுலன்கள் இருந்தன. ஆசிரியர்கள் இவருடைய இல்லத்திற்கே வந்து, இவருக்குப் பாடங்களைச் சொல்லிக்கொடுத்தார்கள்.

இவருக்கு பதினெட்டு வயது நடந்துகொண்டிருந்தபோது, ஒருநாள் இவர் ஆலயத்தில் இருந்தபோது குருவானவர் சொன்ன, “நீ நிறைவுள்ளவனாக இருக்க விரும்பினால், முதலில் போய் உன்னுடைய உடமைகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடும், பின்னர் வந்து என்னைப் பின்தொடரும்” (மத் 19:21) என்ற வார்த்தைகள் அவரை மிகவே பாதித்தன. எனவே, அவர் தன்னுடைய வீட்டிற்கு வந்து, தனக்குச் சொந்தமான 3000 ஏக்கர் நிலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை தன்னுடைய தங்கைக்குக் கொடுத்துவிட்டு, மீத எல்லாவற்றையும் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, துறவற வாழ்க்கை மேற்கொள்ளத் தொடங்கினார். தொடக்கத்தில் வனத்து அந்தோனியார் தன்னுடைய ஊருக்கு அருகிலேயே துறவற வாழ்க்கையை மேற்கொண்டார். ஆனால், சாத்தானின் சோதனைகள் அங்கே அதிகமாக இருந்ததால் அவர் காட்டிற்குச் சென்று, தனியான ஓர் இடத்தில் தவ வாழ்வினை மேற்கொண்டார். கத்தோலிக்கத் திருச்சபையில் துறவு வாழ்க்கைக்கு வித்திட்டவர் இவர்தான் என்று சொன்னால் அது மிகையாது.

இவருடைய துறவு வாழ்க்கையைப் பார்த்த இளைஞர்கள் பலர் இவரிடத்தில் சீடராகச் சேர்ந்தார்கள். அதனால் இவர் தன்னுடைய 35 ஆம் வயதில் மேலும் இரண்டு துறவற மடங்களை நிறுவினார். அதில் ஜெபத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வந்தார். விவிலியத்தை ஆழமாக வாசித்து, அதனை தியானித்து வந்தார். கி.பி 311 ஆண்டு, ரோமையில் மாஜிமின் என்ற மன்னன் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டபோது, வனத்து அந்தோனியார் அங்கே சென்று, அவர்களைக் கிறிஸ்தவ விசுவாசகத்தில் வளர்த்தார். நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார். இப்படி கடுமையான பக்தி முயற்சிகளையும் தவ முயற்சிகளையும் மேற்கொண்டு வந்த வனத்து அந்தோனியார் கி.பி. 356 ஆண்டு தன்னுடைய நூற்று ஆறாம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய வனத்து அந்தோனியாரின் விழாவைக் கொண்டாடும் நாம், இவருடைய வாழ்விலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. பணமல்ல, பரமன் இயேசுவே நமக்கு நிம்மதியை, நிலைவாழ்க்கைத் தருவார்
தூய வனத்து அந்தோனியாரின் வாழ்க்கையை ஆழ்ந்து வாசிக்கின்றபோது ‘பணமல்ல, பரமன் இயேசுவே ஒருவருக்கு நிலைவாழ்வைத் தருவார்’ என்ற உண்மையை உணர்ந்து வாழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாது. அவர் ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவுக்காக எல்லாவற்றையும் இழந்தார், மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்துவந்தார். கிறிஸ்தவர்களாகிய நாம் யாருக்கு? எதற்கு? முக்கியத்துவம் தந்து வாழ்கிறோம் என்று ஆழமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பாப் இசை உலகில் மிகவும் பிரபலமானவர் ஜிம் ரீவ்ஸ் (Jim Reeves) என்பவர். அவர் சொல்லக்கூடிய செய்தி, “ஒருவருக்கு வேண்டிய மட்டும் பணம், பொருள், செல்வம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும். அப்போது அவர் உணர்ந்து கொள்வார், இவையெல்லாம் ஒருவருக்கு நிம்மதியைத் தராது’ என்று. இக்கூற்றிற்கு இவருடைய வாழ்க்கையே மிகப்பெரிய சான்றாக இருக்கின்றது.
ஜிம் ரீவ்ஸ் பாப் இசை உலகில் மிகவும் பிரபலமாக இருந்ததால், இவருக்கு ஏராளமான பணமும், பொருளும், புகழும் வந்து குவிந்தன. தொடக்கத்தில் இவற்றால் மிகவும் மகிழ்ச்சியடைந்த ஜிம் ரீவ்ஸ், போகப் போக இவற்றால் தனக்கு நிம்மதி இல்லை என்ற உண்மையை உணர்ந்தார். ஒருகட்டத்தில் வாழ்க்கையை வெறுத்துப்போன இவர், தற்கொலை செய்துகொள்ளத் துணிந்தார். அப்போதுதான் இவருடைய நண்பர் இவரைச் சந்தித்து, “இந்தப் புத்தகத்தை வாசி” என்று சொல்லி விவிலியத்தை வாசிக்கக் கொடுத்தார். அவர் விவிலியத்தைப் படித்தபிறகுதான், “இந்த உலகத்தில் இருக்கும் ஒருவருக்கு பணமோ, பொருளோ, செல்வமோ, புகழோ எதுவும் நிம்மதியைத் தரப்போவதில்லை, இறைவன் ஒருவரால் மட்டுமே ஒருவருக்கு நிம்மதியைத் தர முடியும் என உண்மையை உணர்ந்தார்.

“தூய வனத்து அந்தோனியாரும் கூட பணமில்ல, இறைவன் ஒருவரால் மட்டுமே தனக்கு நிம்மதியைத்தர முடியும் என்பதை உணர்ந்தார். அதனால்தான் அவர், “இவ்வுலக வாழ்வு நிலையற்றது, மேலுலக வாழ்க்கைப் பற்றி தியானிப்பது அதிக பயன்தருவது என்று அடிக்கடி சொல்லி வந்தார். அதன்படி வாழ்ந்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாமும் இறைவன் ஒருவரே நமக்கு நிலை வாழ்வினைத் தரமுடியும் என்ற உண்மையை உணர்ந்து வாழ்வோம்.

2. ஜெப தவ வாழ்வு

தூய வனத்து அந்தோனியார் ஜெபத்திற்கும் தவவாழ்விற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாது. அவர் தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியை ஜெப, தவவாழ்விலே செலவழித்தார்.

அவருடைய விழாவைக்கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஜெபத்திற்கு நீண்ட நேரம் ஒதுக்காவிட்டாலும் ஒருநாளைக்கு ஒரு மணிநேரமாவது செலவழிக்கலாம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, “ஒருமணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா?” என்று (லூக் 26:40). ஆம், ஒவ்வொருவரும் ஜெபத்தின் வழியாக இறைவனோடு இணைந்திருக்கவேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பமாக இருக்கின்றது. இன்றைக்கு மனிதர்களாகிய நாம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறோம், எதை எதையோ செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஜெபத்திற்கும், இறைவனோடு உறவாடுவதற்கும் போதிய நேரம் ஒதுக்குகிகிறோமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது.

ஆகவே, தூய வனத்து அந்தோனியாரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம், ஜெபம் நம்முடைய வாழ்விற்கு முக்கியத்துவம் என்பதை உணர்வோம், அதே நேரத்தில் இறைவனிடம் ஜெபிப்பதற்கு போதிய நேரம் ஒதுக்குவோம், இறைவன் ஒருவரால் மட்டுமே நமக்கு நிலைவாழ்வைத் தர முடியும் என்பதை உணர்ந்து வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

– Palay, Fr. Maria Antonyraj.