10 சனவரி 2019, வியாழன்

ஜனவரி 10

ஜனவரி 10

 

1யோவான் 4:19-5:4

 

தனக்குக் அடுத்திருப்பவரை அன்பு செய்யாதவன்,

ஆண்டவரையும் அன்பு செய்வதில்லை

 

நிகழ்வு

 

         முன்பொரு காலத்தில் ஆபிரகாம் என்றொரு யூத ராபி இருந்தார். அவரிடத்தில் ஒவ்வொருநாளும் ஏராளமான மனிதர்கள் வந்துபோனார்கள். அதற்குக் காரணம், அவர் மனிதர்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கு மிக நுட்பமான முறையில் தீர்வுசொல்லி வந்ததுதான்.

 

ஒருநாள் அவரிடத்தில் படித்த இளைஞர் ஒருவர் வந்தார். அவர் ராபியிடம், “ஐயா! வணக்கம். உங்களைக் குறித்து நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.  நீங்கள் உங்களிடத்தில் வருகின்ற யாவருக்கும் மிகத் தெளிவான முறையில் பதில்தந்து, அவர்களை மனநிம்மதியோடு அனுப்பி வைத்திருக்கிறீர்கள் என்று... இப்போது என்னுடைய வாழ்வில் ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. என்னிடத்தில் இறையச்சம் பெருக, நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். ஆனால், என்னிடத்தில் இறையச்சம் துளிகூட இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு நீங்கள்தான் ஒரு தீர்வு சொல்லவேண்டும்” என்றார்.

 

இளைஞர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த ராபி, “உங்களிடத்தில் இறையச்சம் பெருகச் செய்வதற்கு என்னிடத்தில் எந்தவொரு தீர்வும் இல்லை. ஆனால் இறையச்சத்தை விட மேலான ஒரு காரியம் இருக்கின்றது. அது உங்களிடத்தில் பெருகச் செய்ய என்னிடத்தில் அற்புதமான ஒரு வழிமுறை இருக்கின்றது” என்றார். இறையச்சத்தைவிட மேலான ஒரு காரியம் ஒன்று இருக்கின்றதா? அப்படியானால் அது என்னவென்று எனக்குச் சொல்லுங்கள். அது என்னிடத்தில் பெருகுவதற்கான வழிமுறையையும் சொல்லுங்கள்” என்று கெஞ்சி நின்றார் அந்த இளைஞர்.

 

உடனே ராபி அவரிடம், “இறையச்சத்தைவிட மேலான காரியம். இறையன்பு ஆகும். அந்த இறையன்பு உன்னிடத்தில் பெருகவேண்டும் என்றால், நீ உன்னோடு வாழக்கூடிய உன் சகோதர சகோதரியை அன்பு செய்” என்றார். ராபி சொன்ன வார்த்தைகளில் மன நிறைவு அடைந்த இளைஞர் அவருக்கு நன்றிசொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

 

இறையன்பும் பிறரன்பும் வேறு வேறு அல்ல, அவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நம்மிடத்தில் இறையன்பு பெருக, பிறரன்போடு இருக்கவேண்டும். பிறரன்பு பெருக இறையன்போடு இருக்கவேண்டும்.

 

சகோதரனை வெறுக்கின்றவன், சர்வேசுரனையும் வெறுக்கின்றான்

 

அன்பின் திருத்தூதர் என அழைக்கப்படும் யோவான், அன்பினை பல கோணங்களில் விவரித்து எழுதுகின்றார். இன்றைய முதல் வாசகத்தில் அவர், “கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லுக்கொண்டு தம் சகோதர சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதர சகோதரிகளிடத்தில் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது” என ஆணித்தரமாகச் சொல்கின்றார்.

 

ஆலய வழிபாடுகளில் கலந்துகொண்டுவிட்டு, ஒருசில பக்தி முயற்சிகளைச் செய்தாலே போதும், அது இறைவனை அன்பு செய்வதாகிவிடும். அப்புறம் உடன் வாழும் மனிதர்களை எப்படிவேண்டுமானாலும் நடந்திக்கொள்ளலாம் என்று பலர் இருந்தனர். இன்றைக்கும் அப்படிப்பட்ட மனநிலையோடு இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களைப் பார்த்துதான் யோவான் பொய்யர் என்று சொல்கின்றார். இதைத் தொடர்ந்து அவர் முன் வைக்கின்ற ஒரு வாதம்தான், கண் முன்னேயுள்ள சகோதர சகோதரிகளிடத்தில் அன்பு செலுத்ததோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது” என்பதாகும்.

 

இதற்கு இயேசு சொல்லக்கூடிய வரிதண்டுபவர், பரிசேயர் உவமையைக்கூட ஒரு மிகச் சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். பரிசேயரோ கடவுளை விழுந்து விழுந்து வணங்கினார். வாரத்திற்கு இருமுறை நோன்பிருப்பதாகும், பத்திலொரு பங்கைக் காணிக்கை தருவதாகவும் பிதற்றனார். ஆனால் ஆலயத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த வரிதண்டுபவரை மதிக்கவில்லை, அவரை அவதூறாகப் பேசினார். அதனாலேயே அவர் கடவுளை அன்புசெய்யாதவர் ஆனார், அவருடைய ஜெபம் இறைவனால் கேட்கப்படாமலே போனது. ஒருவேளை அந்த பரிசேயர், வரிதண்டுபவரோடு இணக்கமாக இருந்து, அவரைப் பற்றி நல்லவிதமான எண்ணத்தைக் கொண்டு இறைவனிடம் ஜெபித்திருந்தால்கூட, இறைவன் அவருடைய ஜெபத்தைக் கேட்டிருப்பார். ஆனால், அது நடக்கவில்லை. ஆகவே, கடவுளை அன்பு செய்வதாகச் சொல்வோர், தன்னோடு வாழக்கூடிய சகோதர, சகோதரிகளையும் அன்புசெய்யவேண்டும்.

 

சிந்தனை

 

படமாடும் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில், நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா. நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில், படமாடும் கோயில் பகவர்க்கு அது ஆமே” என்பார் ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த  திருமூலர். சக மனிதனுக்கு ஒன்று செய்யும்போது அது சர்வேசுரனுக்கே சென்று சேர்கின்றது என்பதுதான் இதன் பொருள்.

 

நாம் நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளை எந்தவொரு வேற்றுமை பாராட்டாமல் அன்பு செய்வோம். அதன்வழியாக இறைவனை அன்பு செய்பவர்கள் ஆவோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.