10 சனவரி 2019, வியாழன்

தூய லியோனி அவியாத்

தூய லியோனி அவியாத் (ஜனவரி 10)

“நாம் அனைவரும் இறைவனின் கையில் ஒரு சிறு கருவியாக இருந்து, அவருடைய விருப்பம் நம் வழியாய் செயல்பட நம்மையே நாம் அவரிடம் ஒப்படைப்போம்”.
- தூய லியோனி அவியாத்.

வாழ்க்கை வரலாறு

லியோனி அவியாத், 1844 ஆம் ஆண்டு, செப்டம்பர் 16 ஆம் நாள் பிரான்ஸ் தேசத்தைச் சார்ந்த தியோடர் அவியாத், எலிமி என்ற தாம்பதியரின் மகளாகப் பிறந்தார். இவர் தன்னுடைய தொடக்கக்கல்வியை ‘சிஸ்டர்ஸ் ஆப் விசிட்டேசன்’ சபையைச் சார்ந்த அருட்சகோதரிகள் நடத்தி வந்த பள்ளியில் பெற்றார். அங்கு இவர் வெறும் கல்வியை மட்டுமல்லாது, வாழ்விற்குத் தேவையான ஞானத்தையும் பெற்றுக்கொண்டார். பிற்காலத்தில் இவர் துறவியாக மாறுவதற்கும் ஏழைப் பெண்களுக்கு சேவை செய்வதற்கும் இங்கு அவர் கற்றுக்கொண்ட கல்வியும் பெற்றுக்கொண்ட பயிற்சியும்தான் பேருதவியாக இருந்தன என்று சொன்னால் அது மிகையாகாது. லியோனி அவியாத் மெல்ல வளர்ந்தபோது இறைவன் தன்னை தன்னுடைய பணிக்காக அழைக்கின்றார் என்பதை உணர்ந்து துறவற சபையில் சேர்ந்தார்.

இந்த காலகட்டத்தில்தான் ஐரோப்பாக் கண்டத்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டு ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக பெண்கள் அதிகமாகவே பாதிக்கப்பட்டார்கள். அவர்களுடைய வேலையும் அதனால் அவர்களுடைய வாழ்வாதாரமும் பறிபோனதால் அவர்கள் அழுது புலம்பினார். இதையெல்லாம் பார்த்த லியோனி அவியாத் இப்பெண்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தீர்மானித்தார், ஆனால் எப்படிச் செய்வது என்பதுதான் அவருக்குப் புரியாத புதிராகவே இருந்தது.

அப்போதுதான் அருட்தந்தை ப்ரிசோன் வேலையிழந்து நடுத்தெருவிற்குக் வந்த ஏழைப் பெண்களுக்கு ஓர் இல்லம் அமைத்து, அங்கு அவர்களைத் தங்க வைத்து, பயிற்சியும் அதன்மூலம் வேலைவாய்ப்பும் கொடுத்து வந்தார். தான் செய்ய விரும்பிய காரியங்களை எல்லாம் அருட்தந்தை ப்ரிசோன் செய்து வருவதைப் பார்த்து, அவரோடு தன்னை இணைத்துக்கொண்டு ஏழைப் பெண்கள் தங்களுடைய வாழ்வில் ஏற்றம் காண அவர்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தார். அப்படி உருவானதுதான் Congregation of the Oblate Sisters of St. Francis de Sales என்ற சபை.இச்சபையின் பிரதான நோக்கமே வேலைபார்க்கும் பெண்கள் தங்களுடைய வாழ்வில் ஏற்றம்காண வேண்டும் என்பதுதான். லியோனி அவியாத் தன்னை மறந்து அல்லும் பகலும் அவர்களுக்காகப் பாடுபட்டார். அதனாலேயே நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி 1914 ஆம் ஆண்டு, ஜனவரி 10 ஆம் நாள் இறந்து போனார். இவருக்கு 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 நாம் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. இன்றைக்கு இவர் ஏறபடுத்திய இச்சபை சமூகத் தளத்திலும், கல்வித்தளத்திலும் பல்வேறு பணிகளை மிகச் சிறப்பாகச் செய்துகொண்டிருந்தது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய லியோனி அவியாதின் விழாவைக் கொண்டாடும் இன்று, அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஏழையரின் வாழ்வை ஏற்றம்பெறச் செய்தல்

தூய லியோனி அவியாத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே அவர் எப்படி வேலைவாய்ப்பினை இழந்து, பெரிதும் கஷ்டப்பட்ட ஏழைப் பெண்கள் ஏற்றம் பெற உழைத்தாரோ அதுபோன்று, நாமும் நம்மோடு வாழக்கூடிய ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர், உரிமை மறுக்கப்பட்டோர் இவர்களிடம் வாழ்வு ஏற்றம் பெற உழைக்க வேண்டும் என்பதுதான். பலநேரங்களில் நாம் நம்மோடு வாழக்கூடிய, சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய கண்டும் காணாமலே வாழ்ந்துவருகின்றோம். இத்தகைய போக்கு நம்மிடமிருந்து அகற்றப்படவேண்டும். எல்லாரும் இன்பமான வாழ்வினைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு நாம் உழைக்கவேண்டும்.

இந்த இடத்தில் சமூக சேவகியான மேதா பட்கரைக் குறித்து நாம் சொல்லியாக வேண்டும். கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றிய அவர், கொடிய அரசாங்கம் நர்மதா ஆற்றின் குறுக்கே அணைகட்டி, அந்த ஆற்றின் ஓரங்களில் குடியிருந்த மக்களை அப்புறப்படுத்த முயன்றபோது, தன்னுடைய கண்டனக் குரலைப் பதிவு செய்தார், பல்வேறு அறப்போராட்டங்களின் மூலம் மக்களோடு மக்களானார். அதற்காக அவர் சந்திக்க பிரச்சனைகளும் ஏராளம். இருந்தாலும் மக்களோடு தான் எப்போதும் இருக்கின்றேன் என்பதை இன்றைக்கும் அவர் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றார். அவரைப் போன்று, இன்று நாம் விழாக் கொண்டாடும் லியோனி அவியாத்தைப் போன்று நாம் மக்களோடு மக்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

‘யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன், ஊருக்கே வாழ்ந்து உயர்பவன் புனிதன்’ என்று பழைய பாடல் வரி உண்டு. தூய லியோனி அவியாத் ஊருக்காக வாழ்ந்து புனிதையானவர், அவரைப் போன்று நாமும் நமக்காக வாழாமல், பிறருக்காக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.