புதன்கிழமை
திருக்காட்சிக்குப் பின்வரும் வாரம்
புதன்கிழமை
மாற்கு 6: 45-52
காக்கும் இறைவன்!
நிகழ்வு
மக்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கும் ஒரு சாலையை ஒட்டியிருந்த ஒரு நான்குமாடி கட்டிடத்தில் குடியிருந்து வந்தான் ராஜன். ஒருநாள் அவன் தூங்கி எழுந்தபோது, ஜன்னலிலிருந்து கிரிச், கிரிச் என சத்தம் வந்துகொண்டிருந்தது. என்ன சத்தம் என்று அவன் எழுந்து சென்று பார்த்தபோது, ஜன்னல் கதவில் வெளிப்பக்கமாக அடிக்கப்பட்டிருந்த ஆணி ஒன்று கழண்டிருப்பது தெரியவந்தது. முந்தின இரவில் அடித்த பேய்க்காற்றில்தான் ஆணி கழண்டிருக்கின்றது போலும் என யூகித்தவனாய், ‘இதனை உடனடியாக சரிசெய்தால்தான் நல்லது, இல்லையென்றால் இந்தச் சத்ததில் மனுஷன் நிம்மதியாக இருக்க முடியாது’ என நினைத்துக்கொண்டு, வீட்டில் இருந்த சுத்தியலைத் தேடி எடுத்துக்கொண்டு வந்து, கழண்டிருந்த ஆணியை மாட்டத் தொடங்கினான்.
அவ்வாறு அவன் ஆணியை ஜன்னல் கதவின் வெளிப்பக்கமாக அடித்துக்கொண்டிருந்தபோது, அவனுடைய கையில் இருந்த சுத்தியல் நழுவிக் கீழே விழுந்தது. உடனே அவன் அலறியடித்துக் கொண்டு, “ஐயையோ! ஜன்னல் இருக்கும் இடத்திக்கும் கீழே வயதான பெரியவர் ஒருவர் தள்ளுவண்டியில் பழங்களை விட்டுக்கொண்டிருப்பாரே, அவருடைய தலையில் சுத்தியல் விழுந்தால், அவருடைய கதி என்னாகுமோ” என்று கீழே ஓடிவந்தான்.
அவன் கீழே இறங்கி ஓடிவருவதற்கு சிறிதுநேரத்திற்கு முன்பாக, அங்கு வந்த ஒரு காவல்துறை அதிகாரி நடைபாதையில் யாரும் வியாபாரம் செய்யக்கூடாது என்று அவன் இருந்த அடுக்குமாடி கட்டிடத்திற்குக் கீழே இருந்த பெரியவர் உட்பட எல்லாரையும் விரட்டிக்கொண்டிருந்தார். இதனால் அந்த இடத்தைக் காலிசெய்துவிட்டு பெரியவர் வேறொரு இடத்திற்குப் போய்க்கொண்டிருந்தனர். ராஜன் கீழே இறங்கிப் பார்த்தபோது, பெரியவர் உட்பட யாருமே இல்லாதது கண்டும், எந்தவொரு ஆபத்தும் நடக்காதது கண்டும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டான்.
கடவுள்தான் இந்தக் காவல்துறை அதிகாரி மூலம் வீட்டிற்குக் கீழ் காய்கறி வியாபாரம் செய்து வந்த பெரியவரை எந்தவொரு ஆபத்தில்லாமல் வேறொரு இடத்திற்கு விரட்டியிருக்கிறார் என்று கடவுளுக்கு நன்றி சொல்லத் தொடங்கினான் ராஜன்.
கடவுள் தன் மக்களுக்கு எந்தவொரு ஆபத்தும் வராமல் காத்திடுவார் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு.
சீடர்களை அக்கரைக்கு அனுப்பிய இயேசு
நற்செய்தி வாசகத்தில், இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீனைகளையும் எடுத்து ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்த பின்னர், மக்களை அவர்களுடைய ஊர்களுக்கு அனுப்பிவைத்துவிட்டு, தன் சீடர்களை அக்கரைக்கு – அக்கரையில் உள்ள பெத்சாய்தாவிற்கு – அனுப்பி வைத்துவிட்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக மலைச் செல்கின்றார்.
இயேசு, மக்களையும் சீடர்களையும் ஏன் முன்கூட்டியே அனுப்பிவைக்கவேண்டும் என்று கேள்வி எழலாம். இதற்கான பதிலை நாம் யோவான் நற்செய்தி 6:14-15 ல் வரக்கூடிய இறைவார்த்தையோடு இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் விளங்கும். இயேசு அப்பங்களைப் பலுகச் செய்த பின்னர், ‘இவர்தான் வரவிருந்த மெசியா என்று மக்கள் அவரை அரசராக்க முயன்றார்கள் என்று யோவான் நற்செய்தியில் வாசிக்கின்றோம். இத்தகைய ஒரு நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இயேசு மக்களையும், அதே மனநிலையில் இருந்த சீடர்களையும் அக்கரைக்கு அனுப்பி வைக்கின்றார். அதன்பின்னர் இறைவனிடம் வேண்டுவதற்காக அவர் மலைக்குச் செல்கின்றார்.
சீடர்களுக்கு ஆபத்துக்கு என்றதும் அவர்களைக் காப்பாற்ற விரைந்து வந்த இயேசு
இயேசு இறைவனிடம் மலையில் வேண்டுதற்காகச் சென்றாலும் அவருடைய நினைப்பு எல்லாம் தன் சீடர்கள் பற்றியதாகவே இருக்கின்றது, அதனால்தான் அவர் தன் சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட இயேசு அவர்களுக்கு உதவி செய்வதற்காக விரைந்து வருகின்றார்.
பலநேரங்களில், இறைவன் நாம் நன்றாகக் கஷ்டப்படவேண்டும், ஆபத்தில் மாட்டிக்கொண்டு அலைகழிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறார் போலும் என்று நினைக்காலம். உண்மை இதுவல்ல. நம் இறைவன் ஆபத்தில் அபயம் தருபவராகவும் உடனிருப்பவராவும் இருக்கின்றார் என்பதே உண்மை. அதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்தான் இன்றைய நற்செய்தி வாசகம். இதில் இன்னொரு விசயமும் இருக்கின்றது. அது என்னவென்றால், இயேசு தன் சீடர்களுக்கு ஆபத்து ஒன்று உதவ வருகின்றார். ஆனால், சீடர்களோ இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாமல், அவரைப் பேயென நினைத்து அலறுகின்றார். அப்போதுதான் இயேசு அவர்களிடம், “துணிவோடிருங்கள். நான்தான், அஞ்சாதீர்கள்” என்று அவர்களுக்குத் திடமளிக்கின்றார்.
ஆகையால், நம்முடைய ஆபத்தான, இக்காட்டான வேளையில் இறைவன் நமக்கு உதவ வருகின்றார் எனில், அவரிடத்தில் நம்பிக்கை கொள்வதே சிறப்பு.
சிந்தனை
“அஞ்சாதே, நான் உனக்குக் கேடயமாக இருப்பேன்” (தொநூ 15:1) என்று ஆண்டராகிய கடவுள் ஆபிரகாமைப் பார்த்துச் சொல்வர். அதே வார்த்தையைத்தான் இறைவன் இன்றைக்கு நம்மையும் பார்த்துச் சொல்கின்றார். ஆகவே, நாம் அஞ்சாமல், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.