ஜனவரி 09
ஜனவரி 09
1யோவான் 4: 11-18
அன்புசெலுத்துவோரோடு கடவுள் இணைந்திருக்கின்றார்
நிகழ்வு
ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பன்னிரெண்டாம் வகுப்புப் படித்துவந்த மாணவிகளிடம், வகுப்பு ஆசிரியை ஒரு பொது அறிவுக் கேள்வியைக் கொடுத்து, இந்தக் கேள்விக்கான விடையை ஒரு நிமிடத்தில் எழுதித் தருவோருக்கு பரிசு உண்டு என்று சொன்னார். ஆசிரியை மாணவிகளிடம் கொடுத்த இதுதான்: “உங்களுக்குத் தெரிந்த ஏழு அதிசயங்களை எழுதுங்கள்”.
ஆசிரியை கொடுத்த இந்த கேள்விக்கான விடையை மாணவிகள், “கிசாவின் பெரிய பிரமிடு, பாபிலோனின் தொங்கு தோட்டம், ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை, மீட்பரான கிறிஸ்துவின் சிலை, கொலோசியம், சீனப் பெருஞ்சுவர், தாஜ்மகால்” என்று வேகமாக எழுதி, விடைத்தாளை ஆசிரியையிடம் கொடுத்தார்கள். ஒருசில மாணவிகள் ஏழு அதியசங்களில் ஒன்றிரண்டை விட்டிருந்தாலும்கூட, பெரும்பாலான மாணவிகள் ஏழு அதிசயங்களையும் எழுதி வைத்திருந்தார்கள்.
ஆனால், வகுப்பில் இருந்த ஒரே ஒரு மாணவி மட்டும் விடைத்தாளை ஆசிரியையிடம் கொடுக்காமல், தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள். அந்த மாணவியோ அமைதியானவள், வகுப்பில் இருக்கும் மற்ற மாணவிகளிடம் அவ்வளவாகப் பேசாதவள். அந்த மாணவியைக் கவனித்த ஆசிரியை அவளருகே சென்று கரிசனையோடு, “என்னம்மா, கேள்விக்கான விடை தெரியவில்லையா?, தெரியவில்லை என்றால் பரவாயில்லை, விட்டுவிடு” என்றார். “அப்படியெல்லாம் இல்லை மிஸ், அதிசயங்கள் என்று எவ்வளவோ இருக்கின்றன... அவற்றில் எவற்றையெல்லாம் எழுதுவது என்றுதான் யோசித்துக்கொண்டிருக்கின்றேன்” என்றாள்.
உடனே ஆசிரியை, “அப்படியாமா... சரி நீ அதிசயங்கள் என்று நினைத்து எழுதியவற்றை இப்போது வாசித்துக்காட்டு” என்றார். அந்த மாணவியும் சற்றுத் தயக்கத்துடனே, “தொடுதல், பார்த்தல், கேட்டல், ருசித்தல், உணர்தல், சிரித்தல், கடைசியாக அன்பு செலுத்துதல்” என்று வாசித்து முடிந்தாள். ‘அமைதியாக இருக்கும் இந்த மாணவி இப்படியெல்லாம் யோசிப்பாளா’ என்று அவளைப் பார்த்து வியந்துபோனா ஆசிரியை, அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு, எல்லா மாணவிகளையும் பார்த்து, “உண்மையில் அன்புதான் மேலான அதிசயம். இதை எழுதிய இந்த மாணவிக்குதான் நான் பரிசு தரப்போகிறேன்” என்றார். இதைக் கேட்ட வகுப்பில் இருந்த அத்தனை மாணவிகளும் எழுந்துநின்று அவளைப் பாராட்டினார்கள்.
ஆம், உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் இருந்தாலும், அன்பு ஒன்றுதான் மேலான அதிசயம்.
மேலான அதிசயமான அன்பைக் கொண்டிருப்போர் ஆண்டவரோடு இணைந்திருப்பர்
யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில், அன்பின் பல பரிமாணங்களை எடுத்துச் சொல்லிக்கொண்டே வருகின்றார். இன்றைய முதல் வாசகத்தில், “ஒருவர் மற்றவரிடத்தில் அன்பு செலுத்துவோர், கடவுளோடு இணைந்திருக்கின்றார். அப்படிப்பட்டவரிடத்தில் கடவுளுடைய அன்பு நிறைவாகத் தங்கும்” என்று சொல்கின்றார்.
அன்பு என்பது ஒரு சாதாரண வார்த்தை கிடையாது. அது செயல். அத்தகைய அன்பினை நம்முடைய உள்ளத்தில் கொண்டு, அதனை வாழ்வாக்குகின்றபோது, அன்பின் வடிவமாக, அன்பாக இருக்கின்ற இறைவன் நம்மோடு இணைந்திருக்கின்றார். அதே நேரத்தில், நம்மிடத்தில் உண்மையான அன்பு இல்லாதபோது, பகைமையையும் வெறுப்பினையும் மட்டும் கொண்டிருந்தால் நாம் ஒருபோதும் இறைவன் இணைத்திருக்கமாட்டோம் என்பது நிதர்சனமான உண்மை.
பழைய ஏற்பாட்டில் வருகின்ற ஆபேல் அன்பின் உருவமாக இருந்தார். அவர் இறைவன்மீது கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடாக, தன்னுடைய நிலத்தில் விளைந்ததைக் கொண்டுவந்து மனமுவந்து ஆண்டவருக்குக் காணிக்கை செலுத்தினார். அதனால் இறைவன் அவரோடு இருந்தார். ஆனால், காயின் அப்படியில்லை. அவன் இறைவனுக்கு மனமுவந்து காணிக்கை செலுத்தவில்லை, அவன் இறைவனிடத்தில் கொண்டிருந்த அன்பில்கூட உண்மை இல்லை. அதனாலேயே இறைவன் இறைவன் அவரோடு இணைந்திருக்கவில்லை. நாம் ஒருவரிடத்தில் கொண்டிருக்கின்ற அன்பினைப் பொறுத்தே இறைவன் நம்மோடு இணைந்திருப்பதும் இணைந்திருக்காததும் உள்ளது.
சிந்தனை
“என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்” (யோவா 14:23) என்று இயேசு கிறிஸ்து யோவான் நற்செய்தியில் மிக அழுத்தம் திருத்தமாகக் கூறுவார்.
இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் வழியாகவே நாம், அவர்மீதும் அடுத்தவர்மீதும் உள்ள நம்முடைய அன்பினை வெளிப்படுத்த முடியும். அப்படியில்லாதபோது நாம் இறைவனையோ, அடுத்தவரையோ உண்மையாக அன்பு செய்ய முடியாது. இயேசு நம்மீது அன்பினால் தன்னுடைய உயிரையே தந்தார், நாமும் பிறர்மீது உள்ள அன்பினை வெளிப்படுத்த உயிரைத் தருகின்ற அளவுக்கு முன்வரவேண்டும். அப்போதுதான் நம்முடைய அன்பு முழுமை பெறும். அப்போதுதான் இறைவனும் நம்மோடு இணைந்திருப்பார்.
ஆகவே, இறைவன்மீதும் அடுத்தவர்மீதும் நாம் கொண்டிருக்கும் அன்பு வெறுமனே பேச்சளவிலே நின்றுவிடாமல், அது செயல்வடிவம் பெற முயற்சிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.