06 சனவரி 2019, ஞாயிறு

தூய ஜான் தே ரிபேரா

தூய ஜான் தே ரிபேரா (ஜனவரி 06)

நிகழ்வு

ஜான், ஸ்பெயின் நாட்டில் உள்ள சலமான்கா என்னும் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார். ஒருநாள் அவர் தற்செயலாக பக்கத்தில் இருந்த ஆலயத்திற்குச் சென்றபோது, அங்கு அவர் கேட்ட “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” (மத் 19:21) என்னும் இயேசுவின் வார்த்தைகள் அவருடைய உள்ளத்தைத் தொட்டது. உடனே அவர் தன்னுடைய உடைமைகள், ஆடம்பரமான வாழ்க்கை எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, இயேசுவின் பணியை செய்யத் தொடங்கினார்.

வாழ்க்கை வரலாறு

ஜான் தே ரிபேரா 1532 ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் 20 ஆம் நாள் ஸ்பெயின் நாட்டில், பீட்டர் தே ரிபேரா என்பவரின் மகனாகப் பிறந்தார். ஜானின் தந்தை அல்கலா என்ற இடத்தின் பிரபுவாக இருந்தார். இதனால் ஜான் செல்வச் செழிப்பில் வளர்ந்து வந்தார். ஜானின் தாயார் சிறு வயதிலே அவரைப் பிரிந்ததால், அவர் தன்னுடைய தந்தையின் பராமரிப்பிலே வளர்ந்து வந்தார். ஜானின் தந்தை அவருக்கு மிகவும் உயர்ந்த கல்வியை வழங்கினார், இதனால் ஜான் அறிவில் சிறந்தவராய் விளங்கி வந்தார். உயர் கல்வியை அவர் சலமான்கா என்னும் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும்போதுதான் அவர் கடவுளின் அழைப்பினை உணர்ந்தார், உடனே அவர் தன்னுடைய உடைமைகள், வசதியான வாழக்கை எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு ஆண்டவர் இயேசுவின் பணியைச் செய்ய புறப்பட்டுச் சென்றுவிட்டார், 1557 ஆம் ஆண்டு குருவாகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.

குருவாக மாறிய பின்பு ஜான் இறைப்பணியை தாழ்சியோடும் பொறுமையோடும் செய்துவந்தார். இவருடைய பணி வாழ்க்கை எல்லாருக்கும் பிடித்துப்போனது. இதனால் இவர் 1562 ஆம் ஆண்டு, அதாவது குருவாகிய மாறிய ஐந்தாம் ஆண்டிலேயே படஜோவ் என்னும் இடத்தின் ஆயராக உயர்த்தப்பட்டார், அடுத்த சில ஆண்டுகளில் வாலன்சியா என்ற இடத்தின் பேராயராகவும் உயர்த்தபட்டார். அப்பொறுப்பினை அவர் விரும்பவே இல்லை, இருந்தாலும் அப்போது திருந்தந்தையாக இருந்த ஐந்தாம் பயஸ் கேட்டுக்கொண்டதன் பேரில் பேராயராகத் தொடர்ந்து பணியாற்றினார். 1568 ஆம் ஆண்டிலிருந்து 1611 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய நாற்பத்து மூன்று ஆண்டுகள் பேராயராக சிறந்த முறையில் பணியாற்றினார். மக்களுக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுப்பது, உரிமை இழந்து தவித்த மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தருவது போன்ற பணிகளை மிகச் சிறப்பான முறையில் செய்துவந்தார். இவருடைய காலத்தில்தான் வாலன்சியாவில் கார்புஸ் கிறிஸ்தி என்னும் கல்லூரி தொடங்கப்பட்டது. இது இன்றளவுக்கும் புகழ்பெற்ற ஒரு கல்லூரியாகத் திகழ்ந்து வருகின்றது.

பேராயர் ஜான், திருத்தந்தை அவர்களோடு மட்டுமல்லாமல், ஸ்பெயின் நாட்டு மன்னர் இரண்டாம் பிலிப்போடும் நல்லுறவை வைத்திருந்தார். அதனால் மன்னர் அவரை வலன்சியாவின் வைஸ்ராயாக உயர்த்தினார். இதனால் பேராயர் பணியைச் செய்ததோடு மட்டுமல்லாமல், மன்னர் தனக்க்குக் கொடுத்த பணியையையும் அவர் சிறந்த முறையில் செய்தார்.

இப்படி எத்தனையோ பொறுப்புகளை அவர் வகித்தாலும் தாழ்ச்சி என்னும் புண்ணியத்தை தன் வாழ்நாள் முழுவதும் அவர் கடைப்பிடித்து வந்தார். இவர் 1611 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார், இவருக்கு திருத்தந்தை இருப்பத்து யோவான் புனிதர் பட்டம் கொடுத்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜான் தே ரிபேராவின் விழாவைக் கொண்டாடும் இன்று, அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


1. இறைபணிக்காக எல்லாவற்றையும் துறத்தல்

தூய ஜான், ஆண்டவர் தன்னை அழைக்கின்றார் என்பதை உணர்ந்ததும் எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிட்டு, இயேசுவைப் பின்தொடர்ந்தார் என்று அவருடைய வாழ்க்கைக் குறிப்பு நமக்கு எடுத்துச் சொல்கின்றது. அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், ஆண்டவருக்காக எதையும் துறக்கத் தயாராக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் இந்த மண்ணுலகம் இன்பமே நிலையாது என்று அதனைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கின்றோம். உண்மையில் ஆண்டவர் தரும் இன்பமே நிலையானது, இந்த உண்மையை உணர்ந்து அவர் பின்னே செல்வோருக்கு இறைவன் நிலையான இன்பத்தைத் தருவது உறுதி.

ஒரு சமயம் பட்டினத்தாரிடம் நாட்டு அரசன், “எனக்கு நிகரான செல்வம் உமக்கு இருந்தும், எல்லாவற்றையும் துறந்து சந்நியாசியாகி வெறுங் கோவணத்தோடு இப்படி அமர்ந்திருப்பதால் பயன் என்ன?” என்று கேட்டார். அதற்கு பட்டினத்தார் அவரிடம், “அப்படிச் செய்யாமல் இருந்தால், இப்படி நீர் பய பக்தியோடு நின்று கொண்டிருக்க, நான் இப்படி அமர்ந்திருக்க முடியுமா?” என்றார். அரசனால் ஒன்றும் பேசமுடியவில்லை. ஆம், எல்லாவற்றையும் துறந்து இறைப்பணியைச் செய்ய தன்னை முழுவதும் அர்ப்பணிக்கும் ஒவ்வொருவருக்கும் இறைவன் தரும் கைம்மாறு அளப்பெரியது (மத் 19:29).

ஆகவே, தூய ஜானின் விழாவாக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தாழ்ச்சியோடு வாழக் கற்றுக்கொள்வோம், அதே நேரத்தில் எல்லாவற்றையும் இறைவனுக்காக இழக்கத் தயாராவோம். அதன்வழியாய் இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.