01 சனவரி 2019, செவ்வாய்

மரியாள் இறைவனின் தாய்

மரியாள் இறைவனின் தாய் (ஜனவரி 01)

நிகழ்வு

மைக்கேல் ஆஞ்சலோவின் ஆகச் சிறந்த படைப்பு Pieta என்பதாகும். (இறந்த இயேசுவை அன்னை மரியாள் தன்னுடைய மடியில் வைத்திருக்கின்ற சிற்பம்). அந்த சிற்பத்தைப் பார்த்து ஒருவர் மைக்கேல் அஞ்சலோவிடம் கேட்டார், “எதற்காக அன்னை மரியாவை மிகவும் இளமையாக இருப்பது போன்று படைத்திருக்கிறீர்கள்?”. அதற்கு அவர் அவரிடத்தில் சொன்னார், “மாசுமருவற்ற வாழ்க்கை வாழ்வோர் யாவரும் இப்படித்தான் இளமையாக இருப்பார்கள். மரியாள் மாசற்ற தூய வாழ்க்கை வாழ்ந்தாள். அதனால்தான் அவள் இவ்வளவு இளமையாக இருக்கிறாள்”.

வரலாற்றுப் பின்னணி

ஆண்டின் முதல் நாளான இன்று திருச்சபை மரியாள் இறைவனின் தாய் என்ற விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது. இவ்விழா எப்படி, எப்போது தொடங்கப்பட்டது என அறிந்துகொள்வது மிகவும் சிறப்பானதாகும்.

கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த நெஸ்டோரியஸ் என்பவர் ‘மரியாள் இயேசுவின் தாய்தானே ஒழிய, இறைவனின் தாய் அல்ல’ என்ற புது வாதத்தை முன்வைத்தார். அதற்கு திருச்சபையிலிருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. 431 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி எபேசு நகரில் கூடிய திருச்சங்கம், “இயேசுவில் இறைத்தன்மையும் மனிதத் தன்மையும் முழுமையாகக் குடிகொண்டிருகின்றன. ஆகவே மரியாள் இறைவனின் தாய்” என்பதை நம்பிக்கைக் கோட்பாடாக அறிவித்தது. அன்றிலிருந்து இன்றுவரை திருச்சபை மரியாள் இறைவனின் தாய் என்று அன்போடு அழைத்துவருகிறது. நம்முடைய முன்னாள் திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல், தான் எழுதிய ‘மீட்பரின் தாய்’ என்னும் திருத்தூது மடலில், “மரியாள் திருச்சபையின் தாய்” என்றும் அழைத்து சிறப்பு செய்கிறார். ஆகவே, மரியாள் இறைவனின் தாய் மட்டுமல்ல, திருச்சபையின் தாயாக – நம்முடைய தாயாக - விளங்குகின்றாள்.

விவிலியச் சான்றுகள்

விவிலியத்தில் மரியாள் இறைவனின் தாய் என்பதற்கான குறிப்புகள் ஒருசில இடங்களில் காணக் கிடக்கின்றன முதலாவதாக வானதூதர் கபிரியேல் மரியாளுக்குத் தோன்றுகின்றபோது அவர், “அருள்மிகப் பெற்றவரே!, இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்” என்கிறார் (லூக் 1:31). இவ்வார்த்தைகள், மரியாள் இயேசுவைப் பெற்றெடுப்பதனால் அவர் இறைவனின் தாயாகிறார் என்பதைக் குறித்துக்காட்டுகின்றது. இரண்டாவதாக மரியாள் தன்னுடைய உறவினரான எலிசபெத்தைச் சந்திக்கின்றபோது, அவர், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” என்கிறார். இவ்வார்த்தைகளும் மரியாள் ஆண்டவரின் தாய் – இறைவனின் தாய் – என்பதற்கு மிகப்பெரிய சான்றாக இருக்கின்றது.

ஆகவே, திருநூலும் சரி, திருத்தந்தையர்களின் நம்பிக்கைக் கோட்பாடும் சரி மரியாள் இறைவனின் தாய் என்பதை மிகச் சிறப்பாக எடுத்துக்கூறுகின்றன.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
மரியாள் இறைவனின் தாய் என்ற விழாவைக் கொண்டாடும் நாம் அன்னை மரியாளிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. கீழ்ப்படிதல்
2.
மரியாள் கீழ்ப்படிதலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. எவ்வாறெனில், வானதூதர் கபிரியேல் மரியாவுக்குத் தோன்றி, “மரியா, இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்” என்று (லூக் 1:31) சொல்கிறபோது, மரியாள் தொடக்கத்தில் தயங்குகிறாள். ஆனால் வானதூதர் அவளிடம் எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னபிறகு, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று இறைவனின் மீட்புத் திட்டத்திற்கு கீழ்ப்படிந்து தன்னையே முற்றிலுமாகக் கையளிக்கிறார்.

பழைய ஏவாள் ஆண்டவர் கொடுத்த கட்டளையான ‘விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ணக்கூடாது’ என்பதற்குக் கீழ்படியவில்லை, அவள் பாம்பின் பசப்பு மொழியில் மயங்கி, விலக்கப்பட்ட கனியை உண்டு ஆண்டவர் கொடுத்த கட்டளைக்குக் கீழ்படியாமல் போனாள். அதனால் பாவம் இந்த உலகில் நுழைந்தது. ஆனால் புதிய ஏவாளாகிய மரியா ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தாள், அதனால் இந்த மண்ணுலகிற்கு மீட்பு உண்டாகக் காரணமாக இருந்தாள். நாம் கடவுளின் கட்டளைக்கு கீழபடிந்து நடக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் கூறுவார், “நீங்கள் அனைவரும் அவருக்குக் (கடவுள்) கீழ்ப்படிந்து அவரை அச்சத்தோடும் நடுக்கத்தோடும் ஏற்றுக்கொண்ட முறையை அவர் நினைவுகூரும்போது அவரது உள்ளம் உங்களுக்குக்காக மிகுதியாக உருகுகிறது”. ஆகையால் நாம் அன்னை மரியாவைப் போன்று இறைவனுக்குக் கீழ்படிந்து நடக்கின்றபோது இறைவனின் தயவு நமக்கு உண்டு என்பது உறுதி.

தேவையில் இருப்போருக்கு உதவும் நல்ல உள்ளம்

மரியாள் பிறருக்கு, தேவையில் இருப்போருக்கு உதவுகின்ற நல்ல உள்ளத்தைக் கொண்டவராக இருந்தார். கானாவூர் திருமண நிகழ்வாக இருக்கட்டும், பேறுகால வேதனையில் தவித்த எலிசபெத்துக்கு உதவச் சென்ற நிகழ்வாக இருக்கட்டும் மரியாள் தேவையில் இருப்போருக்கு உதவுவதில் தலைசிறந்தவளாக விளங்கினாள். நாம் ஒவ்வொருவரும் மரியாவைப் போன்று பிறருக்கு உதவவேண்டும் என்பதே நமக்கு முன்னால் இருக்கும் சவால்.

எப்படி உதவுவது?. தமிழில் நாம் சொல்லக்கூடிய “உதவி” என்ற வார்த்தையே நாம் எப்படி பிறருக்கு உதவவேண்டும் என்பதை நமக்கு எடுத்துக்கூறுகிறது. (உ – உள்ளுணர்ந்து; வி- விரைந்து ; த- தன்னலமின்றி). நாம் உதவி செய்கின்றபோது உள்ளுணர்ந்து உதவிசெய்யவேண்டும். பிறர் கேட்டுத்தான் உதவி செய்யவேண்டும் என்பதில்லை. கேளாமல், நாமாகவே உள்ளுணர்ந்து உதவி செய்யவேண்டும். அதே நேரத்தில் விரைந்து உதவிசெய்யவேண்டும். ஒருவருக்கு இப்போது உதவி தேவைப்படுகிறது என்றால், அந்த நொடியிலே செய்யவேண்டும். பிறகு உதவி செய்துகொள்ளலாம் என்பது கூடாத காரியம். இறுதியாக நாம் செய்யும் உதவியை தன்னலமின்றிச் செய்யவேண்டும். ஒன்றைக் கொடுத்தால் இன்னொன்றைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்போடு செய்வது உண்மையான உதவியாகாது.

மரியாள் மேலே சொல்லப்பட்ட இரண்டு நிகழ்வுகளிலும் யாரும் கேளாமலே உள்ளுணர்ந்து உதவிசெய்தாள்; விரைந்து உதவி செய்தாள். அதேநேரத்தில் தன்னலமின்றியும் உதவி செய்தாள். அவளுடைய அன்புப் பிள்ளைகளாகிய நாமும் உள்ளுணர்ந்து, விரைந்து, தன்னலமின்றி உதவி செய்வோம்.

இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்தவள்

மரியாள் இறைவார்த்தைக் கேட்டு, அதன்படி நடந்ததற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. எவ்வாறெனில், ஒருமுறை மரியாள், தன்னுடைய சொந்தங்களோடு இயேசுவை சந்திக்கச் செல்கிறபோது, இயேசு, “யார் என்னுடைய தாய்?, யார் என்னுடைய சகோதரிகள்?” என்று கேட்டுவிட்டு, “விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்பார் (மத் 12:50). இங்கே மரியாள் இரண்டு விதங்களில் தாயாகின்றார். ஒன்று இயேசுவைப் பெற்றெடுத்தனால், இன்னொரு தந்தையின் திருவுளத்தின்படி நடந்ததினால். மரியாள் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவார்த்தையைக் கேட்டு, அதனை தன்னுடைய உள்ளத்தில் இருத்தி சிந்தித்து செயல்பட்டு வந்தாள். அதனால் அன்னை இறைவார்த்தையைக் கடைப்பிடித்து வாழ்வதில் நமக்கெல்லாம் முன்மாதிரி.

நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இறைவார்த்தையைக் கேட்கின்றோம். ஆனால் வாழ்வக்குவதில்லை; நம்முடைய வாழ்வில் செயல்படுத்துவதில்லை. தொடக்கநூல் 22:18 ல் ஆண்டவர் ஆபிரகாமைப் பார்த்துக் கூறுவார், “நீ என் குரலுக்கு செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசிகூறிக்கொள்வர்”. ஆம், நாம் இறைவனின் வார்த்தைக்கு செவிமடுத்து வாழ்கின்றபோது என்றுமே ஆசிர்வாதம்தான்.

அன்னை மரியாள் இறைவார்த்தையை வாழ்வாக்கினாள், நாமும் இறைவனின் வார்த்தையை வாழ்வாக்குவோம், இறைவனின் ஆசியை நிறைவாய் பெறுவோம். ஆகவே, மரியா இறைவனின் தாய் என்ற விழாவைக் கொண்டாடும் நாம், அன்னையை நமக்குக் கொடுத்த ஆண்டவருக்கு நன்றி கூறுவோம். அதேவேளையில் அன்னையிடம் விளங்கி கீழ்படிதலை, பிறருக்கு உதவும் நல்ல பண்பினை, இறைவார்த்தையைக் கேட்டு, நடக்கின்ற பண்பை நமதாக்குவோம், ஆண்டவரின் அருளை நிறைவாய் பெறுவோம்.

“தாயின் மடிதான் உலகம், அவள் தாளைப் படிந்திடுவோம்”.

- Palay Fr. Maria Antonyraj.