01 சனவரி 2019, செவ்வாய்

திருப்பலி முன்னுரை

அன்னை மரியா – இறைவனின் தாய் 01 01 2018

 

திருப்பலி முன்னுரை:

 

புலர்ந்துள்ள இனிய புத்தாண்டின் முதல் நாளிலே நம் திருச்சபையானது அன்னை மரியா இறைவனின் தாய் என்ற திருவிழாவைக் கொண்டாடி மகிழ நம்மை அழைக்கின்றது.

 

மேகத்தைச் சிறப்பித்துப் புகழ்வது அது கொடுக்கும் மழைக்காக; மரத்தைப் புகழ்வது அது கொடுக்கும் கனிகளுக்காக; பசுவைப் புகழ்வது அது கொடுக்கும் பாலுக்காக; அன்னை மரியாவை சிறப்பித்துப் புகழ்வது அவர் பெற்றெடுத்த உலக மீட்பர் இயேசுவுக்காக.

 

தந்தையாம் கடவுளின் திருவுளத்தில் தூய ஆவியாரின் உடனிருப்பில் மானிட உடல் ஏற்று வாக்களிக்கப்பட்ட வார்த்தையான மெசியாவுக்கு தாயாகும் பேற்றினை பெற்றுள்ளதால் படைப்பு உயிர்களில் சிறந்தவராக போற்றப்படுகிறார்.

 

இன்றைய முதல் வாசகத்திலே ஆசிகள் வழங்கப் பெறுவதையும், வழங்கும் முறையைப் பற்றியும் விடுதலைத் தலைவர் மோசே வழியாக ஆரோன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு  எடுத்துரைக்கின்றது எண்ணிக்கை திருநூல். இப்புத்தாண்டில் ஆண்டவர் தம் திருமுகத்தை நம்மீது திருப்பி நம்மை பாதுகாப்பார் என்ற நம்பிக்கைச் செய்தியைப் பெற்று இறை பராமரிப்பில் வாழ்வோம்.

 

இரண்டாம் வாசகத்திலே நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையில் எந்தவிதமான அடிமைத்தனங்களுக்கும் உள்ளாகாதவாறு வாழ வேண்டியது நமது கடமை என்பதை புனித பவுலடியார் கலாத்தியருக்கு எழுதிய மடலில் உணர்த்துகின்றார்.

 

இன்றைய நற்செய்தியிலே மீட்பராக பிறந்த இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை வாசிக்கின்றோம். இப்பெருவிழா நாளில் நமக்குப் பெயரிடப்பட்ட திருமுழுக்கு நாளை நினைவு கூர்வோம். அந்த அருள்பொழிவில் நமக்கு வழங்கப்பட்ட உரிமைகளாகிய கடவுளின் திருச்சபையின் பிள்ளை என்பதில் பெருமகிழ்வு கொள்வோம். இப்புத்தாண்டில் இறைவனது ஆசிகளால் நிரப்பப்பட இப்பலியிலே இறையருளை வேண்டுவோம்.

 

மன்றாட்டுகள்:

 

  1. ஆசி வழங்குகின்றவரே இறைவா!


எங்களது அன்றாட வாழ்வில் நீரே மையமாக இருந்து எங்களுக்குத் தேவையான பாதுகாப்பு, அருள், அமைதி இவற்றை அளித்து எங்களது வாழ்வை வளப்படுத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

  1. புதுவாழ்வைத் தருகின்றவரே இறைவா!


புதிதாகப் பிறந்துள்ள இப்புத்தாண்டிலே நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்ற தேவைகள் அனைத்தும் நிறைவேறவும், ஒவ்வொரு  நொடிப்பொழுதும் உடனிருந்து எங்களைப் பாதுகாத்து பராமரித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

  1. அன்னை மரியாளை எமக்குத் தாயாகத் தந்தவரே இறைவா!


அன்னைமரி இறைவனின் தாய் என்று கொண்டாடி மகிழ்கின்ற இந்நாளிலே அன்னையின் பாதுகாப்பிலும், பரிந்துரையிலும் இறையருளைப் பெற்றிடவும், உலக தாய்மார்கள் அனைவரும் மதிக்கப்படவும் தங்களது நிலையினை புனித நிலையாக கருதி வாழ்வதற்குத் தேவையான உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

  1. காலங்களைக் கடந்தவரே இறைவா!


நீர் எங்களுக்கு மூலதனமாக அளித்துள்ள காலங்களை வீணாக்காமல அவற்றை பயன் தருகின்ற வகையில் செலவிட்டு, இறைவார்த்தையில் புதைந்துள்ள ஞான செல்வத்தைக் கண்டு உணர்ந்து எங்கள் வாழ்வை அமைத்திட ஞானத்தைப் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

  1. விடுதலையும் வாழ்வையும் கொடுப்பவரே இறைவா!


விளை நிலங்கள் நல்ல பலனைக் கொடுத்து விவசாயிகள் வாழ்வில் ஏற்ற பெறவும், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பும் நலமும் வளமுமான நிறைவான வாழ்வு கிடைத்திடவும், உலக நாடுகள் அனைத்தும் சமாதானத்தில் மகிழ்ந்திருக்கவும், நீதிக்காகவும், விடுதலைக்காகவும் உரிமை வாழ்விற்காகவும் எதிர்நோக்கியிருப்போர் அனைவரின் மனங்களிலும் நிறைவு பெற உமது அருளை அளித்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

நன்றி: ஆசிரியை. திருமதி. லூயிஸ் ரெக்ஸ்லின், பாவூர்சத்திரம்.

 

Rev. Fr. Amirtha Raj Sundar J.,

[email protected];

+ 91 944 314 0660;

www.arulvakku.com