02 சனவரி 2019, புதன்

புதன்கிழமை

கிறிஸ்து பிறப்புக் காலம்

புதன்கிழமை (ஜனவரி 02)

யோவான் 1: 19-28

 

                                                      யார் நீ?

நிகழ்வு

 

         ஒருசமயம் இளைஞன் ஒருவன் ஊருக்கு வெளியே இருந்த ஒரு ஜென் துறவியிடம் வந்தான். அவர் அவனைப் பார்த்ததும், “யார் நீ? எதற்காக நீ இங்கு வந்திருக்கின்றாய்?” என்று கேட்டார். இளைஞனோ, “என் பெயர் அமுதன். நான் பக்கத்து ஊரில் இருக்கின்ற பண்ணையாரின் மகன்... புத்தகராக (கடவுளாக) மாறவேண்டும் என்பது என் ஆசை. அதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்” என்றான்.

 

அந்த இளைஞன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு கடுப்பான ஜென் துறவி, “புத்தனாகவெல்லாம் ஆகமுடியாது. அப்படிப்பட்ட எண்ணத்தோடு நீ இங்கு வந்திருந்தால், தயவுசெய்து இப்போதே இங்கிருந்து ஓடிவிடு. ஏனெனில், ஏற்கனவே இங்கு ‘ஆயிரத்தெட்டு’ புத்தர்கள்’ இருக்கிறார்கள். இதில் நீ வேறு புத்தனாகப் போகிறாயா” பொருமித் தள்ளினார். துறவி சொன்னதற்கு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்த அந்த இளைஞனிடத்தில் ஜென்துறவி, “நீ நீயாக இருக்க ஆசைப்பட்டால், இங்கு வரலாம். இல்லையென்றால் இங்கிருந்து போய்விடலாம்” என்றார்.

 

உடனே அந்த இளைஞன், “நான் நானாகவே இருக்க விரும்புகின்றேன்” என்றான். அதன்பிறகு ஜென் துறவி, அந்த இளைஞனை தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொண்டு, அவனுக்கு உரிய பயிற்சிகள் அளித்துவந்தார்.

 

இன்றைக்குப் பலருக்கு அவர்களாக இருக்க விருப்பமில்லை. தங்களுடைய சொந்த அடையாளங்களைத் மறைத்து பிரபலமான ஒருவரைப் போன்று இருக்க விரும்புகின்றார்கள். இத்தகைய சூழலில் நாம் நாமாக இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லும் இன்றைய நற்செய்தி வாசகத்தைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

 

நீர் மெசியாவா? எலியாவா? வரவேண்டிய இறைவாக்கினர்களுள் ஒருவரா?

 

         நற்செய்தி வாசகத்தில், எருசலேமில் இருந்த யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோர்தான் ஆற்றில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த திருமுழுக்கு யோவானிடம் அனுப்பி வைத்து, “யார் நீ?” என்று கேட்டுவரச் சொல்கின்றார்கள். அதன்படி ‘சமயக் காவலர்கள்’ என்று அறியப்பட்ட குருக்களும் லேவியர்களும் யோவானின் வந்து, “நீர் யார்?” என்றொரு கேள்வியைக் கேட்கிறார்கள்.

 

குருக்களும் லேவியர்களும் கேட்ட கேள்விகளுக்கு யோவான் தன்னை மெசியா என்றோ, எலியா என்றோ, முற்காலத்து இறைவாக்கினர் என்றோ என்று சொல்லி, அதனால் ஆதாயம் அடைந்திருக்கலாம். ஏனென்றால் யோவான் என்ன சொன்னாலும் அதை நம்புகின்ற அளவுக்கு மக்கள் இருந்தார்கள். ஆனால் யோவான் தன்னை மெசியா என்றோ, எலியா என்றோ, முற்காலத்து இறைவாக்கினர் என்றோ சொல்லி ஆதாயம் அடையவில்லை, வீண் பேரும் புகழும் தேடிக்கொள்ளவில்லை. மாறாக அவர் தன்னை, ‘ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது’ என்று சொல்லி ஆண்டவருக்காக வழியைச்  செம்மைப்படுத்துகின்ற ஒரு சாதாரண ஆள் என்று சொல்கின்றார்.

 

ஏன் திருமுழுக்குக் கொடுக்கின்றீர்?

 

         குருக்களும் லேவியர்களும் ‘யார் நீர்’ என்று யோவானிடத்தில் மாற்றி மாற்றிக் கேள்வி கேட்டபோது, அவர்கள் எதிர்பார்த்த பதில் அவரிடமிருந்து கிடைக்காத நிலையில், “நீர் மெசியா அல்ல என்றால், ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்கத் தொடங்குகின்றார். அதாவது அதுவரைக்கும் யார் நீர்? என்று கேட்டுவந்தவர்கள், “ஏன் இதைக் செய்கிறாய்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்கத் தொடங்கிவிடுகிறார்கள். அவர்கள் கேட்ட இந்தக் கேள்விக்கு யோவான், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்கின்றார்.

 

யோவான் கொடுத்த திருமுழுக்கு, மக்கள் தங்களுடைய பாவங்களிலிருந்து மனம்மாறவும், மெசியாவின் வருகைக்காக தங்களைத் தயார்செய்வதுமாக இருந்தது. அத்தகைய பணியினைத்தான் திருமுழுக்கு யோவான் தொடர்ந்து செய்து வந்தார். ஆனால், அவர் எந்தநேரத்திலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல், தனக்கு வீண் பேரையும் புகழையும் சம்பாதித்துக் கொள்ளாமல் செய்துவந்தார். இயேசுவின் சீடர்களாகிய ஒவ்வொருவரும் அல்லது ஒவ்வொரு இறையடியாரும் திருமுழுக்கு யோவானிடம் இருந்த அதே மனநிலையோடு இறைப்பணியைச் செய்தால், அது நலம்பயக்கம்.

 

சிந்தனை

 

Be Yourself” என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் சொல்வார்கள். இதனை நீ நீயாக இரு என்று தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம். நாம் நாமாக இருப்பதில் உள்ள சிறப்பு வேறெதிலும் இல்லை. திருமுழுக்கு யோவான் அப்படித்தான் அவர் அவராக இருந்து ஆண்டவருடைய பணியைச் செய்தார். ஆகவே, நாமும் தம்முடைய தனித்தன்மையை இழக்காமல், எந்தவித சாயமும் பூசிக்கொள்ளாமல், நாமாகவே இருந்து பணிசெய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.