ஜனவரி 02
ஜனவரி 02
01 யோவான் 2: 22-28
இயேசுவே மெசியா!
நிகழ்வு
383 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 9 ஆம் நாள், உரோமையை ஆண்டு வந்த தியோடோசியுஸ் என்ற மன்னன், தன் மகன் அர்காடியுசை (Arcadius) இணை – அரசராக அறிவித்தான். இவன் ‘இயேசுவின் இறைத்தன்மையை’ மறுத்துவந்த ஆரிய பதத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவன். இதனை ஆயர் அம்பிலோசுஸ் கடுமையாக எதிர்த்து, ‘இயேசு இறைமகன்’, ‘அவர் இந்த உலகினை மீட்க வந்த மெசியா’ என எடுத்துரைத்து வந்தார். இதனால் இவர் தியோடோசியுசிடமிருந்து எதிர்ப்பினையும் சம்பாதித்து வந்தார்.
இந்நிலையில் தியோடோசியுஸ் மன்னன், தன் மகன் அர்காடியுசை இணை அரசராக முறைப்படி நியமிக்கும் விழாவினை ஏற்பாடு செய்தான். இதற்கு ஆயர் அம்பிலோசுஸ் உட்பட பலரையும் அழைத்திருந்தான். விழா தொடங்குவதற்கு முன்பாக தியோடோசியுஸ் மன்னனும் அவனுடைய மகன் அர்காடியுசும் நுழைவாயிலில் நின்றுகொண்டு, விழாவிற்கு வந்துகொண்டிருந்த விருந்திருனரை வரவேற்றுக் கொண்டிருந்தனர். வந்த விருந்தாளிகள் அனைவரும் மன்னனுக்கும் அவனுடைய மகனுக்கும் மரியாதை செலுத்திவிட்டு உள்ளே போய்க்கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் ஆயர் அம்பிலோசுஸ் அங்கு வந்தார். அவர் மன்னருக்கு மட்டும் மரியாதை செலுத்துவிட்டு, அவனுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அவனுடைய மகனைக் கண்டு கொள்ளாமல் உள்ளே போனார். இது மன்னனுக்கு அதிர்ச்சியைத் தந்தது. இருந்தாலும் ‘அம்பிலோசுஸ் தன் மகனைப் பார்க்கவில்லை போலும், அதனால் அவர் என் மகனுக்கு மரியாதை செலுத்தாமல் போகிறார்’ என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
இதற்குப் பின்பு அர்காடியுசை இணை-அரசராக (Co–emperor) நியமிக்கும் விழா நடைபெற்றது. இதில் முக்கியஸ்தர்கள் எல்லாம் வந்து இணை அரசரை வாழ்த்திவிட்டுச் சென்றனர். ஆயர் அம்பிசியுஸ்கூட ஓர் அரசன் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி மிகச் சிறப்பான ஒரு சொற்பொழிவினை ஆற்றினார். பின்பு விருந்து நடைபெற்றது. விருந்து முடிந்ததும் தியோடோசியுசும், இணை அரசராக நியமிக்கப்பட்டிருந்த அர்காடியுசும் விழாவிற்கு வந்திருந்த விருந்தினை வழியனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஆயர் அம்பிலோசுஸ் அங்கு வந்தார். அவர் மன்னன் தியோடோசியுசிற்கு மட்டும் மரியாதை செலுத்திவிட்டு, அர்காடியுசை கண்டு கொள்ளாமல் போனார். இதைக் கண்டு வெகுண்டெழுந்த தியோடோசியுஸ் ஆயர் அம்பிசியுசிடம், “என்ன நீர்! இங்கே இணை அரசர் நின்றுகொண்டிருக்கின்றாரே, அவருக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்று உமக்குத் தெரியாதா?, என்னைப் போன்றே எல்லா அதிகாரமும் கொண்டிருக்கின்ற இவரை நீர் அவமதிப்பதால், என்னையும் சேர்த்து அவமதிக்கிறீர்” என்றார். அதற்கு ஆயர் அம்பிலோசுஸ், “உம்மைப் போன்று எல்லா அதிகாரமும் கொண்டிருக்கின்ற உம் மகனுக்கு நான் உரிய மரியாதை செலுத்தாததற்காக இவ்வளவு வருத்தப்படுகின்றீரே, தந்தைக் கடவுளைப் போன்றே ஒரே தன்மையும் வல்லமையும் கொண்டிருக்கின்ற இயேசு கிறிஸ்துவை, நீர் மனிதராக மட்டும் பார்ப்பது, தந்தைக் கடவுளுக்கு எவ்வளவு வருத்தத்தைத் தரும்?... யோர்தான் ஆற்றில் இயேசு கிறிஸ்து திருமுழுக்குப் பெறும்போது, “இவரே என் அன்பார்ந்த மகன், இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று விண்ணகத்திலிருந்து தந்தைக் கடவுள் சொல்வதை நீர் வாசித்ததில்லையா? (மத் 3: 13-17)... இயேசு இறைமகன், இந்த உலகத்தை மீட்க வந்த மெசியா. இதை நம்பி ஏற்றுக்கொள்” என்று சொல்லிவிட்டுக் கடந்து போனார்.
இதற்குப் பின்பு தியோடோசியுஸ் மன்னன், இயேசுவை இறைமகனாக, மெசியாவாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கினான்.
என்னது? இயேசு மெசியா இல்லையா?
நற்செய்தியாளர் யோவான் வாழ்ந்து வந்த காலத்தில் ஞாஸ்டிக் எனப்படுவோர், இயேசு மரியின் வயிற்றில் பிறந்த ஒரு சாதாரண மனிதர்தான், அவர் இறைவனல்ல, மெசியாவும் அல்ல என்று பிதற்றி வந்தனர். அப்போதுதான் யோவான், “இயேசு “மெசியா” அல்ல என்று மறுப்போரைத் தவிர வேறு யார் பொய்யர்? அவர்கள் எதிர்கிறிஸ்துகள்” என்கின்றார்.
கடவுளோடு கடவுளாக இருந்த வார்த்தையான இயேசு கிறிஸ்து மனுவுரு எடுத்து, நமக்கு மீட்பினை வழங்கினார் (யோவா 1:1,14). இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் சிலர் மறுத்துவந்தார்கள். இப்படிப்பட்டவகளைப் பொய்யர்கள் என்றும், எதிர் கிறிஸ்துகள் என்றும் சொல்லாமல், வேறு என்னவென்று சொல்வது?
சிந்தனை
“இயேசு ஆண்டவர்” என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என உள்ளூர நம்பினால் நீங்கள் மீட்புப் பெறுவீர்கள்” என்பார் தூய பவுல் (உரோ 10:9). நாம் இயேசுவை இறைவன் என்றும், மெசியா என்றும் நம்பி ஏற்றுக்கொண்டு, அதனை மற்றவர்களுக்கு அறிக்கையிடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.