25 நவம்பர் 2021, வியாழன்

கன்னியர் - பொது

முதல் வாசகங்கள்

பழைய ஏற்பாட்டிலிருந்து

1

அன்பு சாவைப் போல் வலிமை மிக்கது.

இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 8: 6-7

உம் நெஞ்சத்தில் இலச்சினை போல் என்னைப் பொறித்திடுக; இலச்சினை போல் உம் கையில் பதித்திடுக; ஆம், அன்பு சாவைப் போல் வலிமை மிக்கது; அன்பு வெறி பாதாளம் போல் பொறாதது; அதன் பொறி, எரிக்கும் நெருப்புப் பொறி; அதன் கொழுந்து பொசுக்கும் தீக்கொழுந்து.

பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது; வெள்ளப் பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது; அன்புக்காக ஒருவன் தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம் வாரி இறைக்கலாம்; ஆயினும், அவன் ஏளனம் செய்யப்படுவது உறுதி.

ஆண்டவரின் அருள்வாக்கு.

2

முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 2: 14, 15b, 19-20

ஆண்டவர் கூறுவது:

நான் இஸ்ரயேலை நயமாகக் கவர்ந்திழுப்பேன்; பாலைநிலத்துக்கு அவளைக் கூட்டிப்போவேன். நெஞ்சுருக அவளுடன் பேசுவேன். அப்போது அவள் அங்கே தன் இளமையின் நாள்களிலும், எகிப்து நாட்டினின்று வெளியேறிய காலத்திலும் பாடியது போல் பாடுவாள்.

இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்; நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு மண ஒப்பந்தம் செய்துகொள்வேன். மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்; ஆண்டவராம் என்னை நீயும் அறிந்துகொள்வாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பாஸ்கா காலத்தில்

முதல் வாசகங்கள்

புதிய ஏற்பாட்டிலிருந்து

1

ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 19: 1, 5-9a

யோவானாகிய நான் பெருந்திரளான மக்களின் கூச்சல் போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது: “அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.”

அரியணையிலிருந்து எழுந்த ஒரு குரல், “கடவுளின் பணியாளர்களே, அவருக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள்” என்று ஒலித்தது.

பின்னர் பெருந்திரளான மக்களின் கூச்சல் போலும் பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போலும் பேரிடி முழக்கம் போலும் எழுந்த பேரொலியைக் கேட்டேன். அது சொன்னது: “அல்லேலூயா! நம் கடவுளாகிய ஆண்டவர், எல்லாம் வல்லவர்; அவர் ஆட்சி செலுத்துகின்றார். எனவே மகிழ்வோம், பேருவகையுடன் அவரைப் போற்றிப் புகழ்வோம். ஏனெனில் ஆட்டுக்குட்டியின் திருமண விழா வந்துவிட்டது. மணமகளும் விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கிறார். மணமகள் அணியுமாறு பளபளப்பான, தூய்மையான, விலையுயர்ந்த மெல்லிய ஆடை அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த ஆடை இறைமக்களின் நீதிச் செயல்களே.”

அந்த வானதூதர் என்னிடம், “ ‘ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

2

புதிய எருசலேம் தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்துகொண்ட மணமகளைப் போல் ஆயத்தமாய் இருந்தது.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 1-5a

யோவானாகிய நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்து விட்டன. கடலும் இல்லாமற்போயிற்று. அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்துகொண்ட மணமகளைப் போல் அது ஆயத்தமாய் இருந்தது.

பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவை எல்லாம் மறைந்துவிட்டன” என்றது.

அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்கள்

1

திபா 45: 10-11. 13-14. 15-16 (பல்லவி: 10, 11 காண்க)

பல்லவி: கருத்தாய்க் கேளாய் மகளே! மன்னர் உன் எழிலில் நாட்டம் கொள்வார்.

அல்லது: (மத் 25: 6): இதோ மணமகன் வருகின்றார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்.

10
கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு.
11
உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! - பல்லவி

13
அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள்.
14
பல வண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். - பல்லவி

15
மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர்.
16
உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்; அவர்களை நீர் உலகுக்கெல்லாம் இளவரசர் ஆக்கிடுவீர். - பல்லவி

2

திபா 148: 1-2. 11-13ab. 13c-14 (பல்லவி: )

பல்லவி: அல்லேலூயா.

அல்லது: (திபா: 148: 1 2a,1 3a காண்க): இளைஞரே, கன்னியரே, ஆண்டவரின் பெயரைப் போற்றுங்கள்.

1
விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்; உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.
2
அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்; அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள். - பல்லவி

11
உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,
12
இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
13ab
அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக; அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது. - பல்லவி

13c
அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது.
14
அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்; அவருடைய அனைத்து அடியாரும் அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல் மக்களும் அவரைப் போற்றுவார்கள். - பல்லவி

இரண்டாம் வாசகங்கள்

1

மணமாகாத பெண்ணும் கன்னிப்பெண்ணும் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்கின்றனர்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 25-35

சகோதரர் சகோதரிகளே,

மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம். இவர்களைப் பற்றிய ஆண்டவரின் கட்டளை எதுவும் என்னிடம் இல்லை. எனினும், ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்கு உரியவனாயிருக்கும் நான் என் கருத்தைச் சொல்கிறேன். மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன்.

மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழி தேடக் கூடாது; மனைவியுடன் இணைக்கப் படாதவர்கள் திருமணம் செய்துகொள்ள வழி தேடக் கூடாது. நீங்கள் திருமணம் செய்து கொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.

நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

மணமாகாதவர் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் மணமானவர் உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது.

மணமாகாத பெண்ணும் கன்னிப் பெண்ணும் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோர் ஆகின்றனர். ஆனால் மணமான பெண், உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார்.

உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழு மனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக்கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

2

கிறிஸ்து என்னும் ஒரே மணமகனுக்கும் உங்களுக்கும் இடையே மண ஒப்பந்தம் செய்துள்ளேன்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 17- 11: 2

சகோதரர் சகோதரிகளே,

“பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.” தமக்குத் தாமே நற்சான்று கொடுப்போர் அல்ல, மாறாக ஆண்டவரின் நற்சான்று பெற்றவரே ஏற்புடையவர் ஆவர்.

என் அறிவீனத்தை நீங்கள் சற்றுப் பொறுத்துக் கொள்ள வேண்டும்; ஆம் சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள். உங்கள்மீது கடவுள் கொண்டுள்ள அதே அன்பார்வத்தை நானும் கொண்டுள்ளேன். கிறிஸ்து என்னும் ஒரே மணமகனுக்கும் உங்களுக்கும் இடையே மண ஒப்பந்தம் செய்துள்ளேன். அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியாக நிறுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலிகள்

1. யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என் மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர் மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

2.

அல்லேலூயா, அல்லேலூயா! விழித்திருப்பதாக ஆண்டவர் கண்ட அறிவாற்றல் உள்ள கன்னிப் பெண் இவரே; ஆண்டவர் வரவே, அவர் அவரோடு மண வீட்டில் நுழைந்து விட்டார். அல்லேலூயா.

3.

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் மணமகளே வருக; உமக்கென ஆண்டவர் ஏற்பாடு செய்துள்ள நிலை வாழ்வின் முடியைப் பெறுக. அல்லேலூயா.

நற்செய்தி வாசகங்கள்

1

விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-12

அக்காலத்தில்

பரிசேயர் இயேசுவை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், “ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கி விடுவது முறையா?” என்று கேட்டனர்.

அவர் மறுமொழியாக, “படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்’ என்று நீங்கள் மறை நூலில் வாசித்ததில்லையா?” என்று கேட்டார். மேலும் அவர், “இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்”என்றார்.

அவர்கள் அவரைப் பார்த்து, “அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கிவிடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?” என்றார்கள்.

அதற்கு அவர், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்க முதல் அவ்வாறு இல்லை. பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, “கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது” என்றார்கள்.

அதற்கு அவர், “அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மணஉறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ளக்கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

2

இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: “விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள கன்னித் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.

நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.

அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள்.

முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது’ என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.

பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள்.

அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

3

மார்த்தா இயேசுவைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில்

இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.