04 ஜூலை 2022, திங்கள்

புனிதர், புனிதையர் - பொது

முதல் வாசகங்கள்

பழைய ஏற்பாட்டிலிருந்து

1

உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் புறப்பட்டுச் செல்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-4a

அந்நாள்களில்

ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.

உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

2

உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!

லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 17-18

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்!

உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்துகொள். பழிக்குப் பழியென உன் இனத்தார் மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

3

உன் முழு இதயத்தோடு உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 3-9

மோசே மக்களை நோக்கிக் கூறியது: இஸ்ரயேலே, ஆண்டவருடைய கட்டளைகளுக்கும் நியமங்களுக்கும் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்துவழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய்.

இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போதும், எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கு இடையே அடையாளப் பட்டமாக அவை இருக்கட்டும். உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழை வாயில்களிலும் அவற்றை எழுது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

4

துறவியர் திருப்பலியில்

ஆண்டவரே அவர்களது உரிமைச் சொத்து.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 10: 8-9

மோசே மக்களை நோக்கிக் கூறியது: ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கவும், இந்நாள்வரை இருப்பது போல ஆண்டவர் திருமுன் நின்று பணிபுரியவும், அவருடைய பெயரால் ஆசி வழங்கவும், ஆண்டவர் லேவியின் குலத்தைத் தனித்து வைத்தார். எனவேதான், லேவியர்க்குத் தம் சகோதரர்களுடன் பங்கு இல்லை; உரிமைச் சொத்தும் இல்லை; உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களுக்குச் சொல்லி இருப்பது போல, ஆண்டவரே அவர்களது உரிமைச் சொத்து.

ஆண்டவரின் அருள்வாக்கு.

5

துறவியர் திருப்பலியில்

மலைமேல் என் திருமுன் வந்து நில்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 4-9a, 11-15a

அந்நாள்களில்

எலியா பாலைநிலத்தில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்துகொண்டு, தாம் சாக வேண்டும் எனப் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக்கொள்ளும்; நான் என் மூதாதையரை விட நல்லவன் அல்ல.” பின்னர் அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்து உறங்கினார்.

அப்போது வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு” என்றார். அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஓர் அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு பருகியபின் திரும்பவும் படுத்துக் கொண்டார்.

ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு; ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்” என்றார். அப்பொழுது அவர் எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார். அவர் அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார்.

அப்போது ஆண்டவர், “வெளியே வா; மலை மேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்ல இருக்கிறேன்” என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது.

அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, “எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது.

அதற்கு அவர், “படைகளின் கடவுளாகிய ஆண்டவர் மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகிறேன். ஆனால் இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறி விட்டனர்; உம் பலி பீடங்களைத் தகர்த்து விட்டனர்; உம் இறைவாக்கினரை வாளால் கொன்றுவிட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர்” என்றார்.

அப்போது ஆண்டவர் அவரிடம், “நீ வந்த வழியே திரும்பித் தமஸ்குப் பாலைநிலம் நோக்கிச் செல்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

6

துறவியர் திருப்பலியில்

எலிசா புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 16b, 19-21

அந்நாள்களில்

ஆண்டவர் எலியாவை நோக்கிக் கூறியது: “ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்.”

எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர் மீது தூக்கிப் போட்டார்.

எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, “நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும்; அதன்பின் உம்மைப் பின்செல்வேன்” என்றார்.

அதற்கு அவர், “சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்!” என்றார்.

எலிசா எலியாவை விட்டுத் திரும்பிவந்து ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற, அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

7

நாங்கள் இருவரும் முதுமை அடையும்வரை இணைபிரியாது வாழச் செய்யும்.

தோபித்து நூலிலிருந்து வாசகம் 8: 4b-8

தோபியா படுக்கையிலிருந்து எழுந்து சாராவிடம், “அன்பே, எழுந்திரு. நம் ஆண்டவர் நம்மீது இரங்கிக் காத்தருளுமாறு பணிந்து மன்றாடுவோம்” என்றார். சாரா எழுந்து நின்றாள். அவர்கள் மன்றாடத் தொடங்கி, தங்களைக் காத்தருளுமாறு வேண்டினார்கள்.

தோபியா பின்வருமாறு வேண்டினார்: “எங்கள் மூதாதையரின் இறைவா, போற்றி! உமது பெயர் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் போற்றி! வானங்களும் உம் படைப்பு அனைத்தும் எக்காலமும் உம்மைப் போற்றுக! நீர் ஆதாமைப் படைத்தீர்; அவருடைய மனைவி ஏவாளை அவருக்குத் துணையாகவும் ஆதரவாகவும் உண்டாக்கினீர்.

அவர்கள் இருவரிடமிருந்தும் மனித இனம் தோன்றியது. ‘மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்ததொரு துணையை உருவாக்குவோம்’ என்று உரைத்தீர். இப்பொழுது என் உறவினள் இவளை நான் மனைவியாக ஏற்றுக்கொள்வது இச்சையின் பொருட்டன்று, நேர்மையான நோக்கத்தோடுதான்.

என்மீதும் இவள்மீதும் இரக்கம் காட்டும்; நாங்கள் இருவரும் முதுமை அடையும்வரை இணைபிரியாது வாழச் செய்யும்.” இருவரும் “ஆமென், ஆமென்” என்று கூறினர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

8

நீதியுடன் இணைந்த தருமம் சிறந்தது.

தோபித்து நூலிலிருந்து வாசகம் 12: 6-13

அந்நாள்களில்

தோபித்தையும் அவர் மகன் தோபியாவையும் இரபேல் தனியாக அழைத்துப் பின்வருமாறு கூறினார்: “கடவுளைப் புகழுங்கள்; அவர் உங்களுக்குச் செய்த நன்மைகளை எல்லா உயிர்கள் முன்னும் அறிக்கையிடுங்கள். அவரது பெயரைப் புகழ்ந்து பாடுங்கள். மனிதர் அனைவர் முன்னும் கடவுளின் செயல்களைப் போற்றிப் புகழ்ந்து அறிக்கையிடத் தயங்காதீர்கள். மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பதும் அறிக்கையிடுவதும் அதனினும் சிறந்தது. நல்லதைச் செய்யுங்கள்; தீமை உங்களை அணுகாது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தை விட உண்மையான மன்றாட்டு சிறந்தது.

ஆனால் நீதியுடன் இணைந்த தருமம் அதைவிடச் சிறந்தது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட நீதியாகச் சேர்த்த சிறிதளவு செல்வம் சிறந்தது. தருமம் சாவினின்று காப்பாற்றும்; எல்லாப் பாவத்தினின்றும் தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை அது நிறைவுள்ளதாக்கும். பாவமும் அநீதியும் புரிவோர் தங்களுக்குத் தாங்களே கொடிய எதிரிகள்.

முழு உண்மையையும் உங்களுக்கு எடுத்துரைப்பேன்; எதையும் உங்களிடமிருந்து மறைக்க மாட்டேன். ‘மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பது அதனினும் சிறந்தது’ என்று முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நீரும் சாராவும் மன்றாடியபோது நான்தான் உங்கள் வேண்டுதல்களை எடுத்துச்சென்று ஆண்டவரின் மாட்சிமிகு திருமுன் ஒப்படைத்தேன்; இறந்தோரை நீர் புதைத்து வந்தபோதும் நான் அவ்வாறே செய்தேன்.

நீர் உணவு அருந்துவதை விட்டு எழுந்து வெளியே சென்று, இறந்தோரை அடக்கம் செய்யத் தயங்காத போது நானே உம்மைச் சோதிக்க அனுப்பப்பட்டேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

9

கைம்பெண்கள் திருப்பலியில்

யூதித்து கடவுளுக்கு மிகவும் அஞ்சி நடந்தார்.

யூதித்து நூலிலிருந்து வாசகம் 8: 2-8

யூதித்தின் கணவர் மனாசே. அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வாற்கோதுமை அறுவடைக் காலத்தில் மனாசே இறந்துபோனார். அவர் தம் வயலில் கதிர்களைச் சேர்த்துக் கட்டிக் கொண்டிருந்தவர்களை மேற்பார்வையிட்ட பொழுது, கடும் வெயில் அவரது தலையைத் தாக்கவே, அவர் படுத்த படுக்கையானார்; பின் தம் நகரான பெத்தூலியாவில் உயிர் துறந்தார்; தோத்தானுக்கும் பால்மோனுக்கும் இடையில் இருந்த வயலில் தம் மூதாதையரின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

யூதித்து கைம்பெண் ஆனார்; மூன்று ஆண்டு நான்கு மாதமாய்த் தம் இல்லத்திலேயே இருந்தார். தம் வீட்டின் மேல்தளத்தில் தமக்காகக் கூடாரம் ஒன்று அமைத்துக்கொண்டார்; இடுப்பில் சாக்கு உடை உடுத்தியிருந்தார்; கைம்பெண்ணுக்கு உரிய ஆடைகளை அணிந்திருந்தார்.

தம் கைம்மைக் காலத்தில் ஓய்வு நாளுக்கு முந்தின நாளும், ஓய்வு நாள் அன்றும், அமாவாசைக்கு முந்தின நாளும், அமாவாசை அன்றும், இஸ்ரயேல் இனத்தாருக்குரிய திருநாள்கள், மகிழ்ச்சியின் நாள்கள் தவிர மற்ற நாள்களில் நோன்பிருந்து வந்தார். அவர் பார்வைக்கு அழகானவர்; தோற்றத்தில் எழில் மிக்கவர். ஆண் பெண் பணியாளர்களோடு பொன், வெள்ளி, கால்நடைகள், வயல்கள் ஆகியவற்றை அவர் கணவர் மனாசே அவருக்கு விட்டுச் சென்றிருந்தார். இவை எல்லாம் யூதித்தின் உடைமையாயின.

யூதித்து கடவுளுக்கு மிகவும் அஞ்சி நடந்தார். அவரைப் பற்றி யாரும் தவறாகப் பேசியது இல்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

10

கடவுளை விட மனிதரை மிகுதியாக மாட்சிமைப்படுத்தக் கூடாது.

எஸ்தர் நூலிலிருந்து வாசகம் எஸ் (கி): 4: 17b-e, h

அந்நாள்களில்

மொர்தெக்காய் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, அனைத்தையும் ஆளும் மன்னராகிய ஆண்டவரே, அனைத்தும் உம் அதிகாரத்தின் கீழ் உள்ளன. நீர் இஸ்ரயேலைக் காக்கத் திருவுளம் கொள்ளும்போது எவராலும் உம்மை எதிர்த்து நிற்க முடியாது.

விண்ணையும் மண்ணையும் விண்ணின் கீழ் உள்ள ஒவ்வொரு வியத்தகு பொருளையும் படைத்தவர் நீரே. நீரே அனைத்திற்கும் ஆண்டவர். ஆண்டவராகிய உம்மை எதிர்ப்பவர் எவரும் இலர்.

ஆண்டவரே, நீர் அனைத்தையும் அறிவீர். தருக்குற்ற ஆமானுக்கு நான் வணக்கம் செலுத்த மறுத்ததற்குக் காரணம், செருக்கோ இறுமாப்போ வீண்பெருமையோ அல்ல என்பதையும் நீர் அறிவீர். இஸ்ரயேலின் மீட்புக்காக நான் அவனுடைய உள்ளங்கால்களைக் கூட முத்தமிட்டிருப்பேன். ஆனால் கடவுளை விட மனிதரை மிகுதியாக மாட்சிமைப்படுத்தக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு நடந்து கொண்டேன். ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு யாரையும் நான் வணங்க மாட்டேன். நான் ஆமானை வணங்க மறுப்பது செருக்கினாலன்று.

என் மன்றாட்டைக் கேட்டருளும்; உமது மரபுரிமைமீது இரக்கங்கொள்ளும். ஆண்டவரே, நாங்கள் உயிர் வாழ்ந்து உமது பெயரைப் புகழ்ந்து பாடும்பொருட்டு, எங்கள் அழுகையை மகிழ்ச்சியாக மாற்றுவீர்; உம்மைப் புகழ்ந்தேத்தும் வாயை அடைத்துவிடாதீர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

11

ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள்.

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31

திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தை விடப் பெருமதிப்புள்ளவள்.

அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒரு நாளும் தீங்கு நினையாள். கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.

இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.

எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.

ஆண்டவரின் அருள்வாக்கு.

12

ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 7-13

ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரிடம் இரக்கத்துக்காகக் காத்திருங்கள்; நெறி பிறழாதீர்கள்; பிறழ்ந்தால் வீழ்ச்சி அடைவீர்கள். ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்; உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காமற் போகாது. ஆண்டவருக்கு அஞ்சுவோரே, நல்லவை மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; நிலையான மகிழ்ச்சியையும் இரக்கத்தையும் எதிர்நோக்கியிருங்கள்.

முந்திய தலைமுறைகளை எண்ணிப்பாருங்கள். ஆண்டவரிடம் பற்றுறுதி கொண்டிருந்தோருள் ஏமாற்றம் அடைந்தவர் யார்? அவருக்கு அஞ்சி நடந்தோருள் கைவிடப்பட்டவர் யார்? அவரை மன்றாடினோருள் புறக்கணிக்கப்பட்டவர் யார்?

ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்; பாவங்களை மன்னிப்பவர்; துன்ப வேளையில் காப்பாற்றுகிறவர். கோழை நெஞ்சத்தவருக்கும் ஆற்றலற்ற கையருக்கும் இரட்டை வேடமிடும் பாவிகளுக்கும் ஐயோ, கேடுவரும்! உறுதியற்ற உள்ளத்தவருக்கும் ஐயோ, கேடு வரும்! ஏனெனில் அவர்கள் பற்றுறுதி கொள்ளவில்லை; எனவே அவர்களுக்குப் பாதுகாப்பு இராது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

13

நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 3: 17-18, 20-24

குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்; அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர். நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும். ஆண்டவரின் ஆற்றல் பெரிது; ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார்.

உனக்கு மிகவும் கடினமாக இருப்பவற்றைத் தேடாதே; உன் ஆற்றலுக்கு மிஞ்சியதை ஆராயாதே. உனக்குக் கட்டளையிடப்பட்டவை பற்றி எண்ணிப்பார்; ஏனெனில் மறைந்துள்ளவை பற்றி நீ ஆராய வேண்டியதில்லை. உனக்கு அப்பாற்பட்ட செயல்களில் தலையிடாதே.

ஏனெனில் உனக்குக் காட்டப்பட்டவையே மனித அறிவுக்கு எட்டாதவை. மாந்தரின் இறுமாப்பு பலரை நெறிபிறழச் செய்திருக்கிறது; தவறான கணிப்புகள் தீர்ப்புகளை ஊறுபடுத்தியுள்ளன.

ஆண்டவரின் அருள்வாக்கு.

14

நல்ல மனைவியின் அழகு ஆண்டவர் உறையும் உயர்வானில் எழும் கதிரவனைப் போன்றது.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 26: 1-4, 13-16

துணிவுள்ள மனைவியை அடைந்த கணவன் பேறுபெற்றவன். அவனுடைய வாழ்நாளின் எண்ணிக்கை இரு மடங்காகும். பற்றுள்ள மனைவி தன் கணவரை மகிழ்விக்கிறாள்; அவன் தன் வாழ்நாள் முழுவதும் அமைதியாகக் கழிப்பான்.

நல்ல மனைவியே ஒருவனுக்குக் கிடைக்கும் நல்ல சொத்து. ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பெறும் செல்வங்களுள் ஒன்றாக அவளும் அருளப்படுவாள். செல்வனாகவோ ஏழையாகவோ இருந்தாலும் அத்தகையவன் உள்ளம் மகிழ்ந்திருக்கும்; எக்காலத்திலும் அவனது முகம் மலர்ந்திருக்கும்.

ஒரு மனைவியிடம் விளங்கும் நன்னயம் அவள் கணவனை மகிழ்விக்கும்; அவளிடம் காணப்படும் அறிவாற்றல் அவன் எலும்புகளுக்கு வலுவூட்டும். அமைதியான மனைவி ஆண்டவர் அளித்த கொடை; நற்பயிற்சி பெற்றவளுக்கு ஈடானது ஏதுமில்லை. அடக்கமுள்ள மனைவியின் அழகே அழகு! கற்புள்ளவளுக்கு ஈடு இணை எதுவுமில்லை.

ஒழுங்கமைதி உடைய இல்லத்தில் விளங்கும் நல்ல மனைவியின் அழகு ஆண்டவர் உறையும் உயர்வானில் எழும் கதிரவனைப் போன்றது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

15

அறச்செயலில் ஈடுபட்டோர் திருப்பலியில்

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுங்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 6-11

ஆண்டவர் கூறுவது:

கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!

அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் ‘இதோ! நான்’ என மறுமொழி தருவார்.

உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.

ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்; வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்; உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தோட்டம் போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்று போலும் இருப்பாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

16

உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 7-9

ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும் ஏமாந்து போனேன்; நீர் என்னை விட வல்லமையுடையவர்; என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்; நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். நான் பேசும்போதெல்லாம் ‘வன்முறை அழிவு’ என்றே கத்த வேண்டியுள்ளது; ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.

“அவர் பெயரைச் சொல்ல மாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்” என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

17

ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே!

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 6: 6-8

ஆண்டவரின் திருமுன் வரும்போது உன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்? எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வரவேண்டுமா?

ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும் ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ? என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும், என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா?

ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்துகொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?

ஆண்டவரின் அருள்வாக்கு.

18

ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்.

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 2: 3; 3: 12-13

நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப் பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்; நேர்மையை நாடுங்கள்; மனத்தாழ்மையைத் தேடுங்கள்; ஆண்டவரது சினத்தின் நாளில் ஒருவேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும்.

ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்; அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள். இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்ய மாட்டார்கள்; வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது; அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தை போல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.