மனாசேக்குரிய மேற்குப்பகுதி

1யோசேப்பின் முதல் மகனான மனாசேயின் குலத்திற்குக் கிடைத்த நிலப்பகுதியின் விவரம்; மனாசேயின் முதல் மகனும் கிலயாதின் தந்தையுமான மாக்கிர் போர்வீரனாக இருந்ததால் அவனுக்குக் கிலயாதும் பாசானும் அளிக்கப்பட்டன.
2மனாசேயின் ஏனைய மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் அபியேசர், ஏலக்கு, அசிரியேல், செக்கேம், ஏபேர், செமிதா ஆகியோரின் புதல்வர்கள். இவர்கள் யோசேப்பின் மகனான மனாசேயின் ஆண்மக்களும் அவர்கள் குடும்பத்தாரும் ஆவர்.
3மனாசேயின் மகனான மாக்கிருக்குப் பிறந்த கிலயாதின் மகனாகிய ஏபேரின் புதல்வன் செலோபுகாதுக்கு ஆண்மக்கள் இல்லை; பெண்மக்கள் மட்டும் இருந்தனர். அவனுடைய பெண்மக்களின் பெயர்கள்; மக்லா, நோவா, ஒகுலா, மில்கா, தீரட்சா.
4அவர்கள் குரு எலயாசரையும், நூனின் மகன் யோசுவாவையும், தலைவர்களையும் அணுகி, “எங்கள் சகோதரர்கள் நடுவில் எங்களுக்கு உடைமைகள் அளிக்க ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டார்” என்றனர். ஆண்டவரின் கட்டளைப்படி அவர்களுக்கு அவர்களுடைய தந்தையின் சகோதரர்களின் நடுவில் உரிமைச்சொத்து அளித்தார்.
5யோர்தானுக்கு அப்பால் உள்ள கிலயாது, பாசான் நிலம் தவிர மனாசேக்குப் பத்துப் பங்குகள் விழுந்தன.
6ஏனெனில், மனாசேயின் புதல்வியர் அவனுடைய புதல்வர்களுடன் சொத்துரிமை பெற்றனர். கிலயாது நாடு மனாசேயின் ஏனைய புதல்வருக்குக் கிடைத்தது.
7மனாசேயின் எல்லை ஆசேரிலிருந்து செக்கேமின் எதிரில் உள்ள மிக்மத்தாத்துவரை செல்கின்றது. அவ்வெல்லை தென் பக்கமாக ஏன் தப்புவாகு பகுதியில் வாழ்கின்ற மக்களையும் உள்ளடக்கியது.
8தப்புவாகு நிலப்பகுதி மனாசேக்குச் சொந்தமாயிற்று. மனாசேயின் எல்லையில் இருந்த தப்புவாகு நகர் எப்ராயிமின் மக்களுக்குச் சொந்தமானது.
9இவ்வெல்லை கானா நதியை நோக்கி இறங்குகின்றது. நதிக்குத் தென்புறமாக உள்ள இந்நகர்கள் எபிராயிமுக்குச் சொந்தமானவை. இவை மனாசேயின் நகர்களுக்கு நடுவில் உள்ளன. மனாசேயின் எல்லை ஓடைக்கு வடக்கில் உள்ளது. அது கடலில் முடிவடைகிறது.
10எப்ராயிமின் பகுதிக்குத் தெற்காகவும், மனாசேயின் பகுதிக்கு வடக்காகவும் கடல் அதன் எல்லையாக இருந்தது. அவை வடக்கில் ஆசேருக்கு உரிய எல்லையையும், கிழக்கில் இசக்காருக்கு உரிய எல்லையையும் தொட்டன.
11இசக்கார், ஆசேர் எல்லைகளுக்குள் பெத்சானும் அதன் ஊர்களும், இப்லயாமும் அதன் ஊர்களும், தோரின் குடிமக்களும் அதன் ஊர்களும், ஏன்தோரின் குடிமக்களும், அதன் ஊர்களும், தானாக்கின் குடிமக்களும் அதன் ஊர்களும், மெகிதோவின் குடிமக்களும் அதன் ஊர்களும் மனாசேக்கு உரிமையாக்கப்பட்டன.
12மனாசேயின் மக்களால் இந்நகர்களைக் கைப்பற்ற முடியவில்லை. கானானியர் அப்பகுதியிலேயே உறுதியுடன் தங்கிவிட்டனர்.
13இஸ்ரயேலரின் புதல்வர் வலிமை பெற்றவுடன் கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல், அடிமை வேலைக்கு அமர்த்திக் கொண்டனர்.

எப்ராயிம், மனாசே அதிக நிலம் கேட்டல்

14யோசேப்பின் புதல்வர் யோசுவாவிடம், “ஏன் எங்களுக்கு உரிமைச் சொத்தாக ஒரே ஒரு பங்கு அளித்தீர்? எங்கள் மக்கள் பெருந்தொகையினர். ஆண்டவர் எங்களுக்கு இத்துணை ஆசி வழங்கியுள்ளார்!” என்றனர்.
15யோசுவா அவர்களிடம், “நீங்கள் திரளான மக்களாக இருப்பதால் பெரிசியர், இரபாயிம் ஆகியோரின் காட்டு நிலத்திற்குப் போய் அதைத் திருத்திக் கொள்ளுங்கள். எப்ராயிம் மலைப்பகுதியோ உங்களுக்கு மிகவும் குறுகலானது” என்றார்.
16யோசேப்பின் மக்கள், “மலைப்பகுதி எங்களுக்குப் போதாது. மேலும், சமவெளியில் இருக்கும் பெத்சானிலும் அதன் ஊர்களிலும், மற்றும் இஸ்ரியேல் சமவெளியிலும் வாழும் கானானியர் அனைவரிடமும் இரும்புத் தேர்கள் இருக்கின்றன” என்றனர்.
17யோசுவா யோசேப்பின் வீட்டாரான எப்ராயிமிடமும் மனாசேயிடமும், “நீங்கள் திரளான மக்கள். வலிமை மிக்கவர்கள். உங்களுக்கு ஒரு பங்கு மட்டும் இல்லை.
18மலைப்பகுதியும் உங்களுடையதே. அது காட்டுப் பகுதியாக இருப்பதால் அதை நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள். அதன் எல்லை அனைத்தும் உங்களுக்குச் சொந்தம். ஏனெனில், கானானியருக்கு இரும்புத் தேர்கள் இருந்தாலும், அவர்கள் வலிமையுள்ளவர்களாய் இருந்தாலும் நீங்கள் அவர்களை விரட்டுவீர்கள்” என்றார்.

17:4 எண் 27:1-7. 17:12-13 நீத 1:27-28.