எஞ்சிய நிலத்தைப் பங்கிடல்

1இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பு முழுவதும் சீலோவில் ஒன்று கூடியது. அங்குச் சந்திப்பு கூடாரத்தை அமைத்தனர். ஏற்கெனவே அவர்கள் நிலத்தைக் கைப்பற்றியிருந்தனர்.
2இஸ்ரயேல் மக்களில் ஏழு குலங்களுக்கு அவர்களுடைய உரிமைச் சொத்துப் பிரித்துத் தரப்படவில்லை.
3இஸ்ரயேல் மக்களிடம் யோசுவா, “உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டைப் பெற்றுக்கொள்ளாமல் எவ்வளவு காலம் சோம்பேறிகளாக இருப்பீர்கள்?
4குலத்திற்கு மும்மூன்று பேரைத் தேர்ந்தெடுங்கள். அவர்கள் நான் அனுப்ப, அவர்கள் புறப்பட்டு, நாடெங்கும் சுற்றிச் சென்று அவரவர் உரிமைச்சொத்து இன்னதென்று வரைந்து, என்னிடம் கொண்டு வருவார்கள்.
5அவர்கள் நாட்டை ஏழு பிரிவுகளாகப் பிரிப்பர். யூதா தெற்கில் தங்கள் எல்லையில் தங்கியிருப்பர். யோசேப்பின் வீட்டார் வடக்கில் அதன் எல்லையில் தொடர்ந்து தங்கியிருப்பர்.
6நீங்கள் நிலத்தை ஏழு பிரிவுகளாக வரைந்து என்னிடம் கொண்டு வருவீர்கள். நான் இங்கு உங்களுக்குக் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் திருவுளச்சீட்டுப் போடுவேன்.
7லேவியர்க்கு உங்கள் நடுவில் பங்கு இல்லை. ஏனெனில், ஆண்டவருக்குக் குருத்துவப்பணி புரிவதே அவர்கள் உரிமைச் சொத்து” என்றார். ஆண்டவரின் ஊழியர் மோசே அவர்களுக்குக் கொடுத்தபடி, காத்து, ரூபன், மனாசேயின் அரைக்குலம் ஆகியோர் தங்களுடைய உரிமைச் சொத்தினை யோர்தானுக்கு அப்பால் கிழக்கில் பெற்றனர்.
8அவ்வாறே அம்மனிதர் புறப்பட்டுச் சென்றனர். நிலத்தை வரையுமாறு செல்பவர்களுக்கு யோசுவா கட்டளையிட்டுக் கூறியது: “சென்று, நிலத்தைச் சுற்றிப்பார்த்து வரைந்து கொண்டு வாருங்கள். நான் உங்களுக்கு ஆண்டவர் முன்னிலையில் சீலோவில் திருவுளச்சீட்டுப் போடுவேன்”.
9அம்மனிதர் சென்று நிலத்தைச் சுற்றிப் பார்த்தனர். நகர்களின் பட்டியலை ஏழு தொகுதிகளாகப் புத்தகத்தில் எழுதினர். சீலோவில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் திரும்பி வந்தனர்.
10யோசுவா சீலோவில் ஆண்டவர் முன்னிலையில் அவர்களுக்குத் திருவுளச்சீட்டுப் போட்டார். அங்கே யோசுவா இஸ்ரயேல் மக்களுக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நிலத்தைப் பங்கிட்டார்.

பென்யமினுக்கு அளிக்கப்பட்ட பகுதி

11முதல் சீட்டு பென்யமின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்களது எல்லை யூதா மக்களுக்கும் யோசேப்பின் மக்களுக்கும் இடையில் விழுந்தது.
12அவர்களது எல்லை வடக்குப் பகுதியில் யோர்தானிலிருந்து தொடங்கிப் பின்னர் எரிகோவில் வட சரிவில் ஏறி, பிறகு மேற்கில் மலைப்பக்கம் சென்று பெத்சாவேன் பாலைநிலத்தில் முடிவடைகிறது.
13மீண்டும் அவ்வெல்லை அங்கிருந்து தெற்குப்பக்கமாகப் பெத்தேல் என்னும் லூசின் சரிவை நோக்கிச் சென்று அதனைக் கடக்கிறது. பின்னர், அவ்வெல்லை கீழ் பெத்கோரோனுக்குத் தெற்கே மலைமீது உள்ள அத்தராத்து அதாரை நோக்கிச் செல்கிறது.
14பின்பு, அவ்வெல்லை மேற்கு முகமாகத் திரும்பி அங்குள்ள மலைக்குத் தெற்காக பெத்கோரோனுக்கு எதிராக யூதா மக்களுக்குரிய கிரியத்துஎயாரிம் எனப்படும் கிரியத்துபாகாலில் முடிவடைகிறது. இதுவே மேற்கு எல்லை.
15அதன் தென் எல்லை கிரியத்து எயாரிமின் எல்லைப்புறத்தில் தொடங்கி மேற்காகச் சென்று, பிறகு நெப்தோவாகு நீர்நிலைகள்வரை போகிறது.
16மேலும், அவ்வெல்லை இரபாயிம் பள்ளத்தாக்கின் வடகோடியில் உள்ள இன்னோம் மகனின் பள்ளத்தாக்கை நோக்கி நிற்கும் மலைவரை செல்கிறது. பின்னர், அது எபூசியரின் மலைச்சரிவிற்குத் தெற்கேயுள்ள இன்னோம் பள்ளத்தாக்கை நோக்கி ஏன்ரோகேல் பக்கமாக இறங்குகிறது.
17பிறகு, அது வட பக்கம் திரும்பி அதும்மிம் மேட்டுக்கு எதிரில் உள்ள கெலிலோத்துப் பக்கம் திரும்பி ரூபனின் மகன் போகனின் கல் பக்கம் செல்கிறது.
18பிறகு, அது வடக்கே மலைச்சரிவில் அராபாவின் எதிராகச் சென்று அராபாவில் இறங்குகிறது.
19பிறகு, அது பெத்தொகிலாவின் வடசரிவைக் கடந்து உப்புக் கடலின் வடக்கு வளைவில் யோர்தானின் தென்பகுதியில் முடிவடைகிறது. இதுவே தென் எல்லை.
20கிழக்கே யோர்தான் நதி எல்லையாக அமைந்துள்ளது. இது பென்யமின் மக்களின் குடும்பங்களுக்கு கிடைத்த, சுற்றிலும் எல்லையிடப்பட்ட உரிமைச் சொத்து.
21பென்யமின் மக்களின் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி உடைமையான நகர்கள்; எரிக்கோ, பெத்தொகிலா, ஏமக்கசீசு
22பெத்தராபா, செமாரயிம், பெத்தேல்,
23அவ்விம், பாரா, ஒபிரா,
24கெபரம்மோனி, ஒப்னி, கேபா ஆகிய பன்னிரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
25கிபயோன், இராமா, பெயரோத்து,
26மிஸ்பே, கெப்பிரா, மோசா,
27இரக்கேம், இரிப்பயேல், தராலா,
28சேலா, எலேபு, எருசலேம் என்னும் எபூசி, கிபயத்து, கிரியத்து ஆகிய பதினான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. இது பென்யமின் மக்களுக்கு அவர்களின் குடும்பங்களின்படிக் கிடைத்த உடைமை.