தலைமைக் குரு ஆல்கிம்

1மூன்று ஆண்டுகளுக்குப்பின், செலூக்கின் மகன் தெமேத்திரி ஒரு வலிமைமிக்க தரைப்படையோடும் கப்பற்படையோடும் பயணம் செய்து திரிப்போலி நகரத் துறைமுகத்துக்கு வந்து,
2அந்தியோக்கையும் அவனுடைய பாதுகாப்பாளன் லீசியாவையும் கொன்றபின் நாட்டைக் கைப்பற்றியதாக யூதாவுக்கும் அவருடைய ஆள்களுக்கும் செய்தி கிடைத்தது.
3முன்பு தலைமைக் குருவாக இருந்தவனும் கிளர்ச்சிக் காலத்தில் மனம் பொருந்தித் தம்மையே தீட்டுப்படுத்திக் கொண்டவனுமான ஆல்கிம் தனக்கு எத்தகைய பாதுகாப்பும் இல்லை என்றும், தூய பலீபீடத்தை அணுக வாய்ப்பு இல்லை என்றும் உணர்ந்தான்;
4நூற்று ஐம்பத்தோராம் ஆண்டளவில்* தெமேத்திரி மன்னனிடம் சென்று ஒரு பொன்முடி, பொன் குருத்தோலை ஆகியவற்றோடு கோவிலிருந்து வழக்கமாகக் கொடுக்கப்படும் ஒலிவக்கிளைகளையும் அவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான்; அன்று அமைதியாய் இருந்தான்.
5ஆனால் தன்னுடைய மதிகெட்ட திட்டத்தை நிறைவேற்ற ஆல்கிமுக்கு நல்லதொரு வாய்ப்புக் கிட்டியது. ஆட்சிமன்றக் கூட்டத்துக்குத் தெமேத்திரி அவனை அழைத்து யூதர்களின் மனநிலை, திட்டம் பற்றி வினவியபோது அவன் பின்வருமாறு பதிலிறுத்தான்:
6“யூதா மக்கபேயின் தலைமையில் செயல்படுகின்ற கசிதேயர் எனப்படும் யூதர்களே தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; பேரரசில் அமைதி நிலவாதவாறு கிளர்ச்சியைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
7ஆகவே என்னுடைய மூதாதையர் வழிவந்த பெருமையாகிய தலைமைக் குருபீடத்தை இழந்துவிட்டு இப்போது இங்கு வந்திருக்கிறேன்.
8முதலாவதாக, மன்னருடைய நலன்களில் எனக்கு உண்மையான ஈடுபாடு உண்டு; இரண்டாவதாக என் நாட்டு மக்களின் நலனிலும் எனக்கு நாட்டம் உண்டு. நான் முன்குறிப்பிட்டவர்களுடைய மூட நடவடிக்கைகளால் எங்கள் இனம் முழுவதும் பெருந்துன்பத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
9மன்னரே, இதுபற்றிய முழு விவரமும் தாங்கள் தெரிந்துகொண்டு, எல்லாரிடமும் காட்டும் மனித நேயத்துக்கு ஏற்ப எங்கள் நாட்டுக்கும் ஒடுக்கப்படுகின்ற எங்கள் இனத்துக்கும் நன்மை செய்யுங்கள்.
10யூதா உயிரோடிருக்கும் வரை பேரரசில் அமைதி நிலவ முடியாது.”
11ஆல்கிம் இவ்வாறு பேசியவுடன், யூதாவோடு பகைமை கொண்டிருந்த மன்னனின் நண்பர்களும் தெமேத்திரிக்கு மேலும் சினமூட்டினார்கள்.
12எனவே தெமேத்திரி உடனடியாக யானைப் படையின் தலைவனாய் இருந்த நிக்கானோரைத் தேர்ந்தெடுத்து யூதேயாவின் ஆளுநனாக ஏற்படுத்தி அனுப்பி வைத்தான்;
13யூதாவைக் கொல்லவும் அவருடைய ஆள்களைச் சிதறடிக்கவும் சிறப்புமிகு கோவிலின் தலைமைக் குருவாக ஆல்கிமை ஏற்படுத்தவும் அவனுக்குக் கட்டளையிட்டான்.
14யூதாவுக்கு அஞ்சி யூதேயாவிலிருந்து தப்பியோடியிருந்த பிற இனத்தார் நிக்கானோரோடு சேர்ந்துகொள்ள ஒன்று கூடினார்கள்; யூதர்களுக்கு நேரிடும் இன்னல், இடுக்கண்கள் தங்களுக்கு வளமூட்டும் என்று எண்ணினார்கள்.

நிக்கானோரின் நட்பும் எதிர்ப்பும்

15நிக்கானோருடைய வருகை பற்றியும் பிற இனத்தார் அவனோடு சேர்ந்துகொண்டது பற்றியும் யூதர்கள் கேள்விப்பட்டபோது, தங்கள் தலையில் புழுதியைத் தூவிக்கொண்டார்கள்; தங்களை என்றென்றும் தம் மக்களாக நிலைநிறுத்தி, தம் வெளிப்பாடுகள் மூலம் தம் வழிவழி உரிமையாகிய தங்களைக் காத்துவரும் இறைவனிடம் கெஞ்சி மன்றாடினார்கள்.
16தலைவர் யூதா கட்டளையிட, அவர்கள் அங்கிருந்து உடனே புறப்பட்டுத் தெசாவு என்ற சிற்றூரில் எதிரிகளோடு போர் தொடுத்தார்கள்.
17யூதாவின் சகோதரரான சீமோன், நிக்கானோரை எதிர்த்துப் போரிட்டார்; திடீரெனப் பகைவர்கள் அவரைத் தாக்கியதால், சற்றுப் பின்வாங்கினார்.
18இருப்பினும் யூதா, அவருடைய ஆள்கள் ஆகியோருடைய வலிமைபற்றியும், தங்கள் நாட்டிற்காகச் செய்த போரில் அவர்கள் காட்டிய துணிவுபற்றியும் நிக்கானோர் கேள்வியுற்றபோது, குருதி சிந்துதல்மூலம் இச்சிக்கலுக்குத் தீர்வு காணத் தயங்கினான்.
19ஆகவே ஒப்பந்தம் செய்துகொள்ளப் பொசிதோன், தெயதோத்து, மத்தத்தியா ஆகியோரை அனுப்பினான்.
20ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை முற்றிலும் ஆய்ந்து பார்த்தபின் அவைபற்றித் தலைவன் நிக்கானோர் தன் வீரர்களுக்கு எடுத்துக்கூறினான். அவர்கள் அனைவரும் அவற்றுக்கு இணக்கம் தெரிவித்து ஒருமனப்பட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
21தலைவர்கள் சந்தித்துக்கொள்ள ஒருநாள் குறிப்பிடப்பட்டது. ஒவ்வொரு படையிலிருந்தும் ஒரு தேர் முன்னால் வந்தது; இருக்கைகள் போடப்பட்டன.
22பகைவர்கள் திடீரெனச் சூழ்ச்சியில் இறங்கிவிடாதவாறு படைக்கலன்களைத் தாங்கிய வீரரை முன்னேற்பாடாக முக்கியமான இடங்களில் யூதா நிறுத்திவைத்தார். இருவரும் முறைப்படி கலந்து ஆலோசித்தனர்.
23நிக்கானோர் எருசலேமிலேயே தங்கியிருந்தான். முறைகேடானது எதுவும் செய்யவில்லை. தன்னைச் சுற்றித் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை அனுப்பிவைத்தான்.
24அவன் யூதாவோடு அடிக்கடி உரையாடுவான்; அவரிடத்தில் உள்ளார்ந்த பற்றுக் கொண்டிருந்தான்.
25யூதா திருமணம் செய்துகொண்டு பிள்ளைகளைப் பெற்றெடுக்குமாறு அவன் தூண்டினான். அவரும் திருமணம் செய்து அமைதியில் வாழ்க்கை நடத்தினார்.
26அவர்கள் இருவருக்கும் இடையே நிலவிய நட்பைக் கண்ட ஆல்கிம், முன்பு செய்யப்பட்டிருந்த ஒப்பந்தத்தின் நகலை எடுத்துக்கொண்டு, தெமேத்திரியிடம் சென்றான்; அரசத் துரோகியான யூதாவை நிக்கானோர் தன் பின்தோன்றலாக ஏற்படுத்தியுள்ளதால் அவன் அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கிறான் என்று அவனிடம் கூறினான்.
27இந்தச் சதிகாரனுடைய பொய்க் குற்றச்சாட்டுகளால் கொதிப்படைந்த மன்னன் சீற்றங்கொண்டான்; அந்த ஒப்பந்தம் தனக்கு மனநிறைவு தரவில்லை என்றும் மக்கபேயை உடனே கைதியாக அந்தியோக்கிக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் நிக்கானோருக்கு எழுதினான்.
28இந்தச் செய்தி நிக்கானோருக்குக் கிடைத்தபோது அவன்பெரிதும் கலங்கினான்; யூதா எவ்வகைக் குற்றமும் செய்யாதிருந்தபோது அவரோடு செய்திருந்த ஒப்பந்தத்தை முறிக்க வேண்டியிருந்ததைப் பற்றி வருந்தினான்;
29ஆயினும் மன்னனை எதிர்க்க முடியாததால் அவனுடைய ஆணையைச் சூழ்ச்சியாக நிறைவேற்ற ஒரு வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தான்.
30ஆனால் நிக்கானோர் தம்மோடு மிகக் கண்டிப்பாய் நடந்துகொண்டதையும், வழக்கத்திற்கு மாறாகத் தம்மோடு கடுமையாய் இருந்ததையும் கண்ட மக்கபே இது நல்லெண்ணத்தால் எழுந்தது அன்று என்று முடிவு செய்தார். ஆகவே தம் ஆள்களுள் பலரைச் சேர்த்துக்கொண்டு, நிக்கானோரிடமிருந்து விலகிச் சென்று ஒளிந்து வாழ்ந்தார்.
31யூதா தன்னைச் சூழ்ச்சியினால் வென்றுவிட்டார் என்பதை உணர்ந்த நிக்கானோர், குருக்கள் வழக்கப்படி பலி செலுத்திக்கொண்டிருந்த வேளையில் திருப்பெருங் கோவிலுக்குச் சென்றான்; மக்கபேயைத் தன்னிடம் ஒப்படைக்கக் கட்டளையிட்டான்.
32அவன் தேடிய மனிதர் எங்கு இருக்கிறார் என்பது தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் ஆணையிட்டார்கள்.
33அப்போது நிக்கானோர் கோவிலை நோக்கித் தன் வலக்கையை நீட்டி, “நீங்கள் யூதாவைக் கைதியாக என்னிடம் ஒப்படைக்காவிட்டால் கடவுளின் இந்தத் திருஉறைவிடத்தைத் தரைமட்டமாக்குவேன்; பலிபீடத்தை இடித்துத் தள்ளுவேன்; இங்குத் தியனீசுக்கு மிகச் சிறந்த ஒரு கோவிலைக் கட்டுவேன்” என்று சூளுரைத்தான்.
34இச்சொற்களைக் கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான். குருக்கள் விண்ணை நோக்கித் தங்கள் கைகளை உயர்த்தித் தம் இனத்தை எப்போதும் காத்துவருகின்றவரை மன்றாடினார்கள்:
35“அனைத்துக்கும் ஆண்டவரே, உமக்கு ஒன்றும் தேவையில்லை. எனினும் நீர் எங்களிடையே தங்குவதற்கு ஓர் உறைவிடம் அமைக்கத் திருவுளங்கொண்டீர்.
36எனவே, தூய ஆண்டவரே, தூய்மைக்கெல்லாம் ஊற்றே, சிறிது காலத்துக்குமுன் தூய்மைப்படுத்தப்பெற்ற இந்த இல்லத்தை என்றென்றும் தீட்டுப்படாமல் காப்பாற்றும்” என்று வேண்டினார்கள்.

இராட்சியின் இறப்பு

37எருசலேமின் மூப்பர்களுள் ஒருவரான இராட்சிக்கு எதிராக நிக்கானோரிடம் குற்றம் சாட்டப்பட்டது. அவர் தம் மக்களிடம் அன்புகொண்டவர்; அவர்களிடையே மதிப்புப் பெற்றவர்; நல்மனம் படைத்தவர்; இதனால் யூதர்களின் தந்தை என்று பெயர் பெற்றவர்;
38முற்காலத்தில் நடந்த கிளர்ச்சியின்போது, யூத நெறிப்படி வாழ்ந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி, யூத மறைக்காகத் தம் உடலையும் உயிரையும் மிகுந்த ஆர்வத்துடன் இழக்கத் துணிந்தவர்.
39யூதரோடு தனக்கு இருந்த பகைமையை வெளிப்படுத்த விரும்பி, இராட்சியைக் கைது செய்து வருமாறு ஐந்நூறுக்கும் மிகுதியான படைவீரர்களை நிக்கானோர் அனுப்பிவைத்தான்;
40இதன்மூலம் யூதர்களுக்குப் பேரிடர் விளைவிக்க எண்ணினான்;
41படைவீரர்கள் காவல் மாடத்தைக் கைப்பற்றி முற்றத்தின் கதவை உடைக்கவிருந்தபோது நெருப்பைக் கொண்டுவரச்செய்து கதவுகளை எரிக்கப் பணித்தான். அப்பொழுது அவர்களால் சூழப்பட்ட இராட்சி தம் வாளின் மேலேயே வீழ்ந்தார்.
42தீயோர் கையில் அகப்பட்டுத்தம் உயர்குடிப் பிறப்புக்குத் தகாத இழிவு அடைவதைவிட மானத்தோடு இறக்க விரும்பினார்.
43அப்போது ஏற்பட்ட பரபரப்பில் அவர் வாள் மீது சரியாக விழவில்லை. வீரர்கள் கதவுகளின் வழியாகப் பாய்ந்து வரவே அவர் துணிந்து மதில்மேல் ஏறி ஆண்மையோடு கூட்டத்தினூடே குதித்தார்.
44ஆனால் வீரர்கள் விரைந்து விலக, அங்கு ஏற்பட்ட வெற்றிடத்தின் நடுவில் விழுந்தார்.
45இன்னும் உயிர் இருக்கையில், சீற்றத்தால் பற்றியெரிந்தவராய் அவர் எழுந்தார்; குருதி பீறிடக் கொடிய காயங்களுடன் கூட்டத்தின் நடுவே ஓடி ஒரு செங்குத்தான பாறைமேல் நின்றார்.
46அவருடைய குருதியெல்லாம் வடிந்ததும் அவர் தம் குடல்களைக் கீறி எடுத்து இரு கைகளாலும் பிடித்துக் கூட்டத்தை நோக்கிச் சுழற்றி எறிந்தார். இவற்றைத் தமக்குத் திரும்பவும் தருமாறு உயிருக்கும் மூச்சுக்கும் ஆண்டவரான இறைவனை மன்றாடினார். இவ்வாறு இராட்சி இறந்தார்.

14:1-10 1 மக் 7:1-21. 14:6 1 மக். 2:42; 7:13.
14:4 கி.மு. 161.