நிக்கானோரின் சூழ்ச்சி

1யூதாவும் அவருடைய ஆள்களும் சமாரியா நாட்டில் இருக்கிறார்கள் என்று கேள்வியுற்ற நிக்கானோர் தனக்கு இழப்பு நேராவண்ணம் அவர்களை ஓய்வுநாளில் தாக்கத் திட்டமிட்டான்.
2நிக்கானோரைப் பின்தொடரக் கட்டாயத்துக்கு உள்ளான யூதர்கள் அவனிடம், “அவர்களை இத்துணைக் கொடுமையாகவும் முரட்டுத்தனமாகவும் அழிக்கவேண்டாம்; எல்லாவற்றையும் காண்பவர் மற்ற நாள்களைவிட மாட்சிப்படுத்தித் தூய்மைப்படுத்தியுள்ள இந்நாளை மதிப்பீராக” என்றார்கள்.
3அதற்கு அந்த மாபெரும் கயவன், “ஓய்வு நாளைக் கடைப்பிடிக்க கட்டளையிட்டுள்ள ஓர் அரசன் விண்ணில் இருக்கிறானோ?” என்று வினவினான்.
4அப்போது அவர்கள், “என்றுமுள ஆண்டவரே விண்ணின் வேந்தர்; அவரே ஏழாம் நாளைக் கடைப்பிடிக்க எங்களைப் பணித்தவர்” என்று அறிக்கையிட்டார்கள்.
5அதற்கு அவன், “மண்ணின் வேந்தன் நான். ஆகவே நீங்கள் படைக்கலங்களை எடுத்து அரச அலுவல் செய்ய நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்” என்றான். ஆயினும் தனது கொடிய திட்டத்தை நிறைவேற்றுவதில் அவன் வெற்றிபெறவில்லை.

யூதா போருக்கு ஏற்பாடு செய்தல்

6செருக்கும் இறுமாப்பும் கொண்ட நிக்கானோர் யூதாவையும் அவருடைய ஆள்களையும் வென்று, வெற்றிச் சின்னம் ஒன்றை எழுப்ப முடிவு செய்திருந்தான்.
7ஆயினும் ஆண்டவரிடமிருந்து தமக்கு உதவி கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையில் மக்கபே தளராதிருந்தார்;
8பிற இனத்தாரின் தாக்குதலைப்பற்றி அஞ்சாதிருக்கவும், முன்பு விண்ணக இறைவனிடமிருந்து தங்களுக்குக் கிடைத்த உதவியை நினைவுகூரவும், இப்போதும் எல்லாம் வல்லவர் தங்களுக்கு வெற்றியை அருள்வார் என நம்பிக்கைகொள்ளவும் அவர் தம் ஆள்களுக்கு அறிவுரை வழங்கினார்;
9திருச்சட்ட நூலிருந்தும் இறைவாக்கு நூல்களிலிருந்தும் படித்துக்காட்டி அவர்களுக்கு ஊக்கமூட்டினார்; அவர்கள் ஏற்கனவே வென்றிருந்த போர்களை நினைவுபடுத்தி ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்.
10அவர்களுக்குத் துணிவூட்டிக் கட்டளையிட்டார்; பிற இனத்தார் நம்பிக்கைத் துரோகம் புரிந்ததையும் ஆணைகளை மீறியதையும் சுட்டிக் காட்டினார்;
11கேடயம், ஈட்டி ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பாதுகாப்பைவிட ஊக்கமூட்டும் சொல் என்னும் படைக்கலத்தை அவர்கள் ஒவ்வொருவருக்கும் அணிவித்தார்; தாம் கண்ட ஒரு கனவுபற்றி அதாவது நம்பத்தகுந்த ஒருவகைக் காட்சிபற்றி விளக்கி அவர்கள் அனைவரையும் மகிழ்வித்தார்.
12அவர் கண்ட காட்சி பின்வருமாறு: ஓனியா தம் கைகளை விரித்து யூத மக்கள் அனைவருக்காகவும் மன்றாடிக் கொண்டிருந்தார். அவர் ஒரு காலத்தில் தலைமைக் குருவாய் இருந்தவர், நல்லவர், மேன்மைமிக்கவர், எளிமையான தோற்றமும் அடக்கமுடைமையும் உள்ளவர், பொருந்தப் பேசுபவர், குழந்தைப் பருவ முதல் நற்பண்புகளில் பயிற்சி பெற்றவர்.
13இதேபோல வேறொரு மனிதரும் தோன்றினார்; அவர் நரைத்த முடியும் மதிப்பும் வியத்தகு மாட்சியும் அதிகாரத் தோற்றமும் கொண்டவர்.
14அப்போது ஓனியா, “இவர் தம் சகோதரர்கள்மீது அன்புசெலுத்துபவர்; தம் மக்களுக்காகவும் திருநகருக்காகவும் மிகுதியாக வேண்டிக்கொள்பவர்; இவரே கடவுளின் இறைவாக்கினரான எரேமியா” என்று கூறினார்.
15அப்பொழுது எரேமியா தமது வலக்கையை நீட்டி, யூதாவுக்கு ஒரு பொன் வாளைக் கொடுத்தார். அதைக் கொடுத்தபடியே,
16“கடவுளின் கொடையாகிய இத்தூய வாளை எடுத்துக்கொள்ளும்; இதைக்கொண்டு உம்முடைய எதிரிகளை அடித்து நொறுக்கும்” என்றார்.
17அஞ்சாமையைத் தூண்டிவிடக் கூடியதும் இளைஞருடைய உள்ளங்களில் வீரத்தை எழுப்பிவிடக்கூடியதுமான தம் விழுமிய சொற்களால் யூதா எல்லாருக்கும் ஊக்கமூட்டினார். எனவே காலம் தாழ்த்தாமல் துணிவுடன் தாக்கி, முழு வலிமையோடு நேருக்கு நேர் போர்செய்து நிலைமைக்கு முடிவு காண அவர்கள் உறுதிபூண்டார்கள்; ஏனெனில் நகரமும் திருஉறைவிடமும் கோவிலும் ஆபத்தான நிலையில் இருந்தன.
18தங்கள் மனைவியர், பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோரைப் பற்றி அவர்கள் பெரிதும் கவலைப்படவில்லை; தூய்மைப்படுத்தப்பெற்ற கோவிலைப்பற்றியே எல்லாவற்றுக்கும் மேலாகக் கவலைப்பட்டார்கள்.
19நகரில் விடப்பட்டிருந்தவர்களும் பெரிதும் மனக்கலக்கம் அடைந்தார்கள்; ஏனெனில் திறந்தவெளியில் நடைபெறவிருந்த மோதலைப் பற்றிய கவலை அவர்களுக்கு இருந்தது.
20போரின் முடிவை எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். எதிரிகள் போருக்கு அணிவகுத்துத் தங்கள் படைகளுடன் நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். யானைகள் போர்த்திற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும், குதிரைப்படைகள் இருபக்கங்களிலுமாக நிறுத்தப்பட்டன.
21படைத்திரளின் அணிவகுப்பையும் வீரர்களின் படைக்கல வகைகளையும் யானைகளின் வெறியையும் கண்ட மக்கபே விண்ணை நோக்கித் தம் கைகளை உயர்த்தி, வியத்தகு செயல்கள் புரியும் ஆண்டவரை மன்றாடினார். ஏனெனில் படைக்கலங்களினால் அல்ல; ஆண்டவரின் திருவுளப்படி தகுதி பெற்றவர்களுக்கே அவர் வெற்றியை அருள்கிறார் என்று அறிந்திருந்தார்;
22அவர் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, யூதேயாவின் மன்னர் எசேக்கியாவின் காலத்தில் நீர் உம் வானதூதரை அனுப்ப, அவர் சனகெரிபின் பாசறையில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைக் கொன்றார்.
23விண்ணின் வேந்தரே, பகைவர்களைப் பெரிதும் அஞ்சி நடுங்கவைத்து எங்களை வழிநடத்தக் கூடிய ஒரு நல்ல வானதூதரை இப்போது அனுப்பும்.
24உம் தூய மக்களைத் தாக்க வந்திருக்கும் இந்த இறைப்பழிப்போரை உமது கைவன்மையால் வீழ்த்துவீராக.” இத்துடன் அவர் தம் வேண்டுதலை முடித்துக்கொண்டார்.

நிக்கானோரின் வீழ்ச்சியும் இறப்பும்

25நிக்கானோரும் அவனுடைய ஆள்களும் எக்காளங்களோடும் போர்ப் பாடல்களோடும் முன்னேறிச் சென்றார்கள்.
26ஆனால் யூதாவும் அவருடைய ஆள்களும் இறைவனைத் துணைக்கு அழைத்து மன்றாடிய வண்ணம் பகைவர்களை எதிர்த்தார்கள்;
27இவ்வாறு கைகளால் போர் செய்து கொண்டும், உள்ளத்தில் கடவுளை மன்றாடிக்கொண்டும் இருந்ததால், குறைந்தது முப்பத்தையாயிரம் பேரை வீழ்த்தினார்கள்; கடவுளுடைய வெளிப்பாட்டால் பெரிதும் மகிழ்ந்தார்கள்.
28போர் முடிந்து அவர்கள் மகிழ்ச்சியோடு திரும்பிக்கொண்டிருந்தபோது நிக்கானோர் தன் முழுப் போர்க்கவசத்துடன் இறந்து கிடப்பதைக் கண்டுபிடித்தார்கள்.
29அப்போது அவர்கள் உரத்த குரல் எழுப்பி ஆரவாரம் செய்து வல்லவரான இறைவனைத் தங்கள் தாய்மொழியில் போற்றினார்கள்.
30தம் உடலாலும் உள்ளத்தாலும் எக்காலத்தும் தம் மக்களைப் பாதுகாத்து வந்தவரும் தம் நாட்டினர்பால் இளைமைமுதல் பற்றுக்கொண்டிருந்தவருமாகிய யூதா, நிக்கானோரின் தலையையும் தோளோடு வலக்கையையும் வெட்டியெடுத்து அவற்றை எருசலேமுக்குக்கொண்டு வரும்படி தம் ஆள்களுக்குக் கட்டளையிட்டார்.
31அங்குச் சேர்ந்தபோது அவர் தம் மக்களை ஒன்றுகூட்டினார்; குருக்களைப் பலிபீடத்திற்குமுன் நிறுத்தினார்; கோட்டையில் இருந்தவர்களுக்கு ஆளனுப்பினார்;
32கயவன் நிக்கானோரின் தலையையும், எல்லாம் வல்லவரின் தூய இல்லத்துக்கு எதிராக இறுமாப்போடு நீட்டிய அந்த இறைபழிப்போனின் கையையும் அவர்களுக்குக் காட்டினார்;
33கடவுள் நம்பிக்கையற்ற நிக்கானோரின் நாக்கைத் துண்டித்தார்; அதைச் சிறுசிறு துண்டுகளாக்கிப் பறவைகளுக்கு உணவாகப் போடவும், அவனுடைய மூடத்தனத்தின் விளைவை மக்கள் காணும்பொருட்டு, அவனுடைய தலையையும் கையையும் கோவிலுக்கு எதிரில் தொங்கவிடவும் கட்டளையிட்டார்.
34அவர்கள் எல்லாரும் விண்ணை நோக்கி, தம்மையே வெளிப்படுத்தியிருந்த ஆண்டவரை வாழ்த்தினார்கள்: “தம் சொந்த இடத்தைத் தூய்மை கெடாதவாறு காப்பாற்றியவர் போற்றி!” என்று முழங்கினார்கள்.
35ஆண்டவரிடமிருந்து அவர்கள் பெற்றிருந்த உதவியின் தெளிவான, வெளிப்படையான அடையாளமாக எல்லாருக்கும் விளங்கும்பொருட்டு நிக்கானோரின் தலையைக் கோட்டையில் யூதா தொங்கவிட்டார்.
36இந்நாளைக் கொண்டாட ஒருபோதும் தவறக் கூடாது என்றும், அரமேய மொழியில் அதார் என்ற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாள், அதாவது மொர்தக்காயின் நாளுக்கு முந்திய நாள் அதனைக் கொண்டாட வேண்டும் என்றும் பொது வாக்கெடுப்பு மூலம் அவர்கள் முடிவு செய்தார்கள்.

7. முடிவுரை

37இதுவே நிக்கானோரின் முடிவு. அக்காலம்முதல் எருசலேம் நகர் எபிரேயர்களுக்கு உரியதாயிற்று. இத்தோடு நானும் வரலாற்றை முடிக்கிறேன்.
38இது நன்முறையிலும் கட்டுக்கோப்புடனும் எழுதப்பட்டிருப்பின் இதுவே எனது விருப்பம். குறைபாடுகளுடனும் சிறப்புக் குன்றியும் அமைந்திருந்தால் என்னால் செய்ய முடிந்தது அவ்வளவுதான்.
39திராட்சை இரசத்தை மட்டும் அல்லது தண்ணீரை மட்டும் தனியாகக் குடிப்பது உடல்நலனுக்குக் கெடுதி தரும். மாறாக, தண்ணீர் கலந்த திராட்சை இரசம் இனிமையானது, சுவைமிக்கது. அதுபோல வரலாற்றை எழுதுவதில் கையாளப்படும் நடை படிப்போரின் செவிக்கு இன்பம் ஊட்டும். முற்றும்.

15:22 2 மக் 8:19; 2 அர 19:35; எசா 37:36; 1 மக் 7:40-41. 15:25-35 1 மக் 7:43-50. 15:36 1 மக் 7:49; காண். எஸ் (கி) 9:17-22.