மெனலாவின் இறப்பு

1நூற்று நாற்பத்தொன்பதாம் ஆண்டு* அந்தியோக்கு யூப்பாத்தோர் பெரும் படையோடு யூதேயாவை எதிர்த்து வருவதாக யூதாவுக்கும் அவருடைய ஆள்களுக்கும் செய்தி எட்டியது.
2அவனுடைய பாதுகாப்பாளனும் ஆட்சிப் பொறுப்பாளனுமான லீசியாவும் அவனோடு வந்திருந்தான். இலட்சத்துப் பத்தாயிரம் காலாள்கள், ஐயாயிரத்து முந்நூறு குதிரைவீரர்கள், இருபத்திரண்டு யானைகள், வாள் பூட்டிய முந்நூறு தேர்கள் அடங்கிய கிரேக்கப் படை ஒன்று அவர்களுக்கு* இருந்தது.
3மெனலாவும் அவர்களோடு சேர்ந்துகொண்டு அந்தியோக்குக்கு நயவஞ்சமாக ஊக்கமூட்டினான்; தன் நாட்டின் நலனை முன்னிட்டு அன்று, தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்தான் அவ்வாறு செய்தான்.
4ஆனால் மாவேந்தராம் இறைவன் அந்தக் கயவனுக்கு எதிராக அந்தியோக்கின் சீற்றத்தைத் தூண்டிவிட்டார்; எல்லாத் தீமைகளுக்கும் மெனலாவே காரணம் என்று லீசியா அந்தியோக்குக்குத் தெரிவித்தான். எனவே மெனலாவைப் பெரோயாவுக்குக் கொண்டுபோய் அந்த இடத்தின் வழக்கப்படி கொல்ல அந்தியோக்கு ஆணையிட்டான்.
5அங்கே ஐம்பது முழ உயரமுள்ள மாடம் ஒன்று இருந்தது; அது சாம்பலால் நிறைந்திருந்தது; அம்மாடத்து விளிம்பின் உட்புறத்தைச் சுற்றிலும், சாம்பலை நோக்கிச் சரிந்த ஒரு தளம் இருந்தது.
6கோவிலைத் தீட்டுப்படுத்தியவர்களை அல்லது கொடிய குற்றம் புரிந்தவர்களை அங்கிருந்து கீழே தள்ளிக் கொன்றழிப்பது வழக்கம்.
7திருச்சட்டத்தை மீறிய மெனலா இவ்வாறே இறந்தான்; அடக்கம் செய்யப்படவுமில்லை.
8தூய நெருப்பும் சாம்பலும் கொண்ட பலிபீடத்திற்கு எதிராகப் பல பாவங்களைச் செய்திருந்த அவன் சாம்பலில் உழன்று செத்தது முற்றிலும் பொருத்தமே.

மோதயினுக்கு அருகே யூதர்கள் பெற்ற வெற்றி

9மன்னன் தன் தந்தையின் காலத்தில் யூதர்கள் பட்டதைவிடக் கொடிய தீமைகளை அவர்கள்மீது சுமத்தும்படி முரட்டுச் செருக்குடன் புறப்பட்டுச் சென்றான்.
10யூதா இதைக் கேள்வியுற்றதும், இரவும் பகலும் ஆண்டவரை வேண்டுமாறு தம் மக்களுக்குக் கட்டளையிட்டார்; ஏனெனில் திருச்சட்டம், நாடு, திருக்கோவில் ஆகியவற்றை அவர்கள் இழக்கும் தறுவாயில் இருந்ததால், முன்பைவிட மிகுதியாக அவருடைய உதவி அவர்களுக்கு அப்பொழுது தேவைப்பட்டது.
11மக்கள் புத்துணர்வு பெறத் தொடங்கிய வேளையிலேயே இறைவனைப் பழித்துரைக்கும் பிற இனத்தாரின் கையில் அவர்கள் விழாதிருக்குமாறு வேண்டவும் அவர் கட்டளையிட்டார்.
12அவர்கள் எல்லாரும் அவ்வாறே செய்தார்கள்; மூன்று நாள் இடைவிடாமல் கண்ணீர் சிந்தி உண்ணாநோன்பிருந்து குப்புற விழுந்து இரக்கமுள்ள ஆண்டவரை மன்றாடினார்கள். தக்க ஏற்பாடுகளோடு இருக்குமாறு யூதா அவர்களுக்கு ஊக்கமூட்டினார்.
13மூப்பர்களோடு தனிமையில் கலந்து பேசியபின், மன்னனின் படை யூதேயாமீது படையெடுத்து எருசலேம் நகரைக் கைப்பற்றுமுன்பே, கடவுளின் துணையுடன் புறப்பட்டுச் சென்று போர்தொடுக்க முடிவுசெய்தார்.
14உலகைப் படைத்தவரிடம் முடிவை ஒப்படைத்துவிட்டுத் திருச்சட்டம், கோவில், நகர், நாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றுக்காக இறக்கும்வரை துணிவுடன் போராடத் தம் ஆள்களுக்கு யூதா அறிவுறுத்தினார்; பின் மோதயினுக்கு அருகில் பாசறை அமைத்தார்;
15‘கடவுளுக்கே வெற்றி’ என்று தம் ஆள்களைப் போர்க்குரல் எழுப்பச் சொன்னார். ஆண்மை படைத்த இளைஞர்களினின்று தேர்ந்தெடுத்த ஒரு படைப் பிரிவோடு அவர் இரவில் மன்னனின் கூடாரத்தைத் தாக்கினார்; பாசறையில் இருந்த இரண்டாயிரம் பேரைக் கொன்றார்; முதலில் சென்ற யானையை அதன் பாகனோடு குத்திக் கொன்றார்.
16இறுதியில் கலக்கமும் குழப்பமும் பாசறையை நிரப்ப, அவர்கள் வெற்றியுடன் திரும்பினார்கள்.
17ஆண்டவரின் உதவி யூதாவுக்குப் பாதுகாப்பு அளித்ததால் பொழுது புலரும் வேளையில் இதெல்லாம் நடந்தது.

யூதர்களோடு ஒப்பந்தம்

18யூதர்களுடைய துணிவை நேரில் கண்டபின் அந்தியோக்கு மன்னன் அவர்களுடைய படைத்தளங்களைக் கைப்பற்றச் சூழ்ச்சியைக் கையாண்டான்;
19ஆகவே யூதர்களுடைய வலிமைமிக்க கோட்டையாகிய பெத்சூரை எதிர்த்துச் சென்றான்; ஆனால் துரத்தியடிக்கப்பட்டான்; மீண்டும் தாக்கியபோது தோல்வி கண்டான்.
20கோட்டைக்குள் இருந்தவர்களுக்கு யூதா தேவையானவற்றை அனுப்பினார்.
21ஆனால் யூதர்களின் படையைச் சேர்ந்த உரோதொக்கு பகைவர்களுக்குப் படைத்துறை இரகசியங்களை வெளியிட்டான். அதனால் அவனைத் தேடிப் பிடித்துச் சிறையில் அடைத்தார்கள்.
22மன்னன் இரண்டாம் முறை பெத்சூரில் இருந்த மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினான்; ஒப்பந்தம் செய்துகொண்டபின் திரும்பிச் சென்றான். மீண்டும் யூதாவையும் அவருடைய ஆள்களையும் தாக்கித் தோல்வியுற்றான்.
23ஆட்சிப் பொறுப்பாளனாய் மன்னன் அந்தியோக்கியில் விட்டுவைத்திருந்த பிலிப்பு கிளர்ச்சி செய்ததாக அவனுக்குச் செய்தி கிடைத்தது. கலக்கமுற்றவனாய் யூதர்களை வரவழைத்து அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இணங்கி அவர்களுடைய உரிமைகள் அனைத்தையும் காப்பதாக ஆணையிட்டான். இத்தகைய ஒப்பந்தத்தைச் செய்தபின் பலி ஒப்புக்கொடுத்தான்; கோவிலைப் பெருமைப்படுத்தி அதற்குத் தாராளமாக நன்கொடைகள் வழங்கினான்.
24மன்னன் இன்முகத்தோடு மக்கபேயை வரவேற்றான்; பின்னர் தாலமாய் முதல் கேரார்வரையிலான பகுதிக்கு எகமோனிதை ஆளுநனாக எற்படுத்தினான்.
25அவன் தாலமாய்க்குச் சென்றான். ஆனால் யூதர்களோடு அவன் செய்திருந்த ஒப்பந்தம்பற்றி அந்நகர மக்கள் சினங்கொண்டார்கள்; அதன் விதிமுறைகளைச் செல்லாததாக்க விரும்பும் அளவுக்கு வெகுண்டார்கள்.
26அப்போது லீசியா பொது மேடையில் ஏறித் தன்னால் முடிந்தவரை ஒப்பந்தத்துக்கு ஆதரவாகப் பேசி, அவர்களை இணங்க வைத்து அமைதிப்படுத்தினான்; அவர்களுடைய நல்லெண்ணத்தைப் பெற்றவனாய் அந்தியோக்கிக்குப் புறப்பட்டான். இவ்வாறு அந்தியோக்கு மன்னனுடைய படையெடுப்பும் பின் வாங்கலும் முடிவுற்றன.

13:18-26 1 மக் 6:48-63.
13:1 கி.மு. 163. 13:2 ‘அவர்கள் ஒவ்வொவருக்கும்’ என்பது கிரேக்க பாடம்.