பெண்கள்

1உன் காதல் மனையாளைப் பார்த்துப் பொறாமைப்படாதே; உனக்கே தீங்கு விளைவிக்கும் தீய பழக்கங்களை அவளுக்குச் சொல்லிக்கொடாதே.
2ஒரு பெண்ணுக்கு நீ அடிமையாகாதே; இல்லையேல், அவள் உன்னையே அடக்கியாள நேரிடும்.
3நெறிகெட்டவளை அணுகிச் செல்லாதே; அவளது வலைக்குள் வீழ்ந்திடுவாய்.
4பாடகியுடன் உனக்குத் தொடர்பு வேண்டாம். அவளது மயக்கும் வலையில் சிக்கிக்கொள்வாய்.
5கன்னிப்பெண்ணை உற்று நோக்காதே; நீ தடுமாறி அவளால் தண்டனைக்கு ஆளாவாய்.
6விலைமாதரிடம் உன் உள்ளத்தைப் பறிகொடாதே; உன் உரிமைச் சொத்தை நீ இழக்க நேரிடும்.
7நகரின் தெருக்களில் அங்குமிங்கும் பராக்குப் பார்க்காதே; ஆள்நடமாட்டமற்ற இடங்களில் சுற்றித்திரியாதே.
8அழகான பெண்ணிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக்கொள்; பிறன் மனைவியின் அழகை உற்றுநோக்காதே. பெண்களின் அழகால் பலர் நெறி பிறழ்ந்துள்ளனர்; இதனால் காமம் தீயெனப் பற்றியெரியும்.
9அடுத்தவருடைய மனைவியுடன் அமர்ந்து விருந்துண்ணாதே; அவளுடன் மது அருந்திக் களிக்காதே; உன் மனம் அவளிடம் மயங்கிவிடும்; முடிவில் உன் வாழ்வே வீழ்ச்சியுறும்.

மற்றவர்களுடன் உறவு

10உன் பழைய நண்பர்களைக் கைவிடாதே; புதிய நண்பர்கள் அவர்களுக்கு இணையாகமாட்டார்கள்; புதிய நண்பர்கள் புதிய மதுவைப் போன்றவர்கள். நாள் ஆக ஆகத்தான் அதை நீ சுவைத்துக் களிப்பாய்.
11பாவிகளின் பெருமை கண்டு பொறாமை கொள்ளாதே; அவர்களுக்கு வரவிருக்கும் கேடு உனக்குத் தெரியாது.
12இறைப்பற்றில்லாதவர்களுக்குப் பிடித்தமானவற்றில் இன்பம் கொள்ளாதே; அவர்கள் தங்கள் வாழ்நாளிலேயே தண்டனை பெறுவார்கள் என்பதை நினைவில் இருத்து.
13கொலை செய்ய அதிகாரம் கொண்டவர்களை விட்டுத் தொலைவில் இரு; அப்பொழுது சாவுபற்றிய அச்சத்தால் நீ அலைக்கழிக்கப்படமாட்டாய்; அவர்களிடம் நீ சென்றால் தவறு ஏதும் செய்யாதே; செய்தால் உன் உயிரை அவர்கள் வாங்கிவிடுவார்கள். கண்ணிகள் நடுவே நீ நடக்கிறாய் என்றும் நகரின் கோட்டை கொத்தளங்களூடே செல்கிறாய் என்றும் அறிந்துகொள்.
14அடுத்திருப்பவரை அறிய முடிந்தவரை முயற்சி செய்; ஞானிகளைக் கலந்து ஆலோசனை செய்.
15அறிவுக்கூர்மை படைத்தவர்களோடு உரையாடு; உன் பேச்செல்லாம் உன்னத இறைவனின் திருச்சட்டம்பற்றி அமையட்டும்.
16நீதிமான்கள் உன்னுடன் விருந்தாடட்டும்; ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே உனது பெருமையாக இருக்கட்டும்.
17கைவினைஞரின் திறமையைக் கொண்டே பொருள்கள் மதிப்புப் பெறுகின்றன; மக்கள் தலைவர் தம் பேச்சைக் கொண்டே ஞானியாய் மதிக்கப்படுகிறார்.
18வாயாடியைக் கண்டு அவர்களின் நகரத்தார் அஞ்சுவர்; உளறு வாயரை ஊரார் வெறுப்பர்.

9:3 நீமொ 7:10-23. 9:5 இச 22:28-29. 9:8 2 சாமு 11:2-4; மத் 5:28. 9:10 நீமொ 27:10. 9:12 நீமொ 11:21. 9:14 தோபி 4:18.