ஆட்சியாளர்

1அறிவுடைய நடுவர் தம் மக்களுக்கு நற்பயிற்சி அளிப்பார்; அறிவுக்கூர்மை கொண்டோரின் ஆட்சி சீராய் அமையும்.
2மக்களின் நடுவர் எவ்வாறோ அவருடைய பணியாளர்கள் அவ்வாறே; நகரத் தலைவர் எவ்வழியோ, அவ்வழி நகர மக்கள்.
3நற்பயிற்சி பெறாத மன்னர் தம் மக்களை அழிப்பார்; ஆட்சியாளர்களின் அறிவுக்கூர்மையால் நகர் கட்டியெழுப்பப்படும்.
4மண்ணுலகில் அதிகாரம் ஆண்டவரின் கையில் உள்ளது; ஏற்ற தலைவரைத் தக்க நேரத்தில் அவரே எழுப்புகிறார்.
5மனிதரின் மேம்பாடு ஆண்டவரின் கையில் உள்ளது; மறைநூல் அறிஞர்களை அவர் பெருமைப்படுத்துவார்.

இறுமாப்பு

6அநீதி ஒவ்வொன்றுக்காகவும் அடுத்திருப்பவர்மீது சினம் கொள்ளாதே; இறுமாப்புள்ள செயல்கள் எதையும் செய்யாதே.
7இறுமாப்பை ஆண்டவரும் மனிதரும் வெறுப்பர்; அநீதியை இருவரும் பழிப்பர்.
8அநீதி, இறுமாப்பு, செல்வம் ஆகியவற்றால் ஆட்சி கைமாறும்.
9புழுதியும் சாம்பலுமாக மனிதர் எவ்வாறு செருக்குற முடியும்? உயிரோடு இருக்கும்போதே அவர்களது உடல் அழியத்தொடங்கும்.
10நாள்பட்ட நோய் மருத்துவரைத் திணறடிக்கிறது; இன்று மன்னர், நாளையோ பிணம்!
11மனிதர் இறந்தபின் பூச்சிகள், காட்டு விலங்குகள், புழுக்களே அவர்களது உரிமைச்சொத்து ஆகின்றன.
12ஆண்டவரிடமிருந்து விலகிச் செல்வதே மனிதருடைய இறுமாப்பின் தொடக்கம்; அவர்களின் உள்ளம் தங்களைப் படைத்தவரை விட்டு அகன்று போகின்றது.
13பாவமே ஆணவத்தின் தொடக்கம். அதில் மூழ்கிப்போனவர்கள் அருவருப்பை உண்டாக்குகின்றனர்; இதனால், ஆண்டவர் அவர்கள்மீது கேட்டறியாப் பேரிடர்களை வருவிப்பார்; அவர்களை முழுதும் அழித்தொழிப்பார்.
14ஆளுநர்களின் அரியணையினின்று ஆண்டவர் அவர்களை வீழ்த்துகிறார்; அவர்களுக்குப் பதிலாகப் பணிவுள்ளோரை அமர்த்துகிறார்.
15நாடுகளின் ஆணிவேரை ஆண்டவர் அகழ்ந்தெறிகிறார்; அவர்களுக்குப் பதிலாகத் தாழ்ந்தோரை நட்டுவைக்கிறார்.
16ஆண்டவர் பிற இனத்தாரைப் பாழாக்குகிறார்; அவர்களை அடியோடு அழிக்கிறார்.
17அவர்களுள் சிலரை அகற்றி அழித்தொழிக்கிறார்; அவர்களின் நினைவை உலகினின்று துடைத்தழிக்கிறார்.
18செருக்கு மனிதருக்கென்று படைக்கப்படவில்லை; கடுஞ் சீற்றமும் மானிடப் பிறவிக்கு உரியதல்ல.

மாண்புக்குரிய மனிதர்

19மதிப்பிற்குரிய இனம் எது? மனித இனம். மதிப்பிற்குரிய இனம் எது? ஆண்டவருக்கு அஞ்சும் இனம். மதிக்கத் தகாத இனம் எது? அதே மனித இனம். மதிக்கத் தகாத இனம் எது? கட்டளைகளை மீறும் இனம்.
20உடன் பிறந்தாருள் மூத்தவர் மதிப்பிற்குரியவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோர் அவர் முன்னிலையில் மதிப்புப்பெறுவர்.
21*[ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஏற்பின் தொடக்கம்; பிடிவாதமும் ஆணவமும் புறக்கணிப்பின் தொடக்கம்;]
22செல்வர், மாண்புமிக்கோர், வறியவர் ஆகிய எல்லாருக்கும் உண்மையான பெருமை ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே.
23அறிவுக்கூர்மை படைத்த ஏழைகளை இழிவுபடுத்தல் முறையன்று; பாவிகளைப் பெருமைப்படுத்துவதும் சரியன்று.
24பெரியார்கள், நடுவர்கள், ஆட்சியாளர்கள் ஆகியோர் பெருமை பெறுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை விட இவர்களுள் யாருமே பெரியவர் அல்லர்.
25ஞானமுள்ள அடிமைக்கு உரிமைக் குடிமக்கள் பணிபுரிவார்கள்; இது கண்டு அறிவாற்றல் நிறைந்தவர்கள் முறையிடமாட்டார்கள்.

பணிவு

26நீ உன் வேலையைச் செய்யும்போது, உன் ஞானத்தைக் காட்டிக் கொள்ளாதே; வறுமையில் வாடும்போது உன்னையே பெருமைப்படுத்திக் கொள்ளாதே.
27தற்பெருமை பாராட்டி உணவுக்கு வழிஇல்லாதோரைவிட உழைத்து வளமையுடன் வாழ்வோர் சிறந்தோர்.
28குழந்தாய், பணிவிலே நீ பெருமைகொள்; உன் தகுதிக்கு ஏற்ற உன்னையே நீ மதி.
29தங்களுக்கு எதிராகவே குற்றம் செய்வோரை நீதிமான்களென யாரே கணிப்பர்? தங்கள் வாழ்வையே மதிக்கத் தெரியாதவர்களை யாரே பெருமைப்படுத்துவர்?
30ஏழையருக்குத் தங்கள் அறிவாற்றலால் சிறப்பு; செல்வருக்குத் தங்கள் செல்வத்தால் சிறப்பு.
31வறுமையிலேயே பெருமை பெறுவோர் செல்வச் செழிப்பில் எத்துணைப் பெருமை அடைவர்! செல்வச் செழிப்பிலேயே சிறுமையுறுவோர் வறுமையில் எத்துணைச் சிறுமையுறுவர்!

10:2 நீமொ 29:12. 10:11 எசா 14:11. 10:14 1 சாமு 2:8; லூக் 1:52.
10:21 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.