பொது அறிவு

1வலியவரோடு வழக்காடாதே; அவர்கள் கையில் சிக்கிக்கொள்ள நேரிடும்.
2செல்வருடன் சண்டையிடாதே; உன்னைவிட அவர்கள் வசதிமிக்கவர்கள். பொன்னாசை பலரை அழித்திருக்கிறது; மன்னர்களின் மனத்தையும் கெடுத்திருக்கிறது.
3வாயாடிகளோடு வாதிடாதே; எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்காதே.
4பண்பற்றோரிடம் நகையாடாதே; உன் முன்னோரை அவர்கள் பழித்துரைக்கலாம்.
5பாவத்தினின்று மனந்திரும்புவோரைப் பழிக்காதே; நாம் எல்லாருமே தண்டனைக்கு உரியவர்கள் என்பதை நினைத்துக் கொள்.
6முதியோர் எவரையும் இகழாதே; நம்முள் சிலரும் முதுமை அடைந்து வருகிறோம்.
7இறந்தோரைக் கண்டு மகிழாதே; நாம் எல்லாருமே சாக வேண்டும் என்பதை நினைவில் கொள்.
8ஞானிகளுடைய அறிவுரைகளைப் புறக்கணியாதே; அவர்களுடைய பொன்மொழிகளைக் கற்றுணர். அவற்றால் நற்பயிற்சி பெறுவாய்; பெரியார்களுக்குப் பணி செய்யக் கற்றுக்கொள்வாய்.
9முதியோரின் உரைகளைப் புறக்கணியாதே; அவர்களும் தங்கள் முன்னோரிடமிருந்தே கற்றுக்கொண்டார்கள்; அவர்களிடமிருந்து நீயும் அறிவுக் கூர்மை பெறுவாய்; தகுந்த நேரத்தில் தக்க விடை கூற அறிந்துகொள்வாய்.
10பாவிகளது தீய நாட்டத்தைத் தூண்டிவிடாதே; அது உன்னைப் பொசுக்கிவிடும்.
11இறுமாப்புக் கொண்டோருடன் மோதாதே; மோதினால், உன் சொற்களைக் கொண்டே உன்மீது குற்றம் சாட்டுவர்.
12உன்னிலும் வலியோருக்குக் கடன்கொடாதே; கொடுத்தால், அதை இழந்து விட்டதாக எண்ணிக்கொள்.
13உன் உடைமைக்கு மிஞ்சிப் பிணையம் ஆகாதே; பிணையமானால், பணம் செலுத்த ஆயத்தமாய் இரு.
14நடுவருக்கே எதிராக வழக்குத் தொடுக்காதே; அவரது பெருமையை முன்னிட்டு அவர் சார்பாகவே தீர்ப்பு வழங்கப்படும்.
15தறுதலைகளோடு பயணம் செய்யாதே; அவர்கள் உனக்குச் சுமையாய் இருப்பார்கள்; தங்களது விருப்பம் போல நடப்பார்கள்; அவர்களது அறிவின்மையால் நீயும் அவர்களோடு அழிய நேரிடும்.
16முன்கோபிகளுடன் சண்டையிடாதே; அவர்களுடன் ஆளில்லாத் தனியிடத்திற்குச் செல்லாதே. கொலை செய்யவும் அவர்கள் அஞ்சுவதில்லை; உனக்கு உதவி இல்லாத இடத்தில் உன்னைத் தாக்கி வீழ்த்துவார்கள்.
17அறிவிலிகளோடு கலந்தாராயாதே; அவர்களால் இரகசியங்களைக் காப்பாற்ற முடியாது.
18மறைக்க வேண்டியவற்றை அன்னியர் முன் செய்யாதே; அவர்கள் எதை வெளியிடுவார்கள் என உனக்குத் தெரியாது.
19திறந்த உள்ளத்துடன் எல்லாரிடமும் பேசாதே; அவர்கள் உனக்கு நன்றி உள்ளவர்களாய் இருக்கமாட்டார்கள்.

8:6 லேவி 19:32. 8:9 கொலோ 4:6.