மூதாதையர் புகழ்ச்சி

— வரலாற்றில் —

1மேன்மை பொருந்திய மனிதரையும்

நம் மூதாதையரையும் அவர்களது

தலைமுறை வரிசைப்படி புகழ்வோம்.

2தொடக்கத்திலிருந்தே ஆண்டவர்

மிகுந்த மாட்சியையும்

மேன்மையையும் படைத்துள்ளார்.*

3அவர்கள் தங்களுடைய நாடுகளில்

ஆட்சி செலுத்தினார்கள்;

தங்களது வலிமையால்

நற்பெயர் பெற்றார்கள்;

தங்களது அறிவுக்கூர்மையால்

அறிவுரை வழங்கினார்கள்;

இறைவாக்குகளை எடுத்துரைத்தார்கள்.

4தங்கள் அறிவுரையாலும் சட்டம்

பற்றிய அறிவுக் கூர்மையாலும்

மக்களை வழிநடத்தினார்கள்;

நற்பயிற்சியின் சொற்களில்

ஞானிகளாய் இருந்தார்கள்.

5இன்னிசை அமைத்தார்கள்;

பாக்கள் புனைந்தார்கள்.

6மிகுந்த செல்வமும்

ஆற்றலும் கொண்டிருந்தார்கள்;

தங்கள் இல்லங்களில்

அமைதியுடன் வாழ்ந்தார்கள்.

7அவர்கள் அனைவரும் தங்கள்

வழிமரபில் மாட்சி பெற்றார்கள்;

தங்கள் வாழ்நாளில்

பெருமை அடைந்தார்கள்.

8அவர்களுள் சிலர் புகழ்

விளங்கும்படி தங்கள்

பெயரை விட்டுச்சென்றார்கள்.

9நினைவுகூரப்படாத சிலரும் உண்டு;

வாழ்ந்திராதவர்கள்போன்று

அவர்கள் அழிந்தார்கள்;

பிறவாதவர்கள்போல் ஆனார்கள்.

அவர்களுக்குப்பின் அவர்கள்

பிள்ளைகளும் அவ்வாறே ஆனார்கள்,

10ஆனால் அவர்களும்

இரக்கமுள்ள மனிதர்களே.

அவர்களுடைய நேர்மையான

செயல்கள் மறக்கப்படுவதில்லை.

11தங்களது வழிமரபில்

அவர்கள் நிலைத்திருக்கிறார்கள்.

அவர்களுடைய உரிமைச்சொத்து

அவர்களின் வழித்தோன்றல்களுக்கும்

கிடைக்கும்.

12அவர்களின் வழிமரபினர்

உடன்படிக்கையின்படி

நடக்கின்றனர்; அவர்கள் பொருட்டு

அவர்களின் பிள்ளைகளும்

அவ்வாறே நடப்பார்கள்.

13அவர்களின் வழிமரபு

என்றும் நிலைத்தோங்கும்;

அவர்களின் மாட்சி அழிக்கப்படாது.

14அவர்களுடைய உடல்கள்

அமைதியாய் அடக்கம்

செய்யப்பட்டன; அவர்களுடைய

பெயர் முறை தலைமுறை தலைமுறைக்கும்

வாழ்ந்தோங்கும்.

15மக்கள் அவர்களுடைய

ஞானத்தை எடுத்துரைப்பார்கள்.

அவர்களது புகழைச் சபையார்

பறைசாற்றுவர்.

ஏனோக்கு

16ஏனோக்கு ஆண்டவருக்கு

உகந்தவரானார்; அவரால்

எடுத்துக் கொள்ளப்பட்டார்;

எல்லாத் தலைமுறைகளுக்கும்

மனமாற்றத்தின் எடுத்துக்காட்டாக

விளங்குகிறார்.

நோவா

17நோவா நிறைவுள்ளவராகவும்

நீதிமானாகவும் திகழ்ந்தார்;

சினத்தின் காலத்தில்

பரிகாரம் செய்தார்;

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது,

அவர்பொருட்டுச் சிலர்

உலகில் விடப்பட்டார்கள்.

18எவ்வுயிரும் வெள்ளப்பெருக்கால்

இனி அழியக்கூடாது என்பதற்கு

என்றுமுள உடன்படிக்கைகள்

அவருடன் செய்யப்பட்டன.

ஆபிரகாம்

19ஆபிரகாம் பல மக்களினங்களுக்குக்

குலமுதல்வராய்த் திகழ்ந்தார்;

மாட்சியில் அவருக்கு இணையானவர்

எவரையும் கண்டதில்லை.

20உன்னத இறைவனின்

திருச்சட்டத்தை அவர்

கடைப்பிடித்தார்; அவரோடு

உடன்படிக்கை செய்துகொண்டார்;

அவ்வுடன்படிக்கையைத் தம்

உடலில் நிலைக்கச் செய்தார்;

சோதிக்கப்பட்டபோது பற்றுறுதி

கொண்டவராக விளங்கினார்.

21ஆதலால் அவருடைய

வழிமரபு வழியாக

மக்களினங்களுக்கு ஆசி

வழங்குவதாகவும், நிலத்தின்

புழுதியைப்போல் அவருடைய

வழிமரபைப் பெருக்குவதாகவும்,

விண்மீன்களைப் போல்

அவர்களை உயர்த்துவதாகவும்,

ஒரு கடலிலிருந்து மற்றொரு

கடல்வரைக்கும், யூப்பிரத்தீசு

ஆற்றிலிருந்து நிலத்தின்

கடையெல்லைவரைக்கும் உள்ள

நிலப்பரப்பை அவர்களுக்கு

உரிமைச்சொத்தாக அளிப்பதாகவும்

கடவுள் அவருக்கு ஆணையிட்டு

உறுதி கூறினார்.

ஈசாக்கு, யாக்கோபு

22ஈசாக்கிடமும், அவருடைய தந்தை

ஆபிரகாமை முன்னிட்டு

அந்த உறுதிமொழியைக்

கடவுள் புதுப்பித்தார்.

23எல்லா மனிதருடைய ஆசியும்

உடன்படிக்கையும் யாக்கோபின்

தலைமீது தங்கச் செய்தார்;

தம் ஆசிகளால் அவரை

உறுதிப்படுத்தினார்; நாட்டை அவருக்கு

உரிமைச் சொத்தாக வழங்கினார்;

அவருடைய பங்குகளைப் பிரித்தார்;

பன்னிரு குலங்களுக்கிடையே

அவற்றைப் பகிர்ந்து கொடுத்தார்.


44:16 தொநூ 5:24; சாஞா 4:10; எபி 11:5. 44:17-18 தொநூ 6:9-9:17; 1 பேது 3:20. 44:19-21 தொநூ 15:1-17:27; 22:1-18. 44:22-23 தொநூ 26:3-5; 28:13-15; 35:10-12.
44:2 ‘மிகுந்த மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுத்தார்’ என்றும் மொழிபெயர்க்கலாம்.