1யாக்கோபின் வழிமரபிலிருந்து
இறைப்பற்றுள்ள ஒரு மனிதரைக்
கடவுள் தோற்றுவித்தார்;
அம்மனிதர் எல்லா
உயிரினங்களின் பார்வையிலும்
தயவு பெற்றார்;
கடவுளுக்கும் மனிதருக்கும்
அன்புக்குரியவரானார்.
அவரது நினைவு போற்றுதற்குரியது.
அவரே மோசே!
2கடவுள் தூய தூதர்களுக்கு
இணையான மாட்சியை அவருக்கு
வழங்கினார்; பகைவர்கள்
அஞ்சும்படி அவரை
மேன்மைப்படுத்தினார்;
3அவருடைய சொற்களால் பிறர்
செய்த வியத்தகு செயல்களை
முடிவுக்குக் கொணர்ந்தார்;
மன்னர்களின் முன்னிலையில்
அவரை மாட்சிமைப்படுத்தினார்;
தம் மக்களுக்காக அவரிடம்
கட்டளைகளைக் கொடுத்தார்;
தம் மாட்சியை அவருக்குக் காட்டினார்.
4அவருடைய பற்றுறுதியையும்
கனிவையும் முன்னிட்டு
அவரைத் திருநிலைப்படுத்தினார்;
மனிதர் அனைவரிடமிருந்தும்
அவரைத் தெரிந்தெடுத்தார்.
5ஆண்டவர் தம் குரலை மோசே
கேட்கச் செய்தார்; கார்முகில்
நடுவே அவரை நடத்திச் சென்றார்;
நேரடியாக அவரிடம்
கட்டளைகளைக் கொடுத்தார்;
வாழ்வும் அறிவாற்றலும்
தரும் திருச்சட்டத்தை அளித்தார்;
இதனால் யாக்கோபுக்கு
உடன்படிக்கை பற்றியும்
இஸ்ரயேலுக்குக் கடவுளின்
தீர்ப்புகள் பற்றியும் மோசே
கற்றுக்கொடுக்கும்படி செய்தார்.
6அடுத்து, ஆரோனைக்
கடவுள் உயர்த்தினார்; அவர்
மோசேயைப் போலவே தூயவர்;
அவருடைய சகோதரர்; லேவியின் குலத்தைச் சேர்ந்தவர்.
7அவருடன் என்றுமுள
உடன்படிக்கை செய்தார்;
மக்களுக்குப் பணி செய்யக்
குருத்துவத்தை அவருக்கு
வழங்கினார்;
எழில்மிகு அணிகலன்களால்
அவரை அழகுபடுத்தினார்;
மாட்சியின் ஆடையை
அவருக்கு அணிவித்தார்.
8மேன்மையின் நிறைவால்
அவரை உடுத்தினார்;
குறுங்கால், சட்டை, நீண்ட ஆடை,
‘ஏபோது’ ஆகிய அதிகாரத்தின்
அடையாளங்களால் அவருக்கு
வலிமையூட்டினார்.
9அவருடைய ஆடையின்
விளிம்பைச்சுற்றி அணிகலன்களும்
பொன்மணிகளும்
பொருத்தப்பட்டிருந்தன.
இதனால் அவர் நடந்து செல்கையில்
அவை ஒலி எழுப்பும்;
தம் மக்களின் பிள்ளைகளுக்கு
நினைவூட்டும்படி கோவிலில்
அவற்றின் ஒலி கேட்கும்.
10பூத்தையல் வேலைப்பாடு உடைய,
பொன், நீலம், கருஞ் சிவப்பு
நிறங்கள் கொண்ட திருவுடையை
அவருக்குக் கொடுத்தார்.
உண்மையை அறிவிக்கக்கூடிய
மார்புப்பட்டை* அதில் இருந்தது.
கைவினைஞரின் வேலைப்
பாடாகிய சிவப்பு ஆடையால்
அவரைப் போர்த்தினார்.
11அந்த ஆடையில் பொற்கொல்லரின்
வேலைப்பாடாகிய
பொன் தகட்டுப் பின்னணியில்
விலையுயர்ந்த கற்கள் முத்திரை
போலப் பதிக்கப்பட்டிருந்தன.
இஸ்ரயேலின் குலங்களினுடைய
எண்ணிக்கையின் நினைவாக
எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.
12தலைப்பாகை மீது
பொன்முடி இருந்தது;
தூய்மையின் முத்திரை
அதில் பொறிக்கப்பட்டிருந்தது;
அது பெருமைக்குரிய மதிப்புடையது;
சிறந்த வேலைப்பாடு கொண்டது;
கண்களுக்கு இனிமையானது,
பெரிதும் அணி செய்யப்பட்டது.
13இவற்றைப்போன்று அழகானவை
அவருக்குமுன் இருந்ததில்லை;
இவற்றை அன்னியர் எவரும்
என்றும் அணிந்ததில்லை;
அவருடைய மைந்தரும்
. வழிமரபினரும் மட்டுமே
என்றும் அணிந்திருந்தார்கள்.
14அவர் செலுத்திய பலிப்பொருள்கள்
ஒவ்வொரு நாளும்
இருமுறை தொடர்ந்து
முழுமையாய் எரிக்கப்பட்டன.
15மோசே ஆரோனைத்
திருநிலைப்படுத்தினார்;
தூய எண்ணெயால் அவரைத்
திருப்பொழிவு செய்தார்;
அவரோடும் அவருடைய
வழிமரபினரோடும் வானம்
நீடித்திருக்கும்வரை நிலைத்திருக்கும்
உடன்படிக்கையாக அதை
ஏற்படுத்தினார்; ஆண்டவருக்குப்
பணி செய்யவும் குருவாய்
ஊழியம் புரியவும், அவரது பெயரால்
அவருடைய மக்களுக்கு ஆசி
வழங்கவும் இவ்வாறு செய்தார்.
16ஆண்டவருக்குப் பலி
செலுத்தவும் தூபத்தையும்
நறுமணப்பலியையும் நினைவுப்
பலியாய் ஒப்புக்கொடுக்கவும்
அவருடைய மக்களுக்காகப்
பாவக்கழுவாய் செய்யவும்
வாழ்வோர் அனைவரிடமிருந்தும்
அவரைத் தெரிந்தெடுத்தார்.
17யாக்கோபுக்குச் சட்டங்களைக்
கற்றுக் கொடுக்கவும்
இஸ்ரயேலுக்குத் திருச்சட்டம்
பற்றித் தெளிவுபடுத்தவும்
ஆண்டவருடைய கட்டளைகள் மீதும்
உடன்படிக்கையின் தீர்ப்புகள் மீதும்
அவருக்கு அதிகாரம் அளித்தார்.
18அன்னியர்கள் அவருக்கு எதிராய்ச்
சூழ்ச்சி செய்தார்கள்;
பாலைநிலத்தில் அவர்மேல்
பொறாமைப்பட்டார்கள்;
தாத்தானும் அபிரோனும்
அவர்களோடு இருந்தவர்களும்
கோராகுவின் கூட்டாளிகளும்
தங்கள் சினத்திலும் சீற்றத்திலும்
இவ்வாறு செய்தார்கள்.
19ஆண்டவர் அதைப் பார்த்தார்;
அதை அவர் விரும்பவில்லை.
அவருடைய கடுஞ்சீற்றத்தால்
அவர்கள் அழிந்தார்கள்.
எரியும் நெருப்பில் சுட்டெரிப்
பதற்காக அவர்களுக்கு
எதிராய் அரியன செய்தார்.
20அவர் ஆரோனின் மாட்சியை
மிகுதிப்படுத்தினார்;
அவருக்கு உரிமைச்சொத்தை
அளித்தார்;
முதற்கனிகளில் முதலானவற்றை
அவருக்கென ஒதுக்கிவைத்தார்;
காணிக்கை அப்பங்களைக்
கொண்டு அவர்களுக்கு
நிறைவாய் உணவு அளித்தார்.
21தமக்குக் கொடுக்கப்பட்ட
பலிப் பொருள்களையே
ஆரோனும் அவருடைய
வழிமரபினரும் உண்ணக்
கொடுத்தார்.
22தம் மக்களது நாட்டில்
அவருக்கு உரிமைச்சொத்து
கொடுக்கப்படவில்லை; அம்மக்கள்
நடுவே அவருக்குப் பங்கு
அளிக்கப்படவில்லை; ஆண்டவரே
அவருடைய பங்கும் உரிமைச்
சொத்தும் ஆவார்.
23எலயாசர் மகன் பினகாசு
மாட்சியின் மூன்றாம் நிலையில்
இருக்கிறார்; ஆண்டவருக்கு
அஞ்சி நடப்பதில்
பேரார்வமிக்கவராய் இருந்தார்;
ஆண்டவரைவிட்டு மக்கள்
விலகிச் சென்றபோது இவர்
நன்மனத்தோடு அவரை
உறுதியாய்ப் பற்றி நின்றார்;
இஸ்ரயேலுக்காகப் பாவக்
கழுவாய் செய்தார்.
24ஆதலால் ஆண்டவர் அவருடன்
அமைதி உடன்படிக்கை
செய்துகொண்டார்;
திருவிடத்துக்கும் தம்
மக்களுக்கும்* தலைவராக்கினார்;
அவருக்கும் அவருடைய
வழிமரபினருக்கும் குருத்துவத்தின்
மேன்மை என்றும்
நிலைக்கும்படி செய்தார்.
25மகனிலிருந்து மகனுக்கு
மட்டுமே அரசுரிமை செல்ல,
யூதாவின் குலத்தில் தோன்றிய
ஈசாயின் மகன் தாவீதோடு
ஆண்டவர்
உடன்படிக்கை செய்துகொண்டார்.
அதுபோல் ஆரோனின்
குருத்துவ உரிமை அவருடைய
வழிமரபினரையே சேரும்.
26ஆண்டவர் தம் மக்களை
நீதியோடு தீர்ப்பிடுவதற்காக
ஞானத்தை உங்கள் உள்ளங்களில்
பொழிவாராக! இவ்வாறு
அவர்களுடைய நலன்கள்
அழியாதிருப்பனவாக;
அவர்களுடைய மாட்சி
எல்லாத் தலைமுறைகளுக்கும்
நீடிப்பதாக.