கதிரவன்

1உயர் வானத்தின் சிறப்பு தெளிந்த வான்வெளியே; வானகத்தின் தோற்றம் அதன் மாட்சியின் காட்சியே.
2கதிரவன் தோன்றி எழும்போதே அறிவிக்கிறது. உன்னத இறைவனின் கைவேலையாகிய அது எத்துணை வியப்புக்கு உரியது!
3அது நண்பகலில் நிலத்தைச் சுட்டெரிக்கிறது; அதனுடைய கடும் வெப்பத்தைத் தாங்கக் கூடியவர் எவர்?
4சூளையைக் கவனிப்போர் கடும் வெப்பத்தில் வேலை செய்கின்றனர். கதிரவன் அதைவிட மும்மடங்காய் மலையை எரிக்கிறது; நெருப்புக் கதிர்களை வீசுகிறது; தன்னுடைய ஒளிக் கதிர்களால் கண்களைக் குருடாக்குகிறது.
5அதனைப் படைத்தவர் மாபெரும் ஆண்டவர்! அவருடைய கட்டளையால் அது தன் வழியே விரைந்து செல்கிறது.

நிலவு

6நிலவு எப்போதும் குறித்த காலத்தில் நேரத்தையும் காலத்தின் குறியையும் காட்டுகிறது.
7நிலவைக்கொண்டே திருநாள்கள் குறிக்கப்படுகின்றன. அது வளர்ந்து முழுமை அடைந்தபின் தேய்கிறது.
8அதனைக்கொண்டே மாதங்கள் பெயரிடப்படுகின்றன. அது வளர்மதியாக மாறும் வகை எத்துணை வியப்புக்கு உரியது! வான்படைகளுக்கு அடையாள ஒளியாக நின்று வான்வெளியில் அது மிளிர்கின்றது.

விண்மீன்கள்

9விண்மீன்களின் மாட்சியே வானத்துக்கு அழகு; உயர் வானத்தில் இருக்கும் ஆண்டவருடைய ஒளி மிகுந்த அணிகலன்.
10தூய இறைவனின் கட்டளைப்படி அவை ஒழுங்காக இயங்குகின்றன; தங்களது விழிப்பில் அவை அயர்வதில்லை.

வானவில்

11வானவில்லைப் பார்; அதை உண்டாக்கினவரைப் போற்று; அது ஒளிரும்போது எழில் மிகந்ததாய் இருக்கின்றது.
12தனது மாட்சி மிகுந்த வில்லால் வானத்தை அது சுற்றி வளைக்கிறது; உன்னத இறைவனின் கைகளே அதை விரித்துவைத்தன.

இயற்கையின் விந்தைகள்

13ஆண்டவருடைய கட்டளைப்படி பனிபெய்கிறது; அவர்தம் முடிவுகளைச் செயல்படுத்த மின்னல்கள் விரைகின்றன.
14ஆகையால் கருவூலங்கள் திறக்கப்படுகின்றன; பறவைகளைப்போல முகில்கள் பறக்கின்றன.
15அவர் தமது வலிமையால் முகில்களுக்கு வலிமையூட்டுகிறார்; ஆலங்கட்டிகள் உடைந்து சிதறுகின்றன.
16அவர் தோன்றும்போது மலைகள் நடுங்குகின்றன; அவருடைய திருவுளத்தால் தென்றல் வீசுகிறது.
17அவரது இடியின் ஓசை நிலத்தைத் துன்பத்தால் நெளியச் செய்கிறது; வடக்கிலிருந்து வரும் புயற்காற்றும் சூறாவளியும் இவ்வாறே செய்கின்றன.
18கீழே இறங்கும் பறவையைப்போல பனியை அவர் தூவிவிடுகிறார். உட்கார வரும் வெட்டுக்கிளியைப் போல் அது இறங்குகிறது; அதன் வெண்மையின் அழகைக் கண்டு கண் வியப்படைகிறது; அது பொழிவதைக் கண்டு உள்ளம் திகைக்கிறது.
19அவர் உப்பைப்போல உறைபனியை நிலத்தின்மீது தெளிக்கிறார்; அது உறைகின்றபோது கூர்மையான முட்களைப்போல் ஆகின்றது.
20வடக்கிலிருந்து வாடைக் காற்று வீசுகின்றது; தண்ணீர்மேல் பனி உறைகின்றது; அது ஒவ்வொரு நீர்நிலைமீதும் தங்குகின்றது; தண்ணீரும் அதை மார்புக்கவசமாய் அணிந்துகொள்கின்றது.
21காற்று மலைகளை விழுங்குகிறது; பாலைநிலத்தைச் சுட்டெரிக்கிறது; தீயைப்போலப் பசுந்தளிர்களை எரிக்கிறது.
22ஆனால் கார்முகில் விரைவில் எல்லாவற்றையும் நலமுறச் செய்கிறது; பனித் திவலைகள் விழும்போது வெப்பம் தணிகின்றது.
23தமது திட்டத்தால் அவர் ஆழ்கடலை அமைதிப்படுத்தினார்; அதில் தீவுகளை அமைத்தார்.
24கடலில் பயணம் செய்வோர் அதன் பேரிடர்களைக் கூறுகின்றனர்; நாம் காதால் கேட்டு வியப்படைகிறோம்.
25அங்கே விந்தையான, வியப்புக்குரிய படைப்புகள் உள்ளன; எல்லாவகை உயிரினங்களும் கடலில் வாழும் மிகப் பெரிய விலங்குகளும் உள்ளன.
26அவரால் அவருடைய தூதர் வெற்றி காண்பர்; அவருடைய சொல் அனைத்தையும் ஒருங்கிணைக்கும்.
27நான் இன்னும் பல சொல்லலாம்; ஆயினும் முழுமையாய்ச் சொல்ல முடியாது; சுருங்கக் கூறின், அனைத்தும் அவரே!
28ஆண்டவரை மாட்சிமைப்படுத்த எங்கிருந்து வலிமை பெறுவோம்? தம் படைப்புகள் எல்லாவற்றையும்விட அவர் பெரியவர்.
29அவர் அஞ்சுவதற்கு உரியவர்; மிகப் பெரியவர்; அவருடைய வலிமை வியப்புக்குரியது.
30ஆண்டவரை மாட்சிப்படுத்துங்கள்; உங்களால் முடியும் அளவிற்கு அவரை உயர்த்துங்கள். ஏனெனில் அவர் அதனினும் மேலானவர். உங்கள் வலிமையெல்லாம் கூட்டி அவரை உயர்த்துங்கள்; சோர்ந்துவிடாதீர்கள். ஏனெனில் போதிய அளவு அவரைப் புகழ முடியாது.
31ஆண்டவரைக் கண்டவர் யார்? அவரைப்பற்றி எடுத்துரைப்பவர் யார்? அவர் உள்ளவாறே அவரைப் புகழ்ந்தேத்துபவர் யார்?
32இவற்றினும் பெரியன பல மறைந்திருக்கின்றன; அவருடைய படைப்புகளில் சிலவற்றையே நாம் கண்டுள்ளோம்.
33ஆண்டவரே அனைத்தையும் படைத்துள்ளார்; இறைப்பற்றுள்ளோருக்கு ஞானத்தை அருளியுள்ளார்.

43:1-5 திபா 19:1-6. 43:13 யோபு 37:6; திபா 147:16. 43:14 இச 28:12. 43:25 திபா 104:25-26.