1பின்வருபவைபற்றி நாணம் கொள்ளாதே; மனிதருக்கு மட்டுமீறிய மதிப்பு அளிப்பதால் பாவம் செய்யாதே.
2உன்னத இறைவனின் திருச்சட்டம் பற்றியும், உடன்படிக்கை பற்றியும், இறைப்பற்றில்லாதோரை விடுவிக்கும் தீர்ப்புப் பற்றியும்,
3நண்பர்களோடும் வழிப்போக்கரோடும் உரையாடுவது பற்றியும், தோழர்களின் உரிமைச் சொத்திலிருந்து கொடுப்பது பற்றியும்,
4சரியான துலாக்கோலையும் எடைகளையும் பயன்படுத்துவது பற்றியும், மிகுதியாகவோ குறைவாகவோ பொருள் ஈட்டுவது பற்றியும்
5வாணிபத்தில் வரும் ஆதாயம் பற்றியும், பிள்ளைகளை நன்கு பயிற்றுவது பற்றியும், கெட்ட அடிமையைக் குருதி சிந்த அடிப்பது பற்றியும் நாணம் கொள்ளாதே.
6கெட்ட மனைவியைக் காவலில் வைத்திருப்பது நல்லது; பலர் இருக்கும் இடத்தில் பொருள்களைப் பூட்டிவை.
7எதைக் கொடுத்தாலும் கணக்கிட்டு நிறுத்துக்கொடு; கொடுக்கல் வாங்கல் எல்லாவற்றையும் குறித்துவை.
8அறிவிலிகளையும் மூடர்களையும் கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்டு குற்றம் புரியும் முதியோரையும் கண்டித்துத் திருத்துவதுபற்றி நாணம்கொள்ளாதே; அப்போது நீ உண்மையிலேயே நற்பயிற்சி பெற்றவனாய் இருப்பாய்; வாழ்வோர் அனைவருக்கும் ஏற்புடையவன் ஆவாய்.

மகளைப்பற்றிய தந்தையின் கவலை

9தந்தை தம் மகளுக்கும் தெரியாமல் அவளைப்பற்றி விழிப்பாய் இருக்கிறார்; அவளைப்பற்றிய கவலை அவரது உறக்கத்தை விரட்டியடிக்கிறது. இளமையிலே அவளுக்குத் திருமணம் ஆகாமல் போய்விடுமோ எனவும் திருமணமானபின் அவள் வெறுக்கப்படுவாளோ எனவும் அவர் கவலைப்படுகிறார்.
10கன்னிப்பருவத்திலேயே அவள் கெட்டுப்போகாதபடியும் தம் வீட்டிலேயே கருவுற்றவள் ஆகாதபடியும் கணவருடன் இருக்கும்போது நெறி தவறாதபடியும் திருமணமானபின் மலடி ஆகாதபடியும் அவர் கவலையாய் இருக்கிறார்.
11அடக்கமற்ற மகள்மேல் கண்ணும் கருத்துமாய் இரு; இல்லையேல், பகைவரின் நகைப்புக்கும் நகரின் ஏச்சுக்கும் மக்களின் பேச்சுக்கும் அவள் உன்னை ஆளாக்குவாள்; நகர் மன்றத்தில் உன்னை வெட்கத்திற்கு உட்படுத்துவாள்.

பெண்கள்

12அழகுக்காக எந்த மனிதரையும் நோக்காதே; பெண்களின் நடுவில் அமராதே.
13ஆடையிலிருந்து அந்துப்பூச்சி தோன்றுகிறது; பெண்ணிடமிருந்தே பெண்ணின் ஒழுக்கக்கேடு வருகிறது.
14பெண்ணே வெட்கத்தையும் இழிவையும் கொணர்கிறாள். இத்தகைய பெண் செய்யும் நன்மையை விட ஆண் செய்யும் தீமை பரவாயில்லை.

இயற்கையில் கடவுளின் மாட்சி

15இப்போது ஆண்டவருடைய செயல்களை நினைவுபடுத்துவேன்; நான் கண்டவற்றை எடுத்துரைப்பேன். ஆண்டவருடைய சொல்லால் அவருடைய செயல்கள் உண்டாகின்றன.
16ஒளிரும் கதிரவன் அனைத்தையும் காண்கின்றான். ஆண்டவருடைய செயல் அவருடைய மாட்சியால் நிறைந்துள்ளது.
17அனைத்தையும் தமது மாட்சியில் நிலைநிறுத்திய எல்லாம் வல்ல ஆண்டவர், தம் வியத்தகு செயல்கள் எல்லாவற்றையும் எடுத்துரைக்கும்படி தம் தூயவர்களுக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை.
18படுகுழியையும் மனித உள்ளத்தையும் அவர் ஊடுருவி நோக்குகிறார்; மனிதர்களுடைய சூழ்ச்சி நிறை எண்ணங்களை ஆராய்கிறார். அறியக்கூடியவற்றையெல்லாம் உன்னத இறைவன் அறிவார்; காலத்தின் குறிகளை உற்றுநோக்குகிறார்.
19நிகழ்ந்தவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் அவர் தெரியப்படுத்துகிறார்; மறைந்திருப்பவற்றின் தடயத்தை வெளிப்படுத்துகிறார்.
20எவ்வகை எண்ணமும் அவருக்குத் தெரியாமல் இருப்பதில்லை; ஒரு சொல்கூட அவருக்கு மறைந்திருப்பதில்லை.
21அவர் தமது ஞானத்தின் அரும்பெரும் செயல்களை ஒழுங்குபடுத்தியுள்ளார்; அவரே என்றென்றும் இருக்கின்றவர். யாதொன்றும் கூட்டப்படுவதில்லை, குறைக்கப்படுவதுமில்லை; எவருடைய அறிவுரையும் அவருக்குத் தேவையில்லை.
22அவருடைய செயல்கள் அனைத்தும் எத்துணை விரும்பத்தக்கவை! பார்ப்பதற்கு எத்துணைப் பளபளப்பானவை!
23இவையெல்லாம் உயிரோடு இருக்கின்றன; எல்லாத் தேவைகளுக்காகவும் என்றும் நிலைத்திருக்கின்றன; எல்லாம் அடிபணிகின்றன.
24எல்லாம் இரட்டையாய் உள்ளன; ஒன்று மற்றொன்றுக்கு எதிராய் இருக்கிறது. யாதொன்றையும் அவர் குறைபடச் செய்யவில்லை.
25ஒன்று மற்றொன்றின் நன்மையை நிறைவுசெய்கிறது. அவருடைய மாட்சியை நிறைவாகக் காண்பவர் எவர்?

42:9-11 சீஞா 7:24-25; 26:10-12. 42:19 எசா 46:10. 42:20 திபா 139:4. 42:21 எசா 40:13.