இறப்பு

1ஓ, சாவே! தம் உடைமைகளோடு

அமைதியாய் வாழ்வோருக்கும்

எவ்வகைக் கவலையுமின்றி

எல்லாவற்றிலும்

வளமை அடைவோருக்கும்

நல்ல உணவைச் சுவைத்து மகிழ

இன்னும் வலிமையுள்ளோருக்கும்

உன் நினைவு எத்துணைக்

கசப்பாய் உள்ளது!

2ஆனால், ஓ, சாவே!

வறுமையுற்றோருக்கும்

வலிமை குன்றியோருக்கும்

முதியோருக்கும்

பொறுமை இழந்தோருக்கும்

உன் முடிவு வரவேற்கத்தக்கது!

3இறப்பின் தீர்ப்புக்கு அஞ்சாதே!

உனக்குமுன் இருந்தவர்களையும்

உனக்குப்பின் வரப்போகிறவர்களையும்

எண்ணிப்பார்.

4இந்தத் தீர்ப்பை எல்லா

மனிதருக்கும் ஆண்டவர்

விதித்துள்ளார். பின்பு ஏன்

உன்னத இறைவனின்

விருப்பத்தை ஏற்க மறுக்கிறாய்?

நீ வாழ்ந்தது பத்து ஆண்டா,

நூறு ஆண்டா, ஆயிரம் ஆண்டா

என்பதுபற்றிப் பாதாளத்தில்

கேள்வி எழாது.

பாவிகளின் வழிமரபினர்

5பாவிகளின் மக்கள்

அருவருப்புக்குரிய மக்களாவர்;

இறைப்பற்றிலாதோரின்

பதுங்கிடத்தில் அவர்கள் கூடுவர்.

6பாவிகளுடைய மக்களின்

உரிமைச்சொத்து அழிந்துபோகும்;

அவர்களுடைய வழிமரபில்

இகழ்ச்சியே நிலைக்கும்.

7இறைப்பற்றில்லாத தந்தையைப்

பற்றி மக்கள் முறையிடுவார்கள்;

அவர்கள் அவரால் இகழ்ச்சி

அடைவார்கள்.

8இறைப்பற்றில்லாதவர்களே,

ஐயோ, உங்களுக்குக் கேடு வரும்!

உன்னத இறைவனின்

திருச்சட்டத்தைக் கைவிட்டவர்களே,

ஐயோ, உங்களுக்குக் கேடு வரும்!

9நீங்கள் பிறந்தபோது

சாபத்திற்குப் பிறந்தீர்கள்;

நீங்கள் சாகும்போது சாபமே

உங்கள் பங்காகும்.

10மண்ணிலிருந்து வந்ததெல்லாம்

மண்ணுக்கே திரும்பும்;

இறைப்பற்றில்லாதோறும்

சாபத்திலிருந்து

அழிவுக்குச் செல்வர்.

11மனிதர் தங்களது

உடலைப் பற்றியே புலம்புவர்.

பாவிகளுடைய கெட்ட பெயர்

துடைக்கப்படும்.

நற்பெயர்

12உன் பெயரைப்பற்றி

அக்கறை கொள்; ஆயிரம்

பெரிய பொற் புதையல்களை

விட உனக்கு அது

நிலைத்து நிற்கும்.

13நல்வாழ்க்கை சில நாள்களே

நீடிக்கும்;

நற்பெயர் என்றென்றும்

நிலைக்கும்.

வெட்கம்

14குழந்தைகளே, நற்பயிற்சியை

அமைதியாய்க் கடைப்பிடியுங்கள்.

மறைக்கப்பட்ட ஞானம்,

காணப்படாத புதையல்

இவை இரண்டாலும் என்ன பயன்?

15தம் ஞானத்தை மறைக்கும்

மனிதரைவிடத் தம் மடமையை

மறைக்கும் மானிடர் சிறந்தோர்.

16ஆகவே எந்தெந்தச் சூழலில்

நாணம் காக்கவேண்டும் என

உங்களுக்குக் கூறுவேன்;

சில வேளைகளில்

நாணம் காப்பது நல்லதல்ல;

எல்லாவகை நாணத்தையும்

ஏற்றுக்கொள்ளலாகாது.

17உங்கள் தாய் தந்தையர்

முன்னிலையில் கெட்ட

நடத்தைபற்றி நாணம்

கொள்ளுங்கள்; ஆட்சியாளர்

முன்னும் வலியோர் முன்னும்

பொய்யைப் பற்றி வெட்கப்படுங்கள்.

18நடுவர்முன்னும் ஆளுநர்

முன்னும் குற்றத்தைப் பற்றியும்,

தொழுகைக் கூடத்திலும்

மக்கள் முன்னும் சட்ட மீறல்பற்றியும்,

19தோழர் முன்னும் நண்பர்முன்னும்

அநீதிபற்றியும், நீங்கள்

வாழ்கின்ற இடத்தில்

திருட்டைப்பற்றியும்,

20ஆணையையும்

உடன்படிக்கையையும்

முறித்தல்பற்றியும்,*

உணவு மேசை மீது உன்

முழங்கைகளை வைப்பதுபற்றியும்,

21கொடுக்கும்போதும் வாங்கும்போதும்

மதியாமை பற்றியும்,

வணக்கம் செலுத்துவோர்முன்

அமைதி காத்தல் பற்றியும்,

22விலைமாதரை நோக்குவதுபற்றியும்,

உறவினரின் விண்ணப்பத்தை

புறக்கணிப்பது பற்றியும்,

23அடுத்தவரின் பங்கையும் பரிசையும்

பறித்துக்கொள்வதுபற்றியும்,

மணமான பெண்ணை

உற்றுநோக்குவதுபற்றியும்

24ஒருவருடைய பணிப் பெண்ணோடு

தகாத பழக்கம் வைத்துக்கொள்வது

பற்றியும், — அவளுடைய

படுக்கையை நெருங்காதே —

25நண்பர்களைத் திட்டுவதுபற்றியும், —

அவர்களுக்கு அன்பளிப்பு

வழங்கியபின் அவர்களை இகழாதே —

26நீங்கள் கேள்வியுற்றதைத்

திருப்பிச் சொல்வதுபற்றியும்

இரகசியங்களை

வெளிப்படுத்துவது பற்றியும்

வெட்கப்படுங்கள்.

27அப்போது நீங்கள்

உண்மையான நாணம்

கொள்வீர்கள்; எல்லா மனிதரின்

பரிவும் உங்களுக்குக் கிடைக்கும்.


41:20 இது எபிரேய பாடம். கிரேக்க பாடத்தில் ‘கடவுளின் உண்மைக்கும் உடன்படிக்கைக்கும் முன்’ என உள்ளது.