மனிதரின் இழிநிலை

1எல்லா மனிதரும்

கடும் உழைப்புக்கே

படைக்கப்பட்டிருக்கின்றனர்;

தாயின் வயிற்றிலிருந்து

வெளிவந்த நாள்முதல்

நிலம் என்னும் தாயிடம் எல்லாரும்

அடக்கமாகும் நாள்வரை ஆதாமின்

மக்கள்மீது வலிய நுகம்

சுமத்தப்பட்டிருக்கிறது.

2எதிர்காலத்தையும் இறுதி

நாளையையும் பற்றிய எண்ணங்கள்

மனிதருடைய சிந்தனையைக் குழப்பி,

உள்ளத்தை அச்சுறுத்துகின்றன.

3மேன்மைமிகு அரியணையில்

அமர்ந்திருப்போர்முதல்

புழுதியிலும் சாம்பலிலும்

உழலத் தாழ்த்தப்பட்டோர்வரை,

4கருஞ்சிவப்பு உடையும்

பொன்முடியும் அணிந்தோர்முதல்

முரட்டுத் துணி உடுத்தியோர்வரை .

எல்லாருக்கும் சீற்றம்,

பொறாமை, கலக்கம், குழப்பம்,

சாவுபற்றிய அச்சம், வெகுளி,

சண்டை ஆகியவை உண்டு.

5கட்டிலின்மீது

ஓய்வு கொள்ளும் நேரத்தில்,

இரவு நேரத் தூக்கம்

மனிதரின் அறிவைக் குழப்புகிறது.

6சிறிது நேர ஓய்வும்

ஓய்வாகத் தோன்றுவதில்லை;

பகலில் நேரிடுவதுபோன்று

உறக்கத்திலும் அவர்கள்

கலக்கம் அடைகிறார்கள்.

போர்க்களத்திலிருந்து தப்பிவந்தவர்

போலத் தீயக் கனவுகளால்

உள்ளத்தில் குழப்பம் அடைகிறார்கள்.

7தாங்கள் பாதுகாப்பு அடையும்

காலத்தில் விழித்துக்

கொள்கிறார்கள்; தாங்கள்

அஞ்சியிருந்ததற்குத் தகுந்த

காரணமில்லையே என

வியப்படைகிறார்கள்.

8-9மனிதர் முதல் விலங்குகள் வரை

எல்லா உயிரினங்களுக்கும்

சாவு, படுகொலை, சண்டை,

வாள், பேரிடர், பஞ்சம்,

அழிவு, நோவு ஆகியவை உண்டு.

பாவிகளுக்கோ இவை

ஏழு மடங்கு மிகுதியாகும்.

10இவையெல்லாம்

நெறிகெட்டவர்களுக்கெனப்

படைக்கப்பட்டவை; அவர்களை

முன்னிட்டே வெள்ளப்

பெருக்கும் உண்டாயிற்று.

11மண்ணிலிருந்து வந்த யாவும்

மண்ணுக்கே திரும்பும்;

தண்ணீரிலிருந்து வந்த யாவும்

கடலுக்கே திரும்பும்.

தீமையின் விளைவுகள்

12எல்லாக் கையூட்டும் அநீதியும்

அழித்தொழிக்கப்படும்;

பற்றுறுதி என்றென்றும் நிலைத்திடும்.

13அநீதருடைய செல்வம்

ஆற்றைப்போல வற்றிப்போகும்;

மழையின்போது விழும் பேரிடியைப்

போல மறைந்து போகும்.

14வள்ளன்மை கொண்டோர்

மகிழ்ச்சி அடைவர்;

கட்டளைகளை மீறுவோர்

முடிவில் அழிவர்.

15இறைப்பற்றில்லாதோரின்

வழிமரபினர் மிகுதியாகக்

கிளைவிடார்; இவர்கள்

பாறையின் உச்சியில் உள்ள

தூய்மையற்ற வேர்கள்.

16எல்லா நீர்நிலைகளிலும்

ஆற்றங்கரைகளிலும்

வளரும் நாணல், புல்

வகைகளுக்கு முன்னரே

பிடுங்கி எறியப்படும்.

17இரக்கம் என்பது நலமிகு

பூங்காபோன்றது;

தருமம் என்றும் நிலைக்கும்.

வாழ்வில் கிட்டும் இன்பம்

18தன்னிறைவு கொண்டோர்,

தொழில் புரிவோர் ஆகியோருடைய

. வாழ்க்கை இனிமையானது;

புதையலைக் கண்டுபிடிப்போருடைய

வாழ்க்கை அவர்கள்

இருவரின் வாழ்க்கையினும்

இனிமையானது.

19பிள்ளைகளைப் பெற்றெடுப்பதும்

நகர்களைக் கட்டியெழுப்புவதும்

ஒருவருடைய பெயரை நிலைக்கச்

செய்கின்றன. மாசற்ற மனைவி

இந்த இரண்டினும் மேலாக

மதிக்கப்படுவாள்.

20திராட்சை இரசமும் இன்னிசையும்

இதயத்தை மகிழ்விக்கின்றன.

ஞானத்தின்மேல் கொண்ட அன்பு

இவ்விரண்டினும் மேலானது.

21குழலும் யாழும்

இன்னிசை எழுப்புகின்றன;

இனிய சொல் இவ்விரண்டினும் சிறந்தது.

22வனப்பையும் அழகையும்

கண் நாடுகிறது; விளைநிலத்தின்

பசுமை இவ்விரண்டினும் உயர்ந்தது.

23நண்பரும் தோழரும் எப்போதும்

சந்திக்கத் தக்கவர்கள்;

தன் கணவருடன் வாழும்

மனைவி இவ்விருவரினும் மேலானவள்.

24உடன்பிறந்தோரும்

உதவி செய்வோரும்

துன்பத்திலிருந்து விடுவிப்பர்;

தருமம் செய்தல்

இவ்விருவரினும் சிறந்தது.

25பொன்னும் வெள்ளியும்

கால்களுக்கு உறுதி தரும்;

அறிவுரை இவ்விரண்டினும்

மேலாக மதிக்கப்பெறும்.

26செல்வமும் வலிமையும்

உள்ளத்தை உயர்த்துகின்றன;

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம்

இவ்விரண்டினும் மேலானது.

ஆண்டவரிடம் கொள்ளும்

அச்சத்தில் எக்குறையுமில்லை;

அதைக் கொண்டிருக்கும்போது

உதவி தேடத் தேவையில்லை.

27ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம்

நலமிகு பூங்காபோன்றது;

அது எல்லா மாட்சியையும்விடப்

பாதுகாப்பு அளிக்கிறது.

பிச்சையெடுத்தல்

28குழந்தாய், பிச்சையெடுத்து வாழாதே;

.பிச்சையெடுப்பதினும்

சாவதே மேல்.

29பிறரிடமிருந்து உணவை எதிர்பார்க்கிற

மனிதரின் வாழ்க்கையை வாழ்க்கை

எனச் சொல்லமுடியாது;

பிறருடைய உணவால் ஒருவர்

தம் வாழ்வை மாசுபடுத்துகிறார்;

அறிவாற்றல் படைத்தோரும்

நற்பயிற்சி பெற்றோரும் இதிலிருந்து

தங்களைப் பாதுகாத்துக்கொள்வர்.

30பிச்சையெடுத்தல்

வெட்கம் இல்லாதவரின்

வாயில் இனிக்கும்;

ஆனால், அது வயிற்றில்

நெருப்பாய்ப் பற்றியெரியும்.


40:1 யோபு 5:7; சஉ 1:3. 40:23 நீமொ 31:10-11; 19:14.