மறைநூல் அறிஞர்

1ஆனால் உன்னத இறைவனின்

திருச்சட்டத்தைப் படிப்பதில்

மனத்தைச் செலுத்துவோர்

தங்கள் முன்னோர் எல்லாருடைய

ஞானத்தையும் தேடுவர்;

இறைவாக்குகளைப்

படிப்பதில் ஈடுபட்டிருப்பர்.

2பேர்பெற்றவர்களின் உரைகளைக்

காப்பாற்றுவர்;

உவமைகளின் நுட்பங்களை

ஊடுருவிக் காண்பர்.

3பழமொழிகளின்

உட்பொருளைத் தேடுவர்;

உவமைகளில் பொதிந்துள்ள

புதிர்களை எளிதில்

புரிந்துகொள்வர்.

4பெரியோர்கள் நடுவே

பணியில் அமர்வர்;

ஆள்வோர் முன்னிலையில்

தோன்றுவர்; அயல்நாடுகளில்

பயணம் செய்வர்;

மனிதரிடம் உள்ள நன்மை

தீமைகளை ஆய்ந்தறிவர்.

5வைகறையில் துயிலெழுவர்;

தங்களைப் படைத்த ஆண்டவரிடம்

தங்கள் உள்ளத்தைக் கையளிப்பர்;

உன்னத இறைவன் திருமுன்

மன்றாடுவர்;

வாய் திறந்து வேண்டுவர்;

தங்கள் பாவங்களுக்காகக்

கெஞ்சி மன்றாடுவர்.

6மாண்புமிகு ஆண்டவர் விரும்பினால்,

அவர்கள் அறிவுக்கூர்மையால்

நிரப்பப்படுவார்கள்; தங்கள்

ஞானத்தின் மொழிகளைப்

பொழிவார்கள்; தங்கள்

வேண்டுதலில் ஆண்டவருக்கு

நன்றி செலுத்துவார்கள்.

7தங்கள் அறிவுரையையும்

அறிவாற்றலையும் நேரிய

வழியில் செலுத்துவார்கள்;

ஆண்டவருடைய

மறைபொருள்களைச்

சிந்தித்துப் பார்ப்பார்கள்.

8தாங்கள் கற்றறிந்த நற்பயிற்சியை

விளக்கிக் காட்டுவார்கள்;

ஆண்டவருடைய

உடன்படிக்கையின் திருச்சட்டத்தில்

பெருமை கொள்வார்கள்.

9பலர் அவர்களுடைய

அறிவுக் கூர்மையைப்

பாராட்டுவர்; அவர்களது

புகழ் ஒரு நாளும்

நினைவிலிருந்து அகலாது;

அவர்களுடைய நினைவு

மறையாது; தலைமுறை

தலைமுறைக்கும் அவர்களது

பெயர் வாழும்.

10நாடுகள் அவர்களது

ஞானத்தை எடுத்துரைக்கும்.

மக்கள் சபையும் அவர்களது

புகழ்ச்சியை அறிவிக்கும்.

11அவர்கள் நீண்ட நாள்

வாழ்ந்தால், ஓராயிரம்

பெயர்களைவிடப் புகழ்மிக்க

பெயரை விட்டுச்செல்வார்கள்;

இறந்தாலும் அப்பெயரே

அவர்களுக்குப் போதுமானது.

ஆண்டவரைப் புகழ அழைப்பு

12நான் சிந்தித்தவற்றை

இன்னும் எடுத்துரைப்பேன்;

முழு மதி போன்று அவற்றால்

நிறைந்துள்ளேன்.

13பற்றுறுதியுள்ள மக்களே,

நான் சொல்வதைக் கேளுங்கள்;

நீரோடை அருகில் வளரும்

ரோசாவைப்போன்று

மலர்ந்து விரியுங்கள்.

14சாம்பிராணி போன்று

நறுமணம் பரப்புங்கள்;

லீலிபோன்று மலருங்கள்;

நறுமணம் வீசுங்கள்;

புகழ்ப்பாடல் பாடுங்கள்;

ஆண்டவருடைய எல்லாச்

செயல்களுக்காகவும்

அவரைப் போற்றுங்கள்.

15அவருடைய பெயரை

மாட்சிமைப்படுத்துங்கள்;

உதடுகளில் எழும்

இன்னிசையாலும் யாழ்களாலும்

அவருடைய புகழை அறிவியுங்கள்;

அறிவிக்கும்போது

இவ்வாறு சொல்லுங்கள்;

16“ஆண்டவருடைய

செயல்களெல்லாமே மிக நல்லவை;

அவருடைய கட்டளையெல்லாம்

குறித்த நேரத்தில் நிறைவேறும்.”

‘இது என்ன?; அது எதற்கு?’ என

யாரும் கூறக் கூடாது;

எல்லாவற்றுக்கும் குறித்த நேரத்தில்

விளக்கம் கொடுக்கப்படும்.

17அவருடைய சொல்லால்

தண்ணீர் திரண்டு நின்றது;

அவருடைய வாய்மொழியால்

நீர்த்தேக்கம் உருவாயிற்று.

18அவருடைய ஆணையால்

அவர் விரும்பியதெல்லாம்

நிறைவேறிற்று. மீட்பளிக்கும்

அவரது ஆற்றலைக்

கட்டுப்படுத்துகிறவர் எவருமில்லை.

19எல்லா மனிதர்களின் செயல்களும்

அவர் திருமுன் இருக்கின்றன;

அவருடைய கண்களுக்கு

மறைவானது ஏதுமில்லை.

20என்றென்றும் அவர்

பார்த்துக் கொண்டிருக்கிறார்;

அவருக்கு அரியது ஒன்றுமில்லை.

21‘இது என்ன? அது எதற்கு?’ என

யாரும் கூறக்கூடாது;

ஒவ்வொன்றும் ஒரு நோக்கத்தோடு

படைக்கப்பட்டுள்ளது.

22ஆண்டவருடைய ஆசி

ஆறுபோலப் பெருக்கெடுக்கிறது;

காய்ந்த நிலத்தை

வெள்ளப் பெருக்குப்போல

நனைக்கிறது.

23நன்னீரை அவர் உப்புநீராக

மாற்றியதுபோல

நாடுகள் அவருடைய சினத்தை

உரிமையாக்கிக்கொள்ளும்.

24அவருடைய வழிகள்

தூயவர்களுக்கு நேரியனவாய்

இருக்கின்றன;

நெறிகெட்டவர்களுக்கு

இடறலாய் இருக்கின்றன.

25தொடக்கத்திலிருந்தே

நல்லவை நல்லவர்களுக்காகப்

படைக்கப்பட்டுள்ளன;

தீயவை பாவிகளுக்காகப்

படைக்கப்பட்டுள்ளன.

26நீர், தீ, இரும்பு, உப்பு,

கோதுமை மாவு, பால்,

தேன், திராட்சை இரசம்,

எண்ணெய், உடை ஆகியவை

மனித வாழ்வின் அடிப்படைத்

தேவைகளாகும்.

27இவையெல்லாம்

இறைப்பற்றுள்ளோருக்கு

நல்லவையாகும்; பாவிகளுக்குத்

தீயவையாக மாற்றப்படும்.

28தண்டனைக்காக அவர் சில

காற்றுகளைப் படைத்தார்;

அவருடைய சீற்றத்தால் அவை

கொடிய வாதைகளாக மாறின.

முடிவு காலத்தில் அவை

தம் வலிமையைக் கொட்டி,

தம்மைப் படைத்தவருடைய

சீற்றத்தைத் தணிக்கும்.

29தீ, கல்மழை, பஞ்சம், சாவு

ஆகியவையெல்லாம்

தண்டனைக்காகப் படைக்கப்பட்டவை.

30காட்டு விலங்குகளின் பற்கள்,

தேள்கள், நச்சுப்பாம்புகள்,

இறைப்பற்றில்லாதோரை

அழித்துத் தண்டிக்கும் வாள்

31ஆகியவை ஆண்டவருடைய

கட்டளைகளில் மகிழ்ச்சி கொள்ளும்;

அவருடைய பணிக்காக மண்மீது

ஆயத்தமாய் இருக்கும்;

தமக்குரிய காலம் வரும்போது

அவருடைய சொல்லை மீறா.

32இதன் பொருட்டே நான்

தொடக்கமுதல் உறுதியாய்

இருந்துள்ளேன்;

இதைப்பற்றிச் சிந்தித்தேன்;

எழுத்தில் விட்டுச்செல்கிறேன்.

33ஆண்டவருடைய

செயல்களெல்லாம் நல்லவை.

ஒவ்வொரு தேவையையும்

குறித்த காலத்தில் அவர்

நிறைவு செய்வார்.

34‘இது அதைவிடக் கெட்டது’ என

யாரும் சொல்ல முடியாது.

எல்லாம் அதனதன் காலத்தில்

நல்லவை என விளங்கும்.

35இப்போது முழு உள்ளத்தோடும்

ஆண்டவருக்கு வாயாரப்

புகழ் பாடுங்கள்; அவருடைய

பெயரைப் போற்றுங்கள்.


39:16 தொநூ 1:31. 39:24 ஓசே 14:10.