தீய நண்பர்கள்

1எல்லா நண்பர்களும், “நாங்களும் உம் நண்பர்கள்” என்பார்கள்; சிலர் பெயரளவில் மட்டுமே நண்பர்கள்.
2தோழரோ நண்பரோ பகைவராய் மாறுவது சாவை வருவிக்கும் வருத்தத்திற்கு உரியதன்றோ?
3ஓ! தீய நாட்டமே, நிலத்தை வஞ்சனையால் நிரப்ப எங்கிருந்து நீ உருவானாய்?
4தோழர்கள் சிலர் தங்கள் நண்பர்களின் உவகையில் மகிழ்வார்கள்; துன்பக் காலத்தில் அவர்களை எதிர்ப்பார்கள்.
5வேறு சில தோழர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக நண்பர்களுக்கு உதவுவார்கள்; இருப்பினும் போர்க் காலத்தில் எதிரியிடமிருந்து அவர்களைக் காப்பார்கள்.
6உன் உள்ளத்தில் உன் நண்பர்களை மறவாதே; உன்செல்வத்தில் அவர்களை நினையாமலிராதே.

அறிவுரையாளர்

7எல்லா அறிவுரையாளரும் தங்கள் அறிவுரையைப் பாராட்டுவர்; சிலர் தன்னலத்துக்காகவே அறிவுரை கூறுவர்.
8அறிவுரையாளரைப்பற்றி எச்சரிக்கையாய் இரு; முதலில் அவர்களது தேவை என்ன எனக் கண்டுபிடி. ஏனெனில் அவர்கள் தன்னலத்துக்காகவே அறிவுரை கூறுவார்கள். இல்லையேல், உனக்கு எதிராகத் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தலாம்.
9அவர்கள் உன்னிடம், ‘உன் வழி நல்லது’ எனச் சொல்வார்கள். பின்பு, உனக்கு என்ன நடக்கிறது எனப் பார்க்க உனக்கு எதிரே நிற்பார்கள்.
10உன்னைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறவரிடம் அறிவுரை கேளாதே; உன்மேல் பொறாமை கொள்வோரிடமிருந்து உன் எண்ணங்களை மறைத்துக்கொள்.
11பெண்ணிடம் அவளுடைய எதிரியைப்பற்றியோ, கோழையிடம் போரைப்பற்றியோ, வணிகரிடம் விலைகளைப் பற்றியோ, வாங்குபவரிடம் விற்பனையைப்பற்றியோ, பொறாமை கொள்பவரிடம் நன்றியறிதலைப்பற்றியோ, கொடியவரிடம் இரக்கத்தைப் பற்றியோ, சோம்பேறியிடம் வேலையைப்பற்றியோ, நாள் கூலியாளிடம் வேலையை முடித்தலைப்பற்றியோ, சோம்பேறி அடிமையிடம் பல வேலைகளைப்பற்றியோ, அவர்கள் கொடுக்கும் எந்த அறிவுரையையும் பொருட்படுத்தாதே.
12இறைப்பற்றுள்ளவர்களோடு, உனக்குத் தெரிந்தவரை கட்டளைகளைக் கடைப்பிடித்தவர்களோடு, ஒத்த கருத்து உடைவர்களோடு, நீ தவறினால் உன்னுடன் சேர்ந்து வருந்துபவர்களோடு, எவ்பொழுதும் இணைந்திரு.
13உன் உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய் நில்; அதைவிட நம்பத்தக்கது உனக்கு வேறெதுவுமில்லை.
14காவல்மாடத்தின்மேலே அமர்ந்திருக்கும் ஏழு காவலர்களைவிட மனித உள்ளம் சில வேளைகளில் நன்கு அறிவுறுத்துகிறது.
15இவை எல்லாவற்றுக்கும்மேலாக, உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்பொழுது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்.

ஞானம்

16எண்ணமே செயலின் தொடக்கம்; திட்டமிடல் எல்லாச் செயலாக்கத்திற்கும் முன்செல்கிறது.
17மனமாற்றத்தின் அடையாளம் நான்கு வகைகளில் வெளிப்படும்;
18அவை நன்மை தீமை, வாழ்வு சாவு; இவற்றை இடைவிடாது ஆண்டு நடத்துவது நாவே.
19பலருக்கு நற்பயிற்சி அளிப்பதில் சிலர் திறமையுள்ளோராய் இருக்கின்றனர்; தமக்கோ பயனற்றவராய் இருக்கின்றனர்;
20நாவன்மை படைத்த சிலர் வெறுக்கப்படுகின்றனர்; அவர்களுக்கு எவ்வகை உணவும் இல்லாமற் போகும்.
21ஏனெனில் பேசும் வரம் அவர்களுக்கு ஆண்டவரால் கொடுக்கப்படவில்லை; அவர்களிடம் எவ்வகை ஞானமும் இல்லை.
22சிலர் தங்களுக்கே ஞானியராய் இருக்கின்றனர்; அவர்களுடைய அறிவுக்கூர்மையின் பயன்கள் அவர்களது பேச்சில் வெளிப்படும்.
23ஞானி தம் மக்களுக்கு நற்பயிற்சி அளிக்கிறார்; அவருடைய அறிவுக்கூர்மையின் பயன்கள் நம்பத்தக்கவை.
24ஞானி புகழால் நிரப்பப்படுவார்; அவரைக் காண்போர் அனைவரும் அவரைப் பேறுபெற்றவர் என அழைப்பர்.
25மனித வாழ்க்கை, நாள்களின் எண்ணிக்கையில் அடங்கும்; இஸ்ரயேலின் நாள்களோ எண்ணிக்கையில் அடங்கா.
26ஞானி தம் மக்கள் நடுவே நன்மதிப்பை உரிமையாக்கிக் கொள்வார்; அவரது பெயர் நீடூழி வாழும்.

உணவில் கட்டுப்பாடு

27குழந்தாய், உன் வாழ்நாளில் உன்னையே சோதித்துப்பார்; உனக்கு எது தீயது எனக் கவனி; அதற்கு இடம் கொடாதே.
28எல்லாமே எல்லாருக்கும் நன்மை பயப்பதில்லை; எல்லாரும் எல்லாவற்றிலும் இன்பம் காண்பதில்லை;
29எவ்வகை இன்பத்திலும் எல்லை மீறிச் செல்லாதே; நீ உண்பவற்றின் மீது மிகுந்த ஆவல் கொள்ளாதே.
30மிகுதியாக உண்பதால் நோய் உண்டாகிறது; பேருண்டி குமட்டலைக் கொடுக்கிறது.
31பேருண்டியால் பலர் மாண்டனர்; அளவோடு உண்போர் நெடுநாள் வாழ்வர்.

37:6 நீமொ 27:10.