1எல்லாவற்றிற்கும் கடவுளாகிய
ஆண்டவரே,
எங்கள்மீது இரக்கமாயிரும்;
எங்களைக் கண்ணோக்கும்;
உம்மைப்பற்றிய அச்சம்
எல்லா நாடுகள் மீதும்
நிலவச் செய்யும்.
2அயல் நாடுகளுக்கு எதிராக
உம் கையை உயர்த்தும்.
அவர்கள் உம் வலிமையைக்
காணட்டும்.
3அவர்கள் முன்னிலையில்
எங்கள் வழியாக உமது
தூய்மையைக் காட்டியது போல்,
எங்கள் முன்னிலையில்
அவர்கள் வழியாக உமது
மாட்சியைக் காட்டும்.
4ஆண்டவரே, உம்மைத் தவிர
வேறு கடவுள் இல்லை
என நாங்கள் அறிந்துள்ளதுபோல்
அவர்களும் உம்மை
அறிந்து கொள்ளட்டும்.
5புதிய அடையாளங்களை வழங்கும்;
வியத்தகு செயல்களை நிகழ்த்தும்;
உம் கையினை, வலக்கையினை
மாட்சிமைப்படுத்தும்.
6சினத்தைத் தூண்டிச்
சீற்றத்தைப் பொழியும்;
எதிரியை ஒழித்துப்
பகைவரைப் பாழாக்கும்.
7காலத்தை விரைவுபடுத்தி
ஆணையை நினைவுக்கூரும்;
அவர்கள் உம் அரும் பெரும்
செயல்களை எடுத்துரைக்கட்டும்.
8தப்பிப் பிழைத்தோரைச் சினம்
என்னும் நெருப்பு விழுங்கட்டும்;
உம் மக்களுக்குத் தீங்கிழைப்போர்
அழிவைக் காணட்டும்.
9‘எங்களைத்தவிர
வேறு யாரும் இல்லை’
எனக் கூறும் பகை வேந்தர்களின்
தலைகளை நசுக்கும்.
10யாக்கோபின் குலங்களை
ஒன்று கூட்டும்; தொடக்கத்தில்
போன்று அவர்களை
உமது உரிமைச்சொத்தாக்கும்.
11ஆண்டவரே, உம் பெயரால்
அழைக்கப்பெற்ற மக்களுக்கு
இரக்கங் காட்டும்;
உம் தலைப்பேறாகப்
பெயரிட்டழைத்த இஸ்ரயேலுக்குப்
பரிவுகாட்டும்.
12உமது திருவிடம் இருக்கும்
நகரின்மீது, நீர் ஓய்வு
கொள்ளும் இடமாகிய
எருசலேம்மீது கனிவு காட்டும்.
13உமது புகிழ்ச்சியால்
சீயோனை நிரப்பும்;
உமது மாட்சியால் உம்
மக்களை நிரப்பும்.
14தொடக்கத்தில் நீர்
படைத்தவற்றுக்குச்
சான்று பகரும்; உம் பெயரால்
உரைக்கப்பட்ட இறைவாக்குகளை
நிறைவேற்றும்.
15உமக்காகப் பொறுமையுடன்
காத்திருப்போருக்குப் பரிசு அளியும்;
உம் இறைவாக்கினர்கள்
நம்பத்தகுந்தவர்கள் என
மெய்ப்பித்துக் காட்டும்.
16ஆண்டவரே, உம் மக்களுக்கு
ஆரோன் வழங்கிய
ஆசிக்கு ஏற்ப உம்மிடம்
மன்றாடுவோரின் வேண்டுதலுக்குச்
செவிசாயும்.
17அப்போது, நீரே ஆண்டவர்,
என்றுமுள கடவுள்
என்பதை மண்ணுலகில் உள்ள
எல்லோரும் அறிந்துகொள்வர்.✠
18வயிறு எல்லா வகை
உணவுகளையும் உட்கொள்கிறது;
எனினும் ஒரு வகை உணவு
மற்றொன்றைவிட மேலானது.
19வேட்டையாடிய உணவினை
நாக்கு சுவைத்து அறிகிறது;
அறிவுக்கூர்மை கொண்ட
உள்ளம் பொய்யைப் பிரித்தறிகிறது.
20மனக்கோட்டம் கொண்டோர்
வருத்தத்தைக் கொடுப்பர்;
பட்டறிவு கொண்டோர்
அவர்களுக்கு எதிரடி கொடுப்பர்.
21ஒரு பெண் எந்த ஆணையும்
கணவனாக ஏற்றுக்கொள்வாள்;
ஆனால், ஆணுக்கு
ஒரு பெண்ணைவிட
மற்றொருத்தி மேம்பட்டவளாகத்
தோன்றுவாள்.
22பெண்ணின் அழகு அவளுடைய
கணவனை மகிழ்விக்கும்;
அவன் வேறு எதையும்
அவ்வளவு விரும்புவதில்லை.
23அவளது பேச்சில் இரக்கமும்
கனிவும் இருக்குமானால்
அவளுடைய கணவன்
மற்ற மனிதர்களைவிட
நற்பேறு உடையவன்.
24மனைவியை அடைகிறவன்
உடைமையைப்
பெறுகிறான்; தனக்கு ஏற்ற
துணையையும் ஆதரவு தரும்
தூணையும் அடைகிறான்.
25வேலி இல்லையேல் உடைமை
கொள்ளையடிக்கப்படும்;
மனைவி இல்லையேல் மனிதன்
பெருமூச்சு விட்டு அலைவான்.
26நகர்விட்டு நகருக்குத்
தப்பியோடும் திறமையான
திருடனை யாரே நம்புவர்?
27அவ்வாறே, தங்குவதற்கு
இடம் இல்லாமல், இரவு வந்ததும்
கண்ட இடத்திலும் தங்கும்
மனிதனை எவர் நம்புவர்?