1ஆண்டவருக்கு அஞ்சி

நடப்போர்க்குத்

தீங்கு எதுவும் நேராது;

அவர்களை அவர் சோதனையினின்று

மீண்டும் மீண்டும் விடுவிப்பார்.

2ஞானிகள் திருச்சட்டத்தை

வெறுக்கமாட்டார்கள்;

அதைக் கடைப்பிடிப்பதாக

நடிப்போர் புயலில் சிக்குண்ட

படகுபோல் ஆவர்.

3அறிவுக்கூர்மை கொண்டோர்

திருச்சட்டத்தை நம்புகின்றனர்;

அது அவர்களுக்கு இறைமொழி

போன்று நம்பிக்கைக்குரியது.

4உன் பேச்சை ஆயத்தம்

செய்து கொள்; அப்போது மக்கள்

அதைக் கேட்பார்கள்.

நீ பெற்ற நற்பயிற்சியிலிருந்து

கருத்துகளை ஒழுங்குபடுத்து;

பிறகு மறுமொழி கூறு.

5மூடரின் உணர்வுகள்

சக்கரம் போன்றவை;

அவர்களின் எண்ணங்கள்

சுழலும் அச்சுப் போன்றவை;

6பொலி குதிரை மீது

யார் ஏறிச் சென்றாலும்

அது கனைக்கிறது;

எள்ளி நகையாடும் நண்பர்கள்

அதைப் போன்றவர்கள்.

ஏற்றத் தாழ்வு

7ஒவ்வொரு நாளும்

ஒரே கதிரவனிடமிருந்து

ஒளி பெற்றாலும் ஆண்டின் ஒரு

நாள் இன்னொரு நாளைவிடச்

சிறப்பாக இருப்பது ஏன்?

8ஆண்டவருடைய ஞானத்தால்

நாள்கள் வேறுபடுத்தப்படுகின்றன;

அவரே காலங்களையும்

விழாக்களையும் வெவ்வேறாக

அமைத்தார்.

9சில நாள்களை அவர் உயர்த்தித்

தூய்மைப்படுத்தினார்;

சிலவற்றைப் பொதுவான

நாள்களாக வைத்தார்.

10மனிதர் எல்லாரும்

நிலத்திலிருந்து வந்தவர்கள்;

மானிடர் மண்ணிலிருந்து

படைக்கப்பட்டனர்.

11நிறைவான அறிவாற்றலால்

ஆண்டவர் அவர்களை

வேறுபடுத்தினார்; அவரே

அவர்களின் வழிகளை

வெவ்வேறாக அமைத்தார்.

12ஆசி வழங்கிச் சிலரை

அவர் உயர்த்தினார்;

சிலரைத் தூயவராக்கித்

தம் அருகில் வைத்துக்கொண்டார்.

ஆனால் வேறு சிலரைச்

சபித்துத் தாழ்த்தினார்;

அவர்கள் இடத்திலிருந்தே

அவர்களை விரட்டியடித்தார்.

13குயவர் கையில் களிமண்போல் —

அவர்களின் எல்லா வழிகளும்

அவர்களது விருப்பப்படியே

அமைகின்றன. — மனிதர்

தங்களை உண்டாக்கியவரின்

கையில் உள்ளனர்; அவர் தமது

தீர்ப்புக்கு ஏற்ப அவர்களுக்குக்

கைம்மாறு கொடுக்கிறார்.

14நன்மைக்கு முரணானது தீமை;

வாழ்வுக்கு முரணானது சாவு;

இறைப்பற்றுள்ளோருக்கு

முரணானோர் பாவிகள்.

15உன்னத இறைவனின்

எல்லா வேலைப்பாடுகளையும்

உற்று நோக்கு. அவை

இணை இணையாக உள்ளன;

ஒன்று மற்றொன்றுக்கு

எதிராய் இருக்கிறது.

16இறுதியாக

விழித்தெழுந்தவன் நான்;

திராட்சைப் பழம் பறிப்போர்

விட்டுப்போனவற்றைத்

திரட்டியவனைப் போன்றவன் நான்.

17ஆண்டவரின் ஆசியால் நான்

முதன்மை நிலை பெற்றேன்;

திராட்சைப்பழம் பறிப்போர்

போலத் திராட்சை பிழியும்

தொட்டியை நிரப்பினேன்.

18எண்ணிப்பார்; எனக்காக

மட்டும்நான் உழைக்கவில்லை;

நற்பயிற்சியைத் தேடும்

அனைவருக்காகவுமே உழைத்தேன்.

19மக்களுள் பெரியோர்களே,

நான் சொல்வதைக் கேளுங்கள்;

சபைத்தலைவர்களே,

கூர்ந்து கேளுங்கள்.

தன்னுரிமை

20உன் மகனையோ

மனைவியையோ,

சகோதரரையோ நண்பரையோ

உன் வாழ்நாளில் உன்மேல்

அதிகாரம் செலுத்த விடாதே;

உன் செல்வங்களை

மற்றவர்களுக்குக் கொடாதே.

இல்லையேல் நீ மனவருத்தப்பட்டு

அவற்றைத் திருப்பிக் கேட்கக்கூடும்.

21உன்னிடம் உயிர் உள்ளவரை,

மூச்சு இருக்கும்வரை,

மற்றவர்கள் உன்மீது அதிகாரம்

செலுத்த விடாதே.

22நீ உன் பிள்ளைகள் கையை

எதிர்பார்த்திருப்பதைவிட

உன் பிள்ளைகள் உன்னிடம்

கேட்பதே மேல்.

23உன்னுடைய எல்லாச்

செயல்களிலும் சிறந்தோங்கு;

உன் புகழுக்கு

இழுக்கு வருவிக்காதே.

24உன் வாழ்நாளை நீ முடிக்கும்

அந்நாளில்,

அந்த இறுதி நேரத்தில்,

உன் உரிமைச்சொத்தைப்

பகிர்ந்துகொடு.

அடிமைகள்

25தீவனம், தடி, சுமை கழுதைக்கு;

உணவு, கண்டிப்பு, வேலை அடிமைக்கு.

26அடிமையிடம் வேலை வாங்கு,

நீ ஓய்வு காண்பாய்;

அவனைச் சோம்பியிருக்க விடு,

அவன் தன்னுரிமையைத் தேடுவான்.

27நுகமும் கடிவாளமும் காளையின்

கழுத்தை வளைக்கின்றன;

வாட்டுதலும் வதைத்தலும்

தீய அடிமையை அடக்குகின்றன.

28அவனை வேலைக்கு அனுப்பு.

இல்லையேல்,

அவன் சோம்பித் திரிவான்.

சோம்பல் பலவகைத் தீங்கையும்

கற்றுக் கொடுக்கிறது.

29அவனுக்கு ஏற்ற வேலையைச்

செய்ய அவனை ஏவு;

அவன் பணிந்து நடக்கவில்லையேல்,

கடுமையான விலங்குகளை

அவனுக்கு மாட்டு.

30ஆனால் எவரோடும் எல்லை மீறி

நடந்துகொள்ளாதே;

நீதிக்கு மாறாக எதையும் செய்யாதே.

31உனக்கு ஓர் அடிமை

மட்டும் இருந்தால், அவனை

உன்னைப்போல நடத்து;

ஏனெனில் அவனை உன்

குடும்பத்தானாக வாங்கியுள்ளாய்.

32உனக்கு ஓர் அடிமை

மட்டும் இருந்தால், அவனை

உன் சகோதரன் போல நடத்து;

ஏனெனில் உன் உயிரைப்போல்

உனக்கு அவன் தேவைப்படுவான்.

33நீ அவனைக் கொடுமைப்படுத்த,

அவன் உன்னை விட்டு

ஓடிப்போனால் எந்த வழியில்

அவனைத் தேடிப் போவாய்?


33:10 சாஞா 7:1. 33:12 எண் 16:9.