விருந்தில் நடந்துகொள்ளும் முறை

1நீ விருந்துக்குத் தலைவனாக

ஏற்படுத்தப்பட்டுள்ளாயா?

இறுமாப்புக் கொள்ளாதே;

விருந்தினர்களுள் நீயும்

ஒருவனாக நடந்துகொள்;

முதலில் மற்றவர்களைக் கவனி;

பிறகு நீ பந்தியில் அமர்ந்துகொள்.

2உன் கடமைகளையெல்லாம்

நீ செய்தபின் பந்தியில்

அமர்ந்துகொள்; அப்போது

அவர்கள்மூலம் நீ மகிழ்வாய்;

விருந்தை நன்முறையில்

நடத்தித்தந்தமைக்காக

நீ மணிமுடி பெறுவாய்.

3மூப்பரே, பேசும்;

அது உமக்குத் தகும்.

ஆனால் நுண்ணிய

அறிவாற்றலோடு பேசும்;

இன்னிசையைத் தடை செய்யாதிரும்.

4இசை ஒலிக்கும் இடத்தில்

மிகுதியாகப் பேசாதீர்;

பொருந்தா வேளையில்

உம் ஞானத்தை வெளிப்படுத்தாதீர்.

5திராட்சை இரசம் பரிமாறப்படும்

விருந்தில் அமையும் இன்னிசை

நிகழ்ச்சி பொன் அணிகளில்

இருக்கும் மாணிக்க

முத்திரை போன்றது.

6சிறப்புமிகு திராட்சை இரசம்

பரிமாறப்படும் விருந்தில்

அமையும் பண்ணொழுகும்

இன்னிசை பொன்

அணிகலன்களில் இருக்கும்

இரத்தின முத்திரை போன்றது.

7இளைஞனே,

தேவைப்பட்டால் பேசு;

அரிதாக, அதுவும்

இரு முறை வினவப்பெற்றால்

மட்டும் பேசு.

8சுருக்கமாய்ப் பேசு;

குறைவான சொற்களில்

நிறைய சொல்; அறிந்திருந்தும்

அமைதியாக இரு.

9பெரியார்கள் நடுவில்

உன்னை அவர்களுக்கு

இணையாக்கிக் கொள்ளாதே;

அடுத்தவர் பேசும்போது

உளறிக்கொண்டிராதே.

10இடி முழக்கத்திற்கு

முன் மின்னல் வெட்டுகிறது;

அடக்கமான மனிதருக்குமுன்

அவர்களது நற்பெயர் செல்கிறது.

11விருந்தைவிட்டு நேரத்தோடு

எழுந்திரு;

கடைசி ஆளாய் இராதே;

அலைந்து திரியாது வீட்டுக்கு

விரைந்து செல்.

12அங்குக் களித்திரு;

உன் விருப்பப்படி செய்;

செருக்கான பேச்சுகளால்

பாவம் செய்யாதே.

13மேலும் உன்னைப்

படைத்தவரைப் போற்று;

அவரே தம் நலன்களால்

உன்னை நிரப்பியவர்.

இறையச்சம்

14ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர்

நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வர்;

வைகறையில் அவரைத் தேடுவோர்

அவரது பரிவைப் பெற்றுக் கொள்வர்.

15திருச்சட்டத்தை ஆய்ந்தறிவோர்

அதனால் நிறைவுபெறுவர்;

வெளிவேடக்காரர் அதனால்

தடுக்கி விழுவர்.

16ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர்

நீதித் தீர்ப்பைக் காண்பர்;

தங்களின் நேர்மையான

செயல்களை ஒளிபோலத்

தூண்டிவிடுவர்.

17பாவியர் கண்டனத்தைத்

தட்டிக் கழிப்பர்; தங்கள்

விருப்பத்திற்கு ஏற்பச்

சாக்குப் போக்குகளைக்

கண்டுபிடிப்பர்.

18அறிவுள்ளோர் பிறருடைய

கருத்துகளைப் புறக்கணியார்;

பெருமையும் இறுமாப்பும்

கொண்டோர் அச்சத்தால்

பின்னடையார்.*

19எண்ணிப் பாராது

எதையும் செய்யாதே;

செய்தபின் மனம் வருந்தாதே.

20சிக்கலான வழிதனியே

போகாதே; ஒரே கல்மீது

இரு முறை தடுக்கி விழாதே.

21தடங்கலற்ற வழியை நம்பாதே.

22உன் பிள்ளைகளிடமிருந்தும்

உன்னைக் காப்பாற்றிக்கொள்.

23உன் செயல்கள் அனைத்திலும்

உன்னையே நம்பு;

இவ்வாறு கட்டளைகளைக்

கடைப்பிடிப்பாய்.

24திருச்சட்டத்தை நம்புவோர்

கட்டளைகளுக்குப்

பணிந்து நடப்பர்;

ஆண்டவரை நம்புவோர்க்கு

இழப்பு என்பதே இல்லை.


32:8 நீமொ 17:28.
32:18 இது எபிரேய பாடம். ‘அன்னியரும் இறுமாப்புக் கொண்டோரும் அச்சத்தால் பின்னடைவர்’ என கிரேக்க பாடத்தில் உள்ளது.