கனவுகள்

1மதியீனர் வெறுமையான பொய்யான நம்பிக்கை கொண்டுள்ளனர். கனவுகள் அறிவிலிகளுக்குப் பறக்க இறக்கைகள் தருகின்றன.
2கனவுகளைப் பொருட்படுத்துவோர் நிழலைப் பிடிக்க முயல்வோர்போலும், காற்றைத் துரத்துவோர்போலும் ஆவர்.
3கண்ணாடியில் தெரியும் முகம் வெறும் தோற்றமே; கனவுகளில் தோன்றுவதும் அவ்வாறே.
4தூய்மையின்மையிலிருந்து தூய்மை வரக்கூடுமோ? பொய்மையிலிருந்து உண்மை வரக்கூடுமோ?
5குறி கூறல், சகுனம் பார்த்தல், கனவுகள் பொருளற்றவை; பேறுகாலப் பெண்போன்று உள்ளம் கற்பனை செய்கிறது.
6அவை உன்னத இறைவனின் குறுக்கீட்டால் அனுப்பப்பட்டாலன்றி உன் மனத்தை அவற்றில் செலுத்தாதே.
7கனவுகள் பலரை நெறிபிறழச் செய்துள்ளன; அவற்றில் நம்பிக்கை வைத்தோர் வீழ்ச்சியுற்றனர்.
8இத்தகைய பொய்மையின்றியே திருச்சட்டம் நிறைவேறும். நம்பிக்கைக்குரியோரின் பேச்சில் ஞானம் நிறைவு பெறும்.

பயணம்

9பல நாடுகளுக்கும் சென்று வந்தோர்* பலவற்றை அறிவர்; பட்டறிவு மிகுந்தோர் அறிவுக் கூர்மையுடன் பேசுவர்;
10செயலறிவு இல்லாதோர் சிலவற்றையே அறிவர்; பல நாடுகளுக்கும் சென்று வந்தோர் தங்களது அறிவுடைமையைப் பெருக்கிக்கொள்வர்.
11என்னுடைய பயணங்களில் பலவற்றைக் கண்டிருக்கிறேன்; நான் எடுத்துரைப்பதைவிட மிகுதியாகப் புரிந்துகொண்டேன்.
12பல வேளைகளில் நான் சாவுக்குரிய பேரிடருக்கு உட்பட்டிருக்கிறேன்; பட்டறிவால் காப்பாற்றப்பட்டிருக்கிறேன்.

இறையச்சம்

13ஆண்டவருக்கு அஞ்சுவோர் உயிர்வாழ்வர்; அவர்களது நம்பிக்கை தங்களைக் காப்பாற்றுகிறவர்மேல் இருக்கிறது.
14ஆண்டவருக்கு அஞ்சுபவர்கள் எதற்கும் நடுங்கவோ தயங்கவோ மாட்டார்கள்; ஏனெனில் அவரே அவர்களது நம்பிக்கை.
15ஆண்டவருக்கு அஞ்சுவோர் பேறுபெற்றோர்; அவர்கள் யாரை நம்புவார்கள்? அவர்களுடைய துணையாளர் யார்?
16ஆண்டவருடைய கண்கள் அவர்மேல் அன்புகூர்வோர்மீது உள்ளன; அவரே அவர்களுக்கு உறுதியான பாதுகாப்பு, வலிமைமிக்க துணை, வெப்பத்தில் மறைவிடம், நண்பகல் வெயிலில் நிழல்; தடுமாற்றத்தில் ஊன்றுகோல், வீழ்ச்சியில் அரண்.
17அவர் உள்ளத்தை உயர்த்துகிறார்; கண்களை ஒளிர்விக்கிறார்; நலமும் வாழ்வும் ஆசியும் அருள்கிறார்.

பலிகள்

18அநியாயமாய் ஈட்டியவற்றினின்று பலியிடுவோரின் காணிக்கை மாசுள்ளது; நெறிகெட்டோரின் நன்கொடைகள் ஏற்புடையவை அல்ல.
19இறைப்பற்றில்லாதோரின் காணிக்கைகளை உன்னத இறைவன் விரும்புவதில்லை; ஏராளமான பலி செலுத்தியதற்காக அவர் ஒருவருடைய பாவங்களை மன்னிப்பதில்லை.
20ஏழைகளின் உடைமையிலிருந்து பலி செலுத்துவது தந்தையின் கண்முன்னே மகனைக் கொலை செய்வதற்கு இணையாகும்.
21எளிய உணவே ஏழைகளுக்கு உயிர்; அதை அவர்களிடமிருந்து பறிப்பவர்கள் இரத்த வெறியர்கள்.
22அடுத்தவர் பிழைப்பைக் கெடுப்பது அவர்களைக் கொல்வதாகும்; கூலியாளின் கூலியைப் பறிப்போர் அவர்களது குருதியையே சிந்துகின்றனர்.
23ஒருவர் கட்ட, மற்றொருவர் இடித்தால், கடின உழைப்பைத் தவிர வேறு என்ன பயன் கிட்டும்?
24ஒருவர் மன்றாடுகையில் மற்றொருவர் சபித்தால் யாருடைய குரலை ஆண்டவர் கேட்பார்?
25பிணத்தைத் தொட்டவர் குளித்தபின் மீண்டும் அதைத் தொடுவாராயின், அவர் குளித்ததால் பயன் என்ன?
26தங்கள் பாவங்களுக்காக நோன்பிருப்போர் வெளியில் சென்று, மீண்டும் அதே பாவங்களைச் செய்தால், யார் அவர்களது வேண்டுதலைக் கேட்பர்? அவர்கள் தங்களைத் தாழ்த்திக் கொள்வதால் பயன் என்ன?

34:4 யோபு 4:4. 34:16 திபா 33:18. 34:18-19 நீமொ 15:18; 21:27.
34:9 ‘நற்பயிற்சி பெற்றோர்’ எனச் சில சுவடிகளில் காணப்படுகிறது.