1பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப்பழியே பெறுவர். ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார்.
2உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும் போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்.
3மனிதர் மனிதர்மீது சினங்கொள்கின்றனர்; அவ்வாறிருக்க, ஆண்டவர் தங்களுக்கு நலம் அளிப்பார் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
4மனிதர் தம்போன்ற மனிதருக்கு இரக்கங்காட்டுவதில்லை; அப்போது அவர்கள் தம் பாவமன்னிப்புக்காக எப்படி மன்றாடமுடியும்?
5அழியும் தன்மை கொண்ட மனிதர் வெகுளியை வளர்க்கின்றனர். அவ்வாறாயின், யார் அவர்களுடைய பாவங்களுக்குக் கழுவாய் தேட முடியும்?
6உன் முடிவை நினைத்துப்பார்; பகைமையை அகற்று; அழிவையும் சாவையையும் நினைத்துப்பார்; கட்டளைகளில் நிலைத்திரு.
7கட்டளைகளை நினைவில் கொள்; அடுத்தவர்மீது சினங்கொள்ளாதே; உன்னத இறைவனின் உடன்படிக்கையைக் கருத்தில் வை; குற்றங்களைப் பொருட்படுத்தாதே.

பூசல்

8பூசலைத் தவிர்த்திடு; உன் பாவங்கள் குறையும். சீற்றங்கொள்வோர் சண்டையை மூட்டிவிடுகின்றனர்.
9பாவிகள் நட்பைக் கலைக்கிறார்கள்; அமைதியாய் இருப்போரிடையே பிணக்கை விதைக்கிறார்கள்.
10விறகின் தன்மைக்கு ஏற்ப நெருப்பு பற்றியெரியும்; பூசலின் கடுமைக்கு ஏற்ப அது பற்றியெரியும். மனிதரின் வலிமையைப் பொறுத்து அவர்களின் சீற்றம் அமையும்; அவர்களின் செல்வத்தைப் பொறுத்து அவர்களது சினம் பெருகும்.
11திடீர் வாக்குவாதம் நெருப்பை மூட்டுகிறது; திடீர்ப் பூசல் கொலைக்கு இட்டுச் செல்கிறது.
12ஊதும்போது தீப்பொறி கொழுந்துவிட்டு எரிகிறது; அதன்மீது துப்பும்போது அது அணைந்துபோகிறது; இந்த இரு விளைவுகளும் உன் வாயினின்றே புறப்படுகின்றன.

புறங் கூறுதல்

13புறங்கூறுவோரையும் இரட்டை நாக்குக் கொண்டோரையும் சபி. அமைதியில் வாழ்ந்த பலரை அவர்கள் அழித்துவிட்டார்கள்.
14மூன்றாவது நாக்கு* பலரை நிலைகுலையச் செய்தது; அவர்களை நாடுவிட்டு நாடு துரத்தியடித்தது; அரண் கொண்ட நகர்களைத் தகர்த்தெறிந்தது; பெரியோர்களின் வீடுகளைத் தரைமட்டமாக்கியது.
15மூன்றாவது நாக்கு பற்றுள்ள மனைவியரையும் வெளியில் துரத்தியது; அவர்களுடைய உழைப்பின் பயனை இழக்கச் செய்தது.
16அதற்குச் செவிசாய்ப்பவர்கள் ஓய்வு கொள்ளமாட்டார்கள்; அமைதியிலும் வாழமாட்டார்கள்.
17சவுக்கடி தழும்பை உண்டாக்கும்; வாயடியோ எலும்பை முறிக்கும்.
18பலர் வாள்முனையில் மடிந்திருக்கின்றனர்; நாவால் மடிந்தோரே அவர்களை விட மிகுதியானோர்.
19மூன்றாவது நாக்கினின்று பாதுகாக்கப்பட்டோர் பேறுபெற்றோர்; அதன் சீற்றத்துக்கு ஆளாகாதோறும் அதன் நுகத்தைச் சுமக்காதோறும் அதன் சங்கிலிகளால் கட்டப்படாதோரும் பேறுபெற்றோர்.
20அதன் நுகம் இரும்பு நுகம்; அதன் சங்கிலிகள் வெண்கலச் சங்கிலிகள்.
21அதனால் விளையும் சாவு இழிந்த சாவு; அதனைவிடப் பாதாளம் மேலானது.
22இறைப்பற்றுள்ளோர்மீது அதற்கு ஆற்றலில்லை; அதன் தீப்பிழம்புகள் அவர்களை எரிப்பதில்லை.
23ஆண்டவரைவிட்டு விலகுவோர் அதற்குள் விழுகின்றனர்; அவர்களுக்குள் அது கொழுந்துவிட்டு எரியும்; அதை அணைக்க முடியாது. அது சிங்கத்தைப்போன்று அவர்கள் மீது கட்டவீழ்த்துவிடப்படும்; வேங்கையைப்போன்று அவர்களைப் பிறிட்டுக் கிழிக்கும்.
24உன் உடைமைகளைச்சுற்றி முள் வேலியிடு; உன் வெள்ளியையும் பொன்னையையும் பூட்டிவை.
25உன் சொற்களை நிறுத்துப் பார்க்கத் துலாக் கோலையும் எடைக்கற்களையும் செய்துகொள்; உன் வாய்க்குக் கதவு ஒன்று செய்து அதைத் தாழிடு.
26நாவால் தவறாதபடி எச்சரிக்கையாய் இரு; இல்லையேல், உனக்காய்ப் பதுங்கியிருப்போர்முன் நீ வீழ்ச்சியுறுவாய்.

28:2 மத் 6:14; மாற் 11:25. 28:9 நீமொ 6:12, 14, 19. 28:12 1 யாக் 3:10. 28:13-26 யாக் 3:5-12.
28:14 மூன்றாவது நாக்கு என்றால் ‘புறங்கூறுதல்’ ஆகும்.